திருக்குறள்

பை பை துபாய்!

மாயவரத்தைச் சேர்ந்தவர் முத்து. கடந்த ஆண்டில் துபாயில் கட்டடம் கட்டும் வேலை கிடைத்தவுடன் சந்தோஷத்தில் குதித்தார். 'இனி கஷ்டமில்லாமல் கொஞ்சம் காசு சேர்க்கலாமே..!' என்பதுதான் அவருடைய சந்தோஷத்துக்கான காரணம். மனைவியின் நகைகள் அத்தனையும் அடமானம் வைத்து துபாய்க்கு ஓடினார். இன்று... அவருக்குக் கிடைத்த வேலை சில மாதங்களில் பறிபோக, மீண்டும் மாயவரத்துக்கே திரும்பியாக வேண்டிய கட்டாயம். ''இந்த வேலையை நம்பி 85 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கிச் செலவழிச்சு வந்திருக்கேன். இப்போ கையில் வெறும் பத்தாயிரம் ரூபாய்தான் இருக்கு. எந்த முகத்தை வச்சு ஊருக்குத் திரும்புறதுனு தெரியல. ஏன்தான் இங்கு வந்தோம்னு இருக்கு!'' என்று புலம்பித் தீர்க்கிறார் முத்து.

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரவி. கட்டடம் கட்டப் பயன்படுத்தப்படும் லிஃப்ட்டுகளை இயக்குவதில் கில்லாடி. இரண்டு மாதங்களுக்கு முன்பு கேரளாவில் உள்ள ஒரு நிறுவனம் 300 பேரைக் கும்பலாக வேலைக்குக் கூட்டிக்கொண்டு துபாய் போனது. சரியாக அறுபது நாள்கூட முடியவில்லை. அதற்குள் 150 பேரை மீண்டும் கேரளாவுக்கே திருப்பி அனுப்பிவிட்டது அந்த நிறுவனம். அந்த நூற்றைம்பது பேரில் ரவியும் ஒருவர். ''புதுசா கிடைச்ச வேலையை நம்பி பத்து வருஷமா வேலை பார்த்த கம்பெனியை விட்டுட்டு வந்துட்டேன். இப்பத் திரும்பவும் வேலை தேடணுமேனு நெனைச்சாலே வேதனையா இருக்கு!'' - வெறுப்பின் உச்சத்தில் வேதனையைக் கொட்டுகிறார் ரவி.
முத்துவும் ரவியும் உதாரணங்கள்தான். இவர்களைப் போல துபாய் முழுக்க பல லட்சம் இந்தியர்கள், 'இன்று வேலை போகுமோ, நாளை போகுமோ' என்று தெரியாமல் திகிலடித்துப் போய் இருக்கிறார்கள்.

என்னவானது துபாய்க்கு? சில மாதங்களுக்கு முன்பு வரை, வந்தாரை எல்லாம் வாழவைத்து, பூமியின் சொர்க்கபுரியாக விளங்கிய அந்த ஊருக்கு இன்று புதிதாக அப்படி என்னதான் சிக்கல் வந்துவிட்டது?

அமெரிக்காவில் உருவான பொருளாதார நெருக்கடி என்கிற சுனாமி உலகின் பல்வேறு நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் துபாய்தான் முன்னணியில் நின்றது. மற்ற நாடுகளில் ஏற்பட்ட பாதிப்பைக் காட்டிலும் அங்கே ஏற்பட்ட பாதிப்பு மிக அதிகம்.


துபாய் என்றதும் நம் எல்லோருக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது அதன் படாடோபமான சிங்காரம், வானத்தைத் தொடும் கட்டடங்கள், மெகா மால்கள், திகட்டாத சுற்றுலாத் தலங்கள்தான். இதனால்தான் ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள ஏழு எமிரேட்டுகளில் துபாய் மிகவும் பிரபலமாக இருக்கிறது.

அங்கே முழுக்க கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பாலைவனம்தான். என்றாலும் அதைக்கூட பசுஞ்சோலையாக மாற்ற முடிந்தது எனில் சுற்றுலா மூலம் அந்த நாட்டுக்குக் கிடைத்த மிகப்பெரிய வருமானம்தான். சுற்றியுள்ள நாடுகள் கச்சா எண்ணெய் வளமிக்கவை. ஒரு நாளைக்கு பல லட்சம் பேரல் கச்சா எண்ணெயை பூமியில் இருந்து உறிஞ்சி எடுக்கும் திறமை கொண்டவை. இருந்தாலும் துபாயைப் பொறுத்தவரை அங்கு சொல்லிக்கொள்ளும்படி கச்சா எண்ணெய் கிடைப்பதில்லை. பின் எப்படித்தான் முன்னேறுவது என்று யோசித்த அந்நாட்டு அரசாங்கம், மிகப்பெரிய அளவில் பொருளாதாரச் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தது. தங்களை நோக்கி பெரிய அளவில் முதலீடு தேடிவரும்படி செய்தது. இதன்மூலமாக அந்த அரசாங்கத்துக்கு நிறைய வருமானம் கிடைத்தது.


உதாரணமாக, ரியல் எஸ்டேட் மற்றும் கட்டடங்கள் கட்டுவது மூலமாகக் கிடைக்கும் வருமானம் சுமார் 22 சதவிகிதத்துக்கும் அதிகம். வர்த்தகத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் 16 சதவிகிதத்துக்கும் மேல். பல்வேறு நிதிச்சேவைகளின் மூலமாகக் கிடைக்கும் வருமானம் 11 சதவிகிதம். உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக துபாயின் மேற்சொன்ன முக்கியத் துறைகள் அனைத்தின் மீதும் பலமான அடி விழ, முழி பிதுங்கி நிற்கிறது.

பொருளாதார நெருக்கடியால் இந்நாடு எந்த அளவுக்கு வீழ்ச்சி அடைந்திருக்கிறது என்பதற்கு ஒரு சிறிய உதாரணம் அதன் ஜி.டிபி. வீழ்ச்சி. 2008-ல் ஜி.டி.பி. சுமார் 10 சதவிகிதமாக இருந்தது. 2009-ல் அது கணிசமாகக் குறையும் என்ற கணிப்பு வெளியாகி இருக்கிறது. (ஒன்பது சதவிகித ஜி.டி.பி-யைத் தொட்ட நாம், இன்று 5 சதவிகிதத்தை ஒட்டி இருப்பதே பெரிய சாதனைதான்!)

இந்த வீழ்ச்சிக்கு முக்கியமான காரணம், துபாயில் அசுர வேகத்தில் நடந்துவந்த கட்டுமானப் பணிகள் அனைத்தும் அதிரடியாக முடிவுக்கு வந்ததுதான். நம் நாட்டில் கடலில் ஒரு பாலத்தைப் போட்டாலே பெரிய விஷயமாகப் பேசுகிறோம். ஆனால், அங்கே கடலில் மண்ணைக் கொட்டி ஐந்து பெரிய தீவுகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இப்படி உருவாக்கப்படும் 'பாம் ஜுமைரா' என்ற இந்தத் தீவு உலகின் 'எட்டாவது அதிசயம்' என்று சொன்னார்கள். ஆனால் இப்போது அதைவிட பெரிய தீவுகளை உருவாக்கி வருகிறார்கள். இதுவரை பாம் ஜுமைரா புராஜெக்ட் மட்டுமே முடிந்திருக்கிறது. மற்ற நான்கு தீவுகளை அமைக்கும் பணி அப்படியே அரைகுறையாக நிற்கிறது.
'நக்கீல் கார்ப்பரேஷன்' என்ற நிறுவனம்தான் இந்த ஐந்து தீவுகளையும் 38 ஆயிரம் மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 1,82,400 கோடி ரூபாய்) செலவில் அமைத்து வந்தது. பொருளாதார நெருக்கடி காரணமாக இந்தத் தீவுகளை அமைக்கும் பணி தற்போது அப்படியே நிறுத்தப்பட்டுவிட்டது. இதைப்போல மொத்தமாக 76 ஆயிரம் மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 3,64,800 கோடி ரூபாய்) மதிப்புக்கான கட்டடப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. (பார்க்க: மேலே உள்ள அட்டவணை)
கட்டடம் கட்டும் வேலை மிகப்பெரிய அளவில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால் வேலை இழந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையும் மிக மிக அதிகம். 2008 அக்டோபர் முதல் மார்ச் 2009 வரை துபாய் அரசாங்கம் 6.62 லட்சம் வெளிநாட்டவருக்கு அனுமதி கொடுத்தது. ஆனால், கடந்த சில மாதங்களில் சுமார் 4 லட்சம் பேரின் பர்மிட்டை கேன்சல் செய்திருப்பதாக அந்த நாட்டின் அமைச்சரே சொல்லி இருக்கிறார். துபாயில் பள்ளிகள் மார்ச் மாதத்தில் முழுஆண்டுத் தேர்வு நடக்கும். கடந்த ஏப்ரல் மாதத்தில் சுமார் பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் தங்கள் குழந்தைகளுக்கு டி.சி. கேட்டு விண்ணப்பித்திருக்கிறார்களாம். அந்நாட்டின் வரலாற்றிலேயே இப்படி ஒரு விஷயம் நடந்ததே இல்லை என்கிறார்கள்

வெளிநாடுகளிலிருந்து இந்நாட்டுக்கு வந்த தொழி லாளர்களில் இந்தியர்களின் எண்ணிக்கைதான் அதிகம். எனவே நம்மவர்கள்தான் மிக அதிக அளவில் வேலை இழந்திருக்கிறார்கள். இந்த வேலையிழப்பின் காரணமாக நகரத்தின் மக்கள் தொகையே பெருமளவில் குறைந்திருக்கிறதாம். 2008-ல் மக்கள் தொகை சுமார் 1.79 மில்லியனாக இருந்தது. இதுவே இந்த ஆண்டு 1.49 மில்லியனாகக் குறைந்துவிட்டதாம்.
கட்டடம் கட்டும் வேலைகள் சுணங்கியதற்குக் காரணம், ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்ட சரிவுதான். பல இடங்களில் கோடி கோடியாகக் கொடுத்து வாங்கிய கட்டடங்களை இன்று பாதி விலைக்குக்கூட விற்க முடியாமல் தவிக்கும் அளவுக்கு ரியல் எஸ்டேட் விலை வீழ்ச்சி அடைந்திருக்கிறது. துபாயின் முக்கியமான பகுதியில் 4 மில்லியன் திர்ஹாம் (இந்திய மதிப்பில் ஒரு திர்ஹாம் சுமார் 13 ரூபாய்) கொடுத்து வாங்கிய கட்டடங்கள் இன்று பாதி விலைக்குக்கூடப் போவதில்லையாம். கட்டடங்களின் விலை மட்டுமல்ல, வீடு மற்றும் அலுவலகங்களுக்கான வாடகையும் ஏகத்துக்குக் குறைந்திருக்கிறது. ஓர் உதாரணத்துக்கு இந்திய மதிப்பில் கணக்குச் சொல்வதாக இருந்தால் ஓராண்டுக்கு முன்பு 20 ஆயிரம் ரூபாய்க்கு வாடகைக்குப் போன வீடுகள் இன்று வெறும் 13 ஆயிரத்துக்குக் கூட கேட்க ஆளில்லாமல் கிடக்கின்றன.

ரியல் எஸ்டேட் மட்டுமல்ல, புதிதாக அங்கு கம்பெனிகளைத் தொடங்குகிறவர்களின் எண்ணிக்கையும் பெருமளவில் குறைந்திருக்கிறது. ''துபாயில் வரி என்கிற பேச்சே இல்லை. அங்கு ஒரு கம்பெனியை ஆரம்பிக்க வேண்டுமென்றால் அரசிடமிருந்து ஒரு லைசென்ஸ் பெறவேண்டும். இந்த லைசென்ஸை நம்மூரில் ஆயிரம் ரூபாய் செலவழித்தால் வாங்கிவிடலாம். ஆனால், அங்கே லைசென்ஸ் வாங்கவேண்டுமென்றால் சுமார் லட்ச ரூபாய் செலவாகும். தவிர, ஒவ்வொரு ஆண்டும் இந்த லைசென்ஸைப் புதுப்பிக்க ஒரு லட்ச ரூபாய் செலவழிக்க வேண்டும். இப்படி பல வழிகளில் அரசாங்கத்துக்கு பல கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது. ஆனால், இப்போது பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கே கம்பெனி ஆரம்பிக்க யாரும் முன்வராததால் அரசாங்க வருமானம் பெருமளவில் குறைந்திருக்கிறது'' என்கிறார் அங்கு கம்பெனி நடத்தி, இந்தியா திரும்பியிருக்கும் ஒருவர்.
சரி, துபாயில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி எப்போது சரியாகும்?
இந்தக் கேள்விக்கான சரியான பதில் யாரிடமும் இல்லை. அமெரிக்கா சரியானால் துபாயும் சரியாகும் என்று பலரும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு இன்னும் இரண்டு வருடம் ஆகலாம் என்கிறார்கள். ஆனால், அதுவரை துபாய் அரசாங்கம் தாக்குப் பிடிக்கவேண்டும். துபாயைச் சுற்றி எண்ணெய் வளமிக்க நேசநாடுகள் இருப்பதால் அதை அப்படியே விட்டுவிட மாட்டார்கள். எனவே ஃபீனிக்ஸ் பறவை போல அது மீண்டும் எழுந்துவரும் என்று நம்புவோமாக.

- ஏ.ஆர்.குமார்
பிஸினஸ் பக்கங்கள்!

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற