திருக்குறள்

பிறருக்கு வைத்தியம் சொல்வதில் நம்மவர்கள் கில்லாடிகள்...

பிறருக்கு வைத்தியம் சொல்வதில் நம்மவர்கள் கில்லாடிகள்! 'இதை பூசிக் கொள் தலைவலி வராது... வயிற்று வலிக்கு இதைத் தின்றால் போதுமே...' என்று ஆளாளுக்கு மருத்துவம் சொல்வார்கள்!

ஒருமுறை பீர்பாலும் அக்பரும் அரண்மனை நந்தவனத்தில் உலாவிக் கொண்டிருந்தனர். அப்போது, ''நமது நாட்டில் பெருவாரியான மக்கள் என்ன வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள்... விவசாயமா? நெசவா? வணிகமா?'' என்று கேட்டார் அக்பர்.

பளிச்சென்று பதில் சொன்னார் பீர்பால்:

''மருத்துவம்!''

அக்பர் திகைத்துப் போனார். ''என்ன உளறுகிறீர்?'' என்று பீர்பாலைக் கோபித்துக் கொண்டார்.

உடனே, ''மன்னியுங்கள்... எனக்கு சிறிது நாட்கள் அவகாசம் கொடுங்கள். தக்க தருணத்தில் எனது கருத்து உண்மை என்று நிரூபிக்கிறேன்!'' என்றார் பீர்பால்.
நாட்கள் கழிந்தன. இந்த விஷயத்தை மறந்தே போனார் அக்பர்

ஒரு நாள்... முக்கிய பிரச்னை குறித்து விவாதிக்க அமைச்சரவையைக் கூட்டினார் அக்பர். அனைவரும் வந்து சேர, பீர்பாலை மட்டும் காணோம்.
அவரை அழைத்து வர ஆள் அனுப்பப்பட்டது.

ஆனால், தலைவலி- ஜுரம் காரணமாக அவைக்கு வர இயலவில்லை என்று சொல்லியனுப்பினார் பீர்பால்.

''என்ன பெரிய தலைவலி! தைலம் தடவிக் கொண்டால் பறந்து விடாதா? சாக்குபோக்கு சொல்லாமல் பீர்பாலை உடனே அவைக்கு வரச் சொல்!'' என்று கண்டிப்புடன் ஆணை பிறப்பித்தார் அக்பர்.

சற்று நேரத்தில்... கனத்த கம்பளியால், தலையையும் உடலையும் சேர்த்துப் போர்த்தியபடி அரண்மனைக்குள் நுழைந்தார் பீர்பால்.

கவலையுடன் நலம் விசாரித்த காவல்காரன், ஜுரம் நீங்குவதற்குக் கைவைத்தியம் சொன்னான்.

மற்றொரு ஊழியர், 'சுக்கு சாப்பிட்டால் சரியாகப் போகும்' என்று அறிவுறுத்தினார்.

அரண்மனை சமையல்காரரோ, ''கண்டந்திப்பிலி ரசம் குடித்தால் சரியாகும்!'' என்று அறிவுறுத்தினார்.

அனைவரையும் பொறுமையாக சமாளித்தபடி மெள்ள அரசவை மண்டபத்துக்குள் நுழைந்தார் பீர்பால். அரசரை வணங்கக்கூட முடியாதபடி அவரின் உடல் நடுங்கியது!

அக்பர் பதறிப் போனார்.

''இந்த அளவுக்குக் காய்ச்சல் இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இதற்கு யுனானி வைத்தியத்தில் ஒரு மருந்து உண்டு'' என்றவர் சேவகன் ஒருவனை அழைத்து, குறிப்பிட்ட அந்த மருந்தைக் கொண்டுவரும்படி பணித்தார்.

சட்டென்று, போர்வையை விலக்கிய பீர்பால், கன கம்பீரமாக தனது இருக்கையில் அமர்ந்து கொண்டு, ''நூற்றி இருபத்தியன்று'' என்றார் சத்தமாக!

அக்பர் குழம்பினார். ''அது என்ன... நூற்றி இருபத்தியன்று?'' எனக் கேட்டார்.

புன்னகைத்த பீர்பால், ''இதுவரை, எனக்கு மருத்துவம் சொன்னவர்களின் எண்ணிக்கை!'' என்றார்.

''எனில்... காய்ச்சல் என்றது நாடகமா?''_ அக்பர்.

''ஆம் பிரபு! நான் வீட்டை விட்டுப் புறப் பட்டது முதல்... உழவர், வணிகர், நாவிதர், துணி துவைப்பவர், சமையல்காரர், நமது வாயிற் காவலர்கள்... என்று ஆளாளுக்கு ஒரு மருந்தை சிபாரிசு செய்தார்கள். அவர்கள்தான் தங்கள் தொழிலுடன் மருத்துவம் சொல்கிறார்கள் என்றால்,

நீங்களும் அப்படித்தான்! இப்போது சொல்லுங்கள்... நம் நாட்டில், பெரும்பாலானோரின் தொழில் மருத்துவம்தானே?!'' என்றார் பீர்பால்.

சட்டென்று பொறி தட்டியது அக்பருக்கு! பீர்பாலின் நாடகம் எதற்காக என்பதை உணர்ந்து கொண்டவர், வாய்விட்டுச் சிரித்தாராம்!

இது வேடிக்கையல்ல. இன்றும் நடைமுறையில் இருக்கும் வாடிக்கை!

வயிற்றுவலி என்று எவராவது வைத்தியம் பார்க்கப் புறப்பட்டால், ''இதுக்கு எதுக்கு டாக்டரைப் பார்க்கணும்? ஆறு மாசத்துக்கு முன்னாடி எனக்கும் இதே தொந்தரவுதான். அப்ப இந்த மருந்தைதான் கொடுத்தாரு. நீங்களும் இதையே சாப்பிடுங்க... எதுக்கு வெட்டிச் செலவு?'' என்று மருத்துவர்களாகவே மாறிவிடும் மகா ஜனங்கள் நிறைந்த நாடு இது.

இப்படி, ஆளாளுக்குத் தரும் மருத்துவத்தை எல்லாம் ஏற்றால் நம் உடல் நிலை என்னாவது? இது, ஆபத்துக்கு அச்சாரம் வைக்கும் வேலை! உடம்புக்கு முடியாவிட்டால், பொதுநல மருத்துவரை ஆலோசித்து மருந்து- மாத்திரைகள் ஏற்க வேண்டும். தேவைப்பட்டால், அவரது ஆலோசனைப்படி சிறப்பு மருத்துவரை நாடுவதும் அவசியம்.

'இதுவாகத்தான் இருக்கும்; சரியாகப் போகும்' என்று நாமாக முடிவு செய்வதும் மருந்து உட்கொள்வதும் நம் உயிருக்கே உலை வைக்கும் செயல்!

- சுகி சிவம் உரையிலிருந்து

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற