""மீண்டும் ஒரு முறை உலகத்தை வலம் வரப்போகிறேன்''’’-தன் விருப்பத்தை மைக்கேல் ஜாக்சன் சமீபத்தில்தான் வெளியிட்டிருந்தார். ஆனால், இயற்கையின் விருப்பம் வேறு மாதிரியாக இருந்திருக்கிறது. அந்த "அழகான ராட்சஷன்' இப்போது உயிரோடு இல்லை. மேற்கத்திய கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் பாப் இசையில் கறுப்பினத்தவரான ஓர் ஆப்ரோ- அமெரிக்கன் ஜொலிப்பதென்பது அத்தனை சுலபமல்ல. ஆனால், வெள்ளை அமெரிக்கர்கள் தன் பின்னால் திரளும்படி மயக்கும் இசையாலும் நடனத்தாலும் கலாச்சார புரட்சியை ஏற்படுத்தியவர் மைக்கேல் ஜாக்சன். அவரது பெயரைக் கேட்டதும் சுருள் சுருளாய் நெற்றியில் விழும் முடியுடன் கூடிய பெண்மை கலந்த முகமும், கால்களில் இயந்திரமோ மந்திரமோ இருக்கிறது என யோசிக்கவைக்கும் நடன அசைவுகளுமே இசை ரசிகர் களின் மனக்கண்ணில் தோன்றும். பெரும் புகழும் பெயரைக் கெடுக்கும் சர்ச்சைகளும் மைக்கேல் ஜாக்சனின் வாழ்வோடு பின்னிப் பிணைந்தவை.
அமெரிக்காவின் இண்டியானா மாநிலத்தில் உள்ள கேரி என்ற இடம்தான் கிடாரிஸ்ட்டாக இருந்த ஆப்ரோ-அமெரிக்கரான ஜோசப்பின் வசிப்பிடம். கேத்தரினை கல்யாணம் செய்துகொண்டபின், இந்த மியூசிக்கெல்லாம் சோறுபோடாது. ஒழுங்கா வேலையைப் பார் என்ற மனைவியின் அதட்டலுக்கு கட்டுப்பட்டு கிட்டாரை பரணில் போட்டுவிட்டவர் ஜோசப்.தனக்கு வாய்க்காமல் போன இசைப்பயணம் தனது 9 குழந்தைகளுக்கும் வாய்க்க வேண்டும் என விரும்பினார். ஒன்பது பேரில் ஏழாவது குழந்தைதான் மைக்கேல் ஜாக்சன். 1959ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29-ல் பிறந்தவர்.
சின்ன வயதில் அப்பாவிடம் சரியாக உதை வாங்குவது ஜாக்சனின் வழக்கம். எதற்கெடுத்தாலும் பிள்ளைகளை அடிப்பதும், காலைப்பிடித்து தலைகீழாகத் தூக்கிச் சுழற்றுவதும் அப்பாவின் பழக்கம். இதனால் பெற்றோர் மீது பெரியளவில் பாசம் காட்டாத ஜாக்சன், இசையில் மட்டும் கவனம் செலுத்தினான். 5 வயதில் ஒரு கிறிஸ்துமஸ் விழாவில் ஜாக்சன் பாட, ஒரு தேர்ந்த பாப் பாடகர் போல இந்தப் பொடியன் இத்தனைத் துல்லியமாகப் பாடுகிறானே என எல்லோருக்கும் ஆச்சரியம். ஜாக்சன் சகோதரர்கள் இணைந்து நடத்திய இசை-நடன நிகழ்ச்சிகள் அப்பகுதியில் பிரபலமாயின. சகோதரிகளும் இதில் கலந்து கொள்வார்கள்
10 வயதில் தனி ஆளாக மேடையில் கலக்கும் அளவுக்கு ஜாக்சனின் திறமைகள் பாப் உலகை மிரள வைக்க, 1979-ல் "ஆஃப் த வால்' என்ற தன் முதல் இசை ஆல்பத்தை வெளியிட்டார் மைக்கேல் ஜாக்சன். அதிலிருந்தே புகழும் சர்ச்சைகளும் வளர்ந்து கொண்டே இருந்தன. ஒரு நடன நிகழ்ச்சியின்போது, அவர் கீழே விழுந்ததால் மூக்கில் அடிபட்டது. அதை சரிசெய்ய பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்ட ஜாக்சனுக்கு, தன் முகத்தை சீரமைத்துக் கொள்ள பிளாஸ்டிக் சர்ஜரி மீது ஆர்வம் ஏற்பட்டது. 4 பிளாஸ்டிக் சர்ஜரிகளையும் வேறு பல ஆபரேஷன் களையும் செய்துகொண்ட மைக்கேல் ஜாக்சனின் முகமும் நிறமும் மாற்றம் பெற்றது. ஒபாமாவைப் போன்ற ஆப்ரோ-அமெரிக்கரான ஜாக்சன், ஜார்ஜ்புஷ் போன்ற வெள்ளைக்காரர்கள் போல தன் நிறத்தை மாற்றிக்கொண்டார்.
எனக்குத் தோலில் ஒரு வித நோய் இருக்கிறது. அதனால்தான் இந்த நிற மாற்றம் என ஜாக்சன் சத்தியமடித்துச் சொன்னாலும் ரசிகர்கள் நம்பவில்லை. கறுப்பு நிறத்தில் இருப்பதை ஜாக்சன் விரும்பாததால், ஆக்ஸிஜன் சேம்பர் ஒன்றை உருவாக்கி அதற்குள் உட்கார்ந்து கொண்டு நிறத்தை மாற்றுகிறார் என்றும் பலவிதமான நவீன சிகிச்சைகளை செய்து கொள்கிறார் என்றும் ரசிகர்களிடம் பேச்சு எழுந்தது. நிறத்தை மாற்றிக்கொள்ள நினைப்பது ஒரு வித மனநிலை என்றனர் ஜாக்சனின் டாக்டர்கள்.
இந்த சர்ச்சைகள் ஒருபுறமிருக்க, இசையிலும் நடனத்திலும் எவரும் தொடமுடியாத சிகரங்களில் அவர் ஏறிக்கொண்டேயிருந்தார். 1982-ல் வெளியான மைக்கேல் ஜாக்சனின் "திரில்லர் ஆல்பம்' அவரை உலக சூப்பர் ஸ்டாராக்கியது. வெளியிட வெளியிட விற்றுக் கொண்டே இருந்தன ஆல்ப பிரதிகள். பாப் பாடல் தர வரிசைப் பட்டியலில் ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக "திரில்லர்' ஆல்பமே முதலிடத்தில் நங்கூரம் பாய்ச்சி யிருந்தது. இசையுலகின் பெருமைக்குரிய விருதான "கிராமி அவார்டு'களை வாங்கிக் குவித்தது. ஓர் ஆல்பத்தின் விற்பனைத் தொகையில் 37 சதவீதத்தை ராயல்டியாகப் பெற்ற பெருமையும் ஜாக்சனுக்கே கிடைத்தது. "திரில்லர்' ஆல்பத்தின் மெகா வெற்றியால் ஜாக்சனின் நேரடி நிகழ்ச்சிகளில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் குவிய ஆரம்பித்தனர். எந்த நாட்டுக்கு அவர் சென்றாலும் அவரை ரசிகர்களின் அன்புப்பிடியிலிருந்து பாதுகாப்பது அந்த நாட்டு போலீசாருக்கு பெரும் சவாலானது.
1983-ல் ஒரு நேரடி நிகழ்ச்சி. டி.வியில் ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சியை 47 மில்லியன் மக்கள் பார்த்துக் கொண்டி ருந்தனர். நடனத்தில் இதுவரை இல்லாத ஒரு மிரட்சியை அன்றுதான் ஏற்படுத்தினார் ஜாக்சன். "மூன்வாக்' எனப்படும் நடன அசைவுதான் அது. பாதங்கள் வழுக்கிக் கொண்டு செல்வதுபோன்ற அசைவு அது. ஜாக்சன் அன்று முதன்முதலாக அந்த நடன அசைவை செய்துகாட்ட அத்தனை மில்லியன் ரசிகர்களும் மெய்சிலிர்த்தனர்.
25 ஆண்டுகள் கழித்தும் "மூன்வாக்' நடன அசைவு நம்மூர் பிரபுதேவா வரை பல நடனக் கலைஞர்களாலும் பின்பற்றப்பட்டு வருகிறது. நடனக்கலை வல்லுநர்களோ, மிகக் குறைந்த நேர இடைவெளியில் கால்களை விளை யாடவைக்கும் இந்த நடன அசைவு "ஜாக்ச னின் கலைநுணுக்க அறிவுக்கும் திறமைக்குமான சான்று' என்கிறார்கள். மைக்கேல் ஜாக்சனின் "ரோபோ' நடன அசைவும் இதேபோல புகழ் பெற்றது.
புகழ் வந்தால் உடனே சர்ச்சைகளும் தொடர்வது ஜாக்சனுக்கு வாடிக்கையாகி விட்டது. முதல் மனைவி லிசா மேரியுடன் குடித்தனம் நடத்திவிட்டு விவாகரத்து பெற்ற அவர், 1997ல் டெபோரா என்ற நர்ஸை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இரண்டு குழந்தைகள் பிறந்ததும் அவரையும் விவாகரத்து செய்த ஜாக்சனுக்கு அதன்பிறகு, மூன்றாவதாக ஒரு குழந்தை பிறந்தது. யார் இதற்கு அம்மா? என்று பத்திரிகை யாளர்கள் கேட்டார்கள். அப்பா நான்தான். அம்மாவை சொல்ல முடியாது. இது செயற்கை கருத்தரிப்பின் மூலம் பிறந்த குழந்தை என்றார் ஜாக்சன். "குழந்தைகள் மீது மைக்கேல் ஜாக்சனுக்கு கொள்ளைப்பிரியம்' என தலைப்புச் செய்திகள் வெளிவந்தன.
பாடுவது, ஆடுவது என்ப துடன் பாட்டெழுதவும் செய்த ஜாக்சன், ஆப்பிரிக்காவிலும் அமெரிக்காவிலும் உள்ள கறுப்பின ஏழைக்குழந்தைகளின் நலனுக்காக ஒரு அறக்கட்டளை யையும் ஆரம்பித்து, தனக்கு கொட்டிய பில்லியன்களிலிருந்து தாராளமாகச் செலவு செய்தார். சிறுவர்கள் மீது ஜாக்சனுக்கு பிரியம் என்றன ஊடகங்கள். அது வேறு மாதிரியான பிரியம் என்பது சில நாட்களில் அம்பலமானது. சிறுவர்களை பாலுறவுக்குப் பயன்படுத்தினார் என்ற பகீர் குற்றச்சாட்டு ஜாக்சன் மீது விழுந்தது. பணத் தைக் கொட்டி, கோர்ட்டுக்கு வெளியேதான் இந்தப் பிரச் சினையை தீர்த்தார் ஜாக்சன். சிறுவர்களுடனான பழக்கத் திற்கு அவர் அடிமையானவர் என அவரது தங்கையே கருத்து தெரிவிக்க, ஜாக்சனை சர்ச்சை வளையங்கள் நெருக்கின. ஆப்ரோ-அமெரிக்கனின் புகழை சரிக்க நேர்ந்த சதி இது என நிற வெறி எதிர்ப்பாளர்கள் எழுதினர்.
பாலியல் குற்றச்சாட்டு, காலமாற்றம் இவற்றால் பாப் உலகிலிருந்து மெல்ல மெல்ல ஒதுங்கினார் மைக்கேல் ஜாக்சன். பல்லாயிரக்கணக்கான மக்கள் திரள பாடி ஆடியவர், தனிமையில் தன் நாட்களைக் கழித்தார். அதுவே ஜாக்சனுக்கு விருப்பமானதாகவும் இருந்தது. அவருக்குத் தோல் புற்றுநோய் ஏற்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாயின.
இந்த 2009-ம் ஆண்டில் உலகின் பல நாடுகளிலும் மீண்டும் நிகழ்ச்சிகள் நடத்தப் போகிறேன் என அறிவித்தார் ஜாக்சன். உடனடியாக டிக்கெட்டுகள் புக் ஆயின ஆனால், ஜாக்சனின் கால்களுக்கு காலம் இடம் தரவில்லை. ஜூன் 26-ந் தேதி அதிகாலையில் மாரடைப்பு ஏற்பட்டு மைக்கேல் ஜாக்சனின் உயிர் பிரிந்தது.
உலகெங்கும் இன்றள வும் அதிக அளவில் விற்கும் இசை ஆல்பங்கள் அவ ருடையதுதான். 13 "கிராமி' விருதுகள், பல மில்லியன் ஆல்ப பிரதிகள் விற்பனை, பில்லியனில் வருமானம், நாடு- மொழி-இனம் கடந்த கோடிக் கணக்கான ரசிகர்கள் என கறுப் பினத்தில் பிறந்து கலையுலகில் இதுவரை யாரும் பெறாத புக ழையும் பணத்தையும் சம்பா தித்தவர் மைக்கேல் ஜாக்சன். உலகெங்கும் வாழும் கலைஞர் கள் அவரிடம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. கற்றுக் கொள்ளக்கூடாததும்தான்.
தொகுப்பு : லெனின்
நன்றி - நக்கீரன்