திருக்குறள்

ஜெனரல் மோட்டார்ஸ்... சரிந்த சாம்ராஜ்யம்!

''ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு எது உகந்ததாக இருக்கிறதோ, அதுதான் அமெரிக்காவுக்கே உகந்ததாக இருக்கும்!''
இப்படித்தான் அந்த நிறுவனத்தைப் பற்றிப் பெருமையோடு சொல்லிவந்தார்கள் அமெரிக்கர்கள். 'ஜி.எம்.' எனும் அந்த இரண்டு எழுத்து மந்திரம்தான் அமெரிக்க முதலாளித்துவத்தின் பெருமைமிகு அடையாளமாக இதுவரை இருந்து வந்தது. ஆனால், அப்பேர்ப்பட்ட ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் இன்றைக்குத் திவால் ஆகியிருக்கிறது. திவாலாகும் கம்பெனிகளைப் பாதுகாப்பதற்காக என்றே அமெரிக்க அரசாங்கம் வடிவமைத்துள்ள 11-வது சாப்டரின் கீழ் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் தன்னுடைய திவால் நோட்டீஸைத் தாக்கல் செய்துள்ளது.
எதிர்பார்க்கப்பட்ட விஷயம்தான் என்றாலும், இந்த வீழ்ச்சி பல பாடங்களைக் கற்றுக்கொடுத்திருக்கிறது. இந்த நிறுவனம் வீழ்ந்தது எப்படி? யார் இதற்குக் காரணம்? அமெரிக்க அரசாங்கத்தின் ஆதரவு ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்துக்குக் கிடைத்திருப்பதால் அது மீண்டும் புத்துயிர் பெறுமா? உலகப் பொருளாதாரம் பற்றி கவலைப்படுகிற அத்தனை பேரின் மனதிலும் நிழலாடும் கேள்விகள் இவை. இவற்றுக்கான பதில் என்னவென்று பார்ப்போம்.
அது ஒரு பொற்காலம்!

1908, செப்டம்பர், 27-ம் தேதி உதயமானது ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம். அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள டெட்ராய்ட் என்னுமிடத்தில் சிறிய அளவில் தனது தொழிற்சாலையைத் தொடங்கியது. பெட்ரோல் மூலம் காரை ஓட்டமுடியும் என்கிற உண்மை அப்போதுதான் நிரூபணமாகி இருந்ததால், பணம் படைத்தவர்கள் அத்தனை பேரும் பயன்படுத்துகிற மாதிரி அதிக எண்ணிக்கையில் கார்களை உற்பத்தி செய்யவேண்டும் என்று பல நிறுவனங்கள் போட்டி போட்டன. எடுத்த எடுப்பிலேயே கார் தயாரிப்பில் தன் முத்திரையைப் பதித்தது ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம். அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கு கார் தயாரிப்பில் நம்பர் ஒன் நிறுவனமாகக் கொடிகட்டிப் பறந்தது.
கெடிலாக், செவர்லே, ஜி.எம்.சி., ப்யூக், போன்டியாக், சாட்டர்ன், எம் ஜெனரல், ஜி.எம்.தாவூ என ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் பிராண்ட்கள் அமெரிக்க மக்களைக் கட்டிப் போட்டு வைத்திருந்தன. மக்கள் கண்ணை மூடிக்கொண்டு இந்நிறுவனத்தின் கார்களை வாங்கினார்கள். 1931-ல் தொடங்கி 2007 வரை உலகிலேயே மிக அதிகமான கார்களை விற்பனை செய்து, நம்பர் ஒன் கம்பெனி என்கிற பெருமையை 77 ஆண்டுகள் வரை வைத்திருந்த ஒரே நிறுவனம் ஜெனரல் மோட்டார்ஸ் மட்டும்தான். 2001-ல் அமெரிக்கா முழுவதும் விற்பனையான இந்நிறுவன கார்களின் எண்ணிக்கை சுமார் 49,04,015.


கார்கள் மட்டுமல்ல... ஜி.எம். நிறுவனத்துக்குச் சொந்தமான தொழிற்சாலைகளும் உலகம் முழுக்க உண்டு. இந்தியா, சீனா உள்பட 34 நாடுகளில் இந்த நிறுவனம் கார் உற்பத்தி செய்கிறது. 140 நாடுகளில் கார் விற்பனை செய்துவருகிறது. உலகம் முழுக்க சுமார் 2.5 லட்சம் ஊழியர்கள் வேலை பார்க்கின்றனர்.



கடந்த ஆண்டுதான் தன்னுடைய நூற்றாண்டு விழாவைக் கோலாகலமாகக் கொண்டாடியது ஜி.எம். ''நூறு ஆண்டுகள் என்ன, இன்னும் நூறு ஆண்டுகள்கூட இந்த நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்திச் செல்வோம்'' என்று பெருமை பொங்க நூற்றாண்டு விழாவில் பேசினார் முதன்மை நிர்வாக அதிகாரி ரிக் வாக்னர்.


அடிப்படையைத் தகர்த்த அசட்டை!

1970 வரை கார் தயாரிப்பில் போட்டி ஏதுமில்லாமல் தனிக்காட்டு ராஜாவாக இருந்து வந்தது ஜி.எம். நிறுவனம். ஆனால், அளவுக்கதிகமான கார்களை உற்பத்தி செய்துவந்த நிலையில் அதன் தரத்தில் கவனம் செலுத்த மறந்துவிட்டது. மற்ற நிறுவனங்கள் தயாரிக்கும் கார்கள் தரமாக இருக்க, ஜி.எம்-மின் கார் அந்த அளவுக்கு இல்லை. குறிப்பாக, 70-களின் ஆரம்பத்தில் ஜப்பான் நாட்டு கார் கம்பெனிகள் ஜி.எம்-க்கு மிகப் பெரிய போட்டியைக் கொடுத்தன. இந்தப் போட்டியை எல்லாம் ஜி.எம். ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. உலகத்தின் எந்த நிறுவனத்தால் நமக்கு என்ன கஷ்டம் வந்துவிடப் போகிறது என்று நினைத்ததன் விளைவுதான் இந்த அசட்டை!
டீலர்களைக் கவனிக்கத் தவறினால்...?

எந்தப் பொருளைத் தயார் செய்து விற்பனை செய்வதாக இருந்தாலும் அந்தப் பொருளை விற்கும் டீலர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை காது கொடுத்துக் கேட்கவேண்டியது முக்கியம். ஜி.எம். நிறுவனத்தைப் பொறுத்தவரை டீலர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை ஒரு போதும் காது கொடுத்துக் கேட்டதே இல்லையாம். அப்படிக் கவனிக்கத் தவறியதன் விளைவுதான் மஞ்சள் கடுதாசி!
திணற வைத்த உற்பத்தி!

ஒருகட்டத்தில் அளவுக்கதிகமான கார் உற்பத்தியே, அந்நிறுவனத்தின் எதிரியாக ஆகிப்போனது. அடுத்தடுத்து கார்களை உற்பத்தி செய்து வெளியே தள்ளவேண்டும் என்பதே அதன் ஒரே நோக்கமாகிப் போனதே ஒழிய, அந்த காரை மக்கள் விரும்புகிறார்களா, இல்லையா என்பதை கவனிக்கத் தவறிவிட்டது. உதாரணமாக, ஜப்பான் நாட்டு கார்களை இளைஞர்கள் வாங்கிக் கொண்டிருக்க, ஜி.எம். நிறுவனத்தின் காரை 45 வயதுக்கு மேற்பட்டவர்களே வாங்கினார்கள். அதேசமயம் பெருமளவு உற்பத்தி லாபத்தைக் கணிசமாகக் குறைத்தது. உற்பத்தி செய்ததை விற்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் தள்ளுபடியும் அதிகமாக இருந்ததால் நிறுவனத்தின் லாபம் கண்ணுக்குத் தெரியாமல் குறைந்துகொண்டே வந்தது.


வேட்டு வைத்த எரிபொருள் விலை!

உலக அளவில் கச்சா எண்ணெயின் விலை குறைவாக இருந்தபோது ஜி.எம். நிறுவனத்தின் கார்கள் அமோகமாக விற்பனையானது. ஆனால், கச்சா எண்ணெயின் விலை கிடுகிடுவென உயர ஆரம்பித்தபோது, பெட்ரோலை அதிகம் குடிக்காத கார்கள் வேண்டுமென்று அமெரிக்க மக்கள் நினைக்க ஆரம்பித்தனர். ஆனால், ஜி.எம். நிறுவனத்துக்கு அந்த நினைப்பே இல்லை. ஜப்பான் நாட்டு கார் கம்பெனியான 'டொயோட்டா' இதை முக்கியமான விஷயமாகப் பார்த்தது. குறைந்த அளவு பெட்ரோலில் நீண்டதூரம் செல்லக்கூடிய கார்களைத் தயாரித்து விற்பதில் அதிக அக்கறை காட்டியது.
ஒவ்வொரு பிராண்டிலும் ஒரு தவறு!

ஜி.எம். நிறுவனத்தின் கார்கள் புகழ் பெற்றவை என்றாலும், அது தயார் செய்த ஒவ்வொரு பிராண்டிலும் ஒரு மெகா தவறு இருந்தது. செவர்லே கோர்வயர் என்கிற பிராண்டில் ரியர் சஸ்பென்ஷன் திருப்திகரமாக இல்லை. செவர்லே வேகா என்கிற சிறிய அளவிலான கார் இன்ஜின் சரியாக வடிவமைக்கப்படாததால் நீண்டதூரம் செல்லத் திணறியது. இப்படி ஒவ்வொரு காரிலும் ஒரு பிரச்னை இருந்ததை ஜி.எம். நிறுவனத்தால் கடைசிவரை சரிசெய்ய முடியவே இல்லை.
காணாமல் போகச் செய்த காந்தி கணக்கு!

'கடந்த சில ஆண்டுகளாக ஜி.எம். நிறுவனத்தின் கணக்குவழக்குகள் எழுதப்பட்டு வந்தவிதம் முழுக்க முழுக்கத் தவறு' என்கிறார்கள் முக்கியப் பொறுப்பில் இருந்த அதிகாரிகள். கம்பெனியின் கணக்குகளை எப்படி எழுதவேண்டும் என்பது கணக்குத் துறையைச் சேர்ந்த அதிகாரிகளுக்குப் புரியவில்லை. எப்படியோ வருமானம் வருகிறது, கணக்கைச் சரியாக எழுதவில்லை என்றால் யார் கேட்கப் போகிறார்கள் என்கிற மாதிரிதான் அவர்கள் நடவடிக்கை இருந்திருக்கிறது.

மலைக்க வைக்கும் மருத்துவச் செலவு!


ஜி.எம். நிறுவனத்தில் வேலை பார்க்கும் பல லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு ஆகும் மருத்துவச் செலவு மிகப்பெரிய சுமையாக மாறிப்போனது. தவிர, ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு பென்ஷனாக வழங்கப்பட வேண்டிய பணத்தின் அளவும் கம்பெனியின் கழுத்தை நெரிக்க ஆரம்பித்தது. ஜி.எம். நிறுவனத்தின் லாபமெல்லாம் இந்த இரண்டுக்குமே செலவாகிப் போக, மருத்துவச் செலவைக் குறைக்க, ஜி.எம். நிர்வாகம் எவ்வளவோ முயற்சி செய்தது. ஆனால், ஐக்கிய ஆட்டோமொபைல்ஸ் ஊழியர்கள் சங்கம் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததால் எப்படிச் செலவைக் குறைப்பது என்று தெரியாமல் தவித்தது.
இப்படி பல பிரச்னைகள் ஒன்று சேர்ந்து கால்களைச் சுற்றிக்கொள்ள, எப்படியாவது தப்பிப் பிழைத்துவிட வேண்டுமென்று படாதபாடுபட்டது ஜி.எம். அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்ற ஒபாமாவுக்கும் ஜி.எம். நிறுவனத்தை அப்படியே விட்டுவிட விருப்பமில்லை. கொஞ்சம் பணம் செலவானாலும் பரவாயில்லை, அதை மீண்டும் உயிர்பிழைக்க வைக்க வேண்டுமென்றே அவர் விரும்பினார். கிட்டத்தட்ட 30 பில்லியன் அமெரிக்க டாலர் பணத்தைக் கொடுத்து மீண்டும் உயிர் கொடுக்கத் திட்டமிட்டார். அவர் சொன்னபடி, கடந்த ஏப்ரல் 24-ம் தேதி 15.4 பில்லியன் டாலர் பணத்தை அமெரிக்க நிதித்துறை கொடுக்கவும் செய்தது. இதன்மூலம் ஜி.எம். நிறுவனம் திவால் ஆவதை இன்னும் ஒரு மூன்று மாத காலத்துக்குத் தள்ளிப் போடமுடியும். இடைப்பட்ட காலத்தில் எல்லாப் பிரச்னைகளையும் தீர்த்துவிடலாம் என்று திட்டமிட்டிருந்தது அமெரிக்க செனட்.

ஆனால், அளவுக்கதிகமான கடன் கழுத்தை நெரிக்க, மூச்சுவிட முடியாமல் திணறியது ஜி.எம். அந்த நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு 82.29 பில்லியன் டாலர். ஆனால், மொத்தக் கடன் 172.81 பில்லியன் டாலர். சொத்து ஒரு ரூபாய்... கடன் இரண்டு ரூபாய் என்றால் என்னதான் செய்யமுடியும்
அமெரிக்காவின் இன்னொரு மிகப் பெரிய கார் நிறுவனமான 'கிரிஸ்லர்'(chrysler) நிறுவனமும் ஏற்கெனவே மஞ்சள் கடுதாசியைக் கொடுத்துவிட்டது. ஏறக்குறைய திவாலாகிவிடும் என்று சொல்லப்பட்ட ஃபோர்ட் நிறுவனம் அமெரிக்க அரசாங்கத்தின் உதவியால் எப்படியோ தப்பித்துவிட்டது. ஆனால், ஜி.எம். மட்டும் இந்தச் சிக்கலில் மாட்டிக்கொண்டது

இப்போது திவால் நோட்டீஸ் கொடுத்தாலும் அமெரிக்க அரசாங்கத்தின் முழு ஆதரவு ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்துக்குக் கிடைக்கும் என்பதால் இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் மறுஅவதாரம் எடுத்து புயல் போலச் சீறிவரும் என்கிறார்கள். உண்மையில் ஜி.எம். நிறுவனம் பழைய பெருமையை அடையுமா, இல்லையா என்பது தெரியாது. ஆனால், அதன் வெற்றி 20-ம் நூற்றாண்டு முழுக்கப் பேசப்பட்டது போல, அதன் தோல்வியும் 21-ம் நூற்றாண்டு முழுக்கப் பேசப்படும் விஷயமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
- நன்றி
விகடன் குழுமம்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற