எவ்வளவு நினைத்தீர்கள்? ஐந்து, பத்து, ஐம்பது? விஞ்ஞானத்தைப் பற்றியும் ஆராய்ச்சியைப் பற்றியும் சிறிதாவது தெரிந்து வைத்திருப்பவர்கள் அதற்கும் மேலே செல்வது கடினம். ஆனால் ஒரே ஒரு விஞ்ஞானி 1,093 கண்டுபிடிப்புகளைச் செய்து அத்தனைக்கும் patents தன் பெயரில் வைத்திருந்தார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? அவர் தான் தாமஸ் ஆல்வா எடிசன். அத்தனைக்கும் அவர் கண்டுபிடிப்புகள் சாதாரணமானவை அல்ல. மின்சார பல்பு முதல் இன்று நாம் கண்டு மகிழும் திரைப்படம் (அவர் அதை Kinetoscope என்று அழைத்தார்) வரை பல மிகப்பெரிய கண்டுபிடிப்புகளும் அதில் அடங்கும்.
அவர் எப்படி அதை சாதித்தார் தெரியுமா? தன்னுடைய அறிவு, அனுபவம் மட்டுமல்லாமல் அடுத்தவர் அறிவு மற்றும் அனுபவத்தையும் முழுமையாகப் பயன்படுத்தினார். ஒரு பொருள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடும் முன் அப்பொருள் பற்றி அதுவரை வெளியான எல்லா நூல்களையும் ஒன்று கூட பாக்கி விடாமல் படித்து விடுவார். மற்றவர்கள் கண்டுபிடித்து நின்ற இடத்திலிருந்து தன் ஆராய்ச்சியைத் தொடங்கினார். எனவே அவர்கள் செய்திருந்த தவறுகளைச் செய்யாமல் தன்னைக் காத்துக் கொள்ள முடிந்தது. அவர்களது பல வருட அனுபவங்களின் பயனை அவர் எடுத்துக் கொண்டதால் தான் இத்தனை மகத்தான சாதனைகளை தன் வாழ்நாளிலேயே அவரால் செய்ய முடிந்தது.
இப்படி அடுத்தவர் அனுபங்களைப் பயன்படுத்துவது விஞ்ஞான ஆராய்ச்சிக்கு மட்டுமல்ல, எல்லாவற்றிற்கும் பொருந்தும். அடுத்தவர் அனுபவங்களைப் பயன்படுத்திக் கொண்டால் ஒழிய நாம் அந்த அறிவைப் பெற நம் வாழ்நாள் முழுவதும் செலவழிக்க வேண்டி வரும். அப்படிச் செய்தால் கற்ற அறிவைப் பயன்படுத்த மீதி நாட்கள் நமக்குப் போதாமல் போய் விடும்.
ஒரு வேலையைச் சிறப்பாக செய்து கொண்டிருப்பவன் அந்தத் திறமையைப் பெற்றதெப்படி அதைப் பயன்படுத்துவது எப்படி என்று அற்புதமாக உங்களுக்குத் தெரிவிக்கக்கூடும், உங்களுக்கு கற்றுக் கொள்ளும் ஆர்வமிருந்தால். ஒரு மாபெரும் வெற்றி நிலையை எட்டியவனைக் கூர்ந்து கவனித்தால், வெற்றியடைய வைத்த அம்சங்களை ஆர்வத்துடன் ஆராய முடிந்தால் வெற்றிக்கான வழிகளை நீங்கள் சுலபமாக நீங்கள் கற்க முடியும். அந்த அம்சங்களை உங்களிடத்தில் கொண்டு வர முடிந்தால் வெற்றி நிச்சயமே. அதோடு நின்று விடாதீர்கள். அதைத் தொடக்கமாக வைத்துக் கொண்டு மேலும் அதிக வெற்றிகளைக் குவிக்கப் புது வழிகள் உள்ளனவா என்று யோசித்து செயல்பட்டு மேலும் அதிகமாய் சாதிக்கப் பாருங்கள்.
வெற்றி அடைந்தவர்களிடமிருந்து மட்டுமல்ல; தோல்வி அடைந்தவர்களிடமிருந்து கூட எத்தனையோ கற்க முடியும். தோல்வியடைய வைத்த குணாதிசயங்களை ஆராய்ந்து உணர்ந்தால் அதுவும் கூட எத்தனையோ உங்களுக்கு சொல்லித்தரும். நீங்கள் அந்த குணாதிசயங்களை உங்கள் வாழ்க்கையில் இருந்து நீக்கினால் தோல்வியையும் உங்கள் வாழ்க்கையில் இருந்து நீக்க முடியும்.
இப்படி நாம் கூர்ந்து நம்மைச் சுற்றிலும் கவனித்தால் எப்படியெல்லாம் இருக்க வேண்டும், எப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்று தங்கள் வாழ்க்கையையே உங்களுக்கு உதாரணமாகக் காட்டும் பல மனிதர்களைப் பார்க்கலாம். உண்மையான புத்திசாலிகள் அதிலிருந்தே நிறைய கற்றுக் கொள்கிறார்கள். எத்தனையோ தவறுகளையும், முட்டாள்தனங்களையும் செய்யாமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள்
ஆனால் அவனை என்ன கேட்பது, இவனை என்ன கவனிப்பது என்று அலட்சியமாய் இருப்பவர்கள் எத்தனையோ படிப்பினைகளை இழக்கிறார்கள். அவர்கள் தலையெழுத்து, தானாகப் பட்டுத் தான் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டியதாகி விடுகிறது. அந்தத் தலையெழுத்தை நீங்கள் தவிர்க்கலாமே.
-என்.கணேசன்