கடந்த மூன்று மாதங்களாக உலகையே மிரட்டி வருகிறது. மிரண்டுபோன உலக சுகாதார நிறுவனம் பன்றிக் காய்ச்சல் உலக கொள்ளை நோய் என அறிவித்து, அனைத்து நாடுகளையும் உஷார்படுத்தியுள்ளது. மெக் சிகோ, அமெரிக்கா, கனடா, சீனா, இந்தியா போன்ற நாடுகளில் வெகு வேகமாக பரவி வரு கிறது பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை 164 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் 30,000 பேருக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொதுவாக பறவைகளுக்கும் பாலூட்டி களுக்கும் தொற்றும் நோய்தான் ஃப்ளூ எனப் படும் இன்ஃபுளூவென்சா நோய். இது இன் ஃபுளூவென்சா என்ற வைரஸால் பரவுகிறது. இந்த வைரஸ் தாக்கினால் மனிதர்களுக்குச் சாதாரணமாக ஏற்படும் நோய்தான் புளூ காய்ச் சல். கடுமையான காய்ச்சலையும், மூச்சுத் திணறலையும் ஏற்படுத்தக்கூடிய தொற்று நோயாகும். ஆண்டுதோறும் இது பல லட்சம் பேரைத் தாக்குகிறது. அவர்களில் குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்கள் ஆகியோரை கடுமையாகப் பாதிக்கிறது. இதனால் சிலர் சிகிச்சை பலனின்றி இறந்தும் போகிறார்கள்.
ஆனால், பன்றிக் காய்ச்சல் எனப்படும் "ஸ்வைன் புளூ' பன்றிகளிடையே தோன்றி (மருத்துவ உலகில் ஆஐ1ச1 என பெயரிட்டுள்ள னர்), அவற்றிக்கு அருகில் வேலை செய்து, தொடர்ந்து அங்கேயே வசிக்கும் மனிதர் களுக்குப் இந்நோய் வேகமாகப் பரவுகிறது. இந்த நோய் மனிதனை தாக்கும்போது, சுவா சத்தை பாதித்து மரணத்தை ஏற்படுத்துகிறது. அப்படிதான் மெக்சிகோ நாட்டின் கிழக்குப் பகுதி நகரான லா கிளோரியாவில் உள்ள ஸ்மித் பீல்டு நிறுவன பண்ணையில் முதன் முதலாக இந்த நோய் தோன்றியது. முதலில் பண்ணைத் தொழிலாளர்களுக்கு தொற்றி, அவர்கள் மூலம் நகருக்குள் பரவியது. மெக்சிகோ முழுவதும் வேகமாக பரவி, அண்டை நாடுகளான அமெரிக்கா, கனடா உட்பட உலகம் முழுவதிலுமுள்ள பல்வேறு நாடுகளில் இந்நோய் பரவத் தொடங்கின..
இந்நோய் உள்ளவர்கள் தங்களை இந்நோய் தாக்கியதை அறியாமல் அண்டை நாடுகளுக்குப் பயணிக்கும்போது இந்நோயானது மிக வேகமாகப் பரவுகின்றன. சுற்றுலா பயணி களும் இந்நோய் பரவ ஒரு காரணமாகி விடுகின்றனர்.ஆஐ1ச1 வைரஸ் கிருமி மனித உடலுக்குள் நுழையும்போது உடலின் தன்மைக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்கிறது. நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு அமைப்பையே தின்று விடுகிறது. இதன் விளைவாக காய்ச்சல், இருமல், தொண்டை வலி, உடல்வலி, தலைவலி ஆகியவை உருவாகும். ஒரு சிலருக்கு வாந்தி, வயிற்றுப் போக்கும் ஏற்படலாம் என்கிறது மருத்துவ உலகம். கவனிக்காமல் விட்டுவிட்டால் உயிருக்கு ஆபத்துதான்.
இதில் பாதகமான அம்சம் என்னவென்றால், பன்றிகளிலிருந்து மனிதர்களுக்கு நோய் தொற்று பரவும் வேகம் குறைவு. ஆனால் பாதிக்கப்பட்ட மனிதரிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு மிக வேகமாக இந்த வைரஸ் பரவும் தன்மைகொண்டது. குறிப்பாக இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர், இருமும் போது அல்லது தும்மும்போது தெறிக்கும் எச்சில் மற்றும் சளி மூலம் மற்றவருக்கும் பரவி பன்றிக் காய்ச்சலை ஏற்படுத்துகிறது. இத னால்தான் இந்த காய்ச்சலால் பாதிக்கப் படுவோருக்கு தனிப்பிரிவில் சிகிச்சை அளிக்கப் படுகிறது.
இதில் இன்னொரு அம்சம் என்னவென்றால், பன்றிகளுக்கு இந்நோயை தடுப்பதற்கான தடுப்பூசி உள்ளது. ஆனால் மனிதர்களுக்குத் தடுப்பூசி இல்லை. இவற்றைத் தடுக்க சரியான மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இப்போதுள்ள "டாமிஃபுளூ' மாத்திரைகள், நியூரோமினிடேஸ் இன்சிபிடார்ஸ் வகையைச் சேர்ந்த மருந்துகளால் மட்டுமே நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்த முடியும்.
உலக சுகாதார நிறுவனம் பன்றிக் காய்ச்சலின் தீவிரத்தை ஆறு கட்டங்களாகப் பிரித்துள்ளது. இதில் மூன்றாவது கட்டத்திலிருந்து நான்காவது கட்டத்திற்கு இந்நோய் தீவிரமடைந்திருப்பதாக உலக சுகாதார நிறு வனம் அறிவித்துள்ளது. இது உலக நாடுகளை மிகவும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆறாவது கட்டத்தை தொடுபோது நிச்சயம் மிக அதிக எண்ணிக்கையிலான மக்கள் பன்றிக் காய்ச்ச லுக்குப் பலியாகிவிட நேரிடும். அதற்குள் சுகாதார அமைப்புகளை முடுக்கி இந்நோய் மேலும் பரவாமல் தடுப்பது முக்கிய கடமையாகும்.
இந்தியாவில் டெல்லி, ஹைதராபாத், ஜலந் தர், பெங்களூரு, கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களில் பன்றிக் காய்ச்சலால் 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோயம்புத்தூரில் மட்டும் இருவருக்குப் பன்றிக் காய்ச்சல் இருப் பது உறுதியானதால், அவர்களுக்குத் தனிப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகின்றன.
தமிழகத்தை பொறுத்தவரை பன்றிகளுக்கு இந்நோய் வந்ததில்லை. மேலும் மேலை நாடுகளைப்போல இங்கு பன்றி வளர்ப்பு ஒரு மிகப்பெரிய தொழிலாக இல்லை. இதற்கு முன்னர் பொது இடங்களில் திரியும் பன்றிகள் மூலம் மூளை காய்ச்சல் பரவுவதால் மாநகராட்சி நிர்வாகமே பன்றிகளை சுட்டு கொல்வது வழக் கம். நோய்வாய்ப்பட்ட பன்றிகளுக்கு வைத்திய மெல்லாம் செய்வது கிடையாது. இதனால் விலங்குகளுக்கான நோய் தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்யும் ராணிப்பேட்டை ஐ.வி.பி.எம் அரசு நிறுவனம் பன்றிகளுக்கான தடுப்பூசியை தேவையின்மை கருதி உற்பத்தி செய்ய வில்லை.
இந்த நிலையில் தமிழக அரசு பன்றிக் காய்ச்சலை பற்றி கவலைப்பட வேண்டிய தில்லையென தினசரி நாளிதழ்களில் அரை பக்கத்தில் விளம்பரங்கள் கொடுத்து வருகிறது. இப்போதைக்கு அரசாங்கத்தின் அறிவிப்பு தைரியத்தைக் கொடுத்தாலும் இன்னொரு சந்தேகம் தோன்றதான் செய்கிறது. இன்று அரசாங்க மருத்துவமனைகள் இருக்கும் சுகாதார வசதி, மருத்துவ வசதிகளை கணக்கில் கொண்டால் நிச்சயம் பன்றிக் காய்ச்சலை நினைத்து பயப்படாமல் இருக்க முடியாது.
கடந்த நூற்றாண்டில் உலகை ஆட்டிப் படைத்த பெரியம்மை, பிளேக், காலரா போன்ற கொள்ளை நோய்கள் பின்தங்கிய சுற்றுச் சூழலால்தான் உருவானது. ஆனால் இப்போது தோன்றும் புதுப்புது கொள்ளை நோய்கள் மனிதனின் இரக்கமற்ற சுரண்டலுக்கு கிடைக் கும் தண்டனை. மனித நடவடிக்கைகளால் சுற்றுச்சூழல் மாசடைந்து வருவதும், உலக வெப்பமயமாகி தட்பவெப்ப நிலை மாற்றமடைந்து வருவதும் நாம் அறிந்ததே. அந்த வகையில் இன்று மனிதனின் உணவு வெறிக்காக கோழி, பன்றி போன்றவற்றைப் பண்ணைகளில் அடைத்துவைத்து குறுக்கு வழியில் உற்பத்தியை பெருக்குவதற்கான தண்டனைதான் பறவை காய்ச்சலும், பன்றிக் காய்ச்சலும்.
பன்றிகளை வளர்க்கும் நவீன பண்ணைகளில் பல லட்சம் பன்றிகளை ஒன்றாக அடைத்து வைத்து வளர்க்கப்படுகின்றன. பன்றிகளைக் கொழுக்க வைப்பதற்காக கொடுக்கப்படும் இரசாயனம் கலந்த உணவுகளும், அப்புறப் படுத்தபடாமல் கிடக்கும் கணக்கிலடங்காத கழிவுகளும் இத்தகைய பண்ணைகளை கிருமிகளின் உற்பத்தி சாலைகளாக மாற்றி யுள்ளன. மெக்சிகோவில் நோய் தோன்றிய ஸ்மித் பீல்டு நிறுவன பண்ணையிலிருந்து மட்டும் ஆண்டுதோறும் பத்து லட்சம் பன்றி கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இப்படி மிகை உற்பத்தி செய்யப்படுவதால் புதிய நோய்கிருமிகள் உருவாகிறது. தற்போது வளர்ந்த நாடுகள் மற்ற நாடுகளுக்குப் பன்றிகளை மட்டும் ஏற்றுமதி செய்யவில்லை. அதனுடன் பன்றிக் காய்ச்சலையும்தான் ஏற்றுமதி செய்து வருகின்றன. அதேபோல சர்வதேச அளவில் நமது வர்த்தகம் மட்டும் உலகமாக்கப்பட வில்லை; பன்றி காய்ச்சலும் கொள்ளை நோய் களும் உலகமயமாக்கப்பட்டு வருகின்றன.
- எஸ். செல்வராஜ்