திருக்குறள்

ஏ.ஆர். ரஹ்மான் - மொஸார்ட் ஆஃப் மெட்ராஸ்

ஏ.ஆர். ரஹ்மானுக்கு கோல்டன் குளோப் விருது கிடைத்தது பற்றி கருத்து தெ‌ரிவித்த இயக்குனர் ஒருவர், அவருக்கு விருது கிடைத்ததில் எனக்கு எந்த ஆச்ச‌ரியமும் இல்லை, கிடைக்காவிட்டால்தான் ஆச்ச‌ரியப்பட்டிருப்பேன் என்றார்.

1992ல் வெளியான ரஹ்மானின் முதல் படம் ரோஜாவிலிருந்து இன்று வரை அவரது இசைக்கு செவிமடுத்துவரும் ரசிகர்களுக்கும் இந்த விருது எவ்வித ஆச்ச‌ரியத்தையும் அளிக்கவில்லை. அவரது திறமைக்கு, இசை பங்களிப்புக்கு கோல்டன் குளோப் விருது ஒரு தொடக்கம் மட்டுமே என்ற மனப்பதிவே அனைவ‌ரிடமும் மேலோங்கியிருந்தது.
ரஹ்மானின் இசையார்வம் அவரது குழந்தை பருவத்திலிருந்தே தொடங்குகிறது. அவரது தந்தை ஆர்.கே. சேகர் பிரபல இசையமைப்பாளர். மலையாளப் படங்கள் பலவற்றில் பணிபு‌ரிந்திருக்கிறார். ரஹ்மானுக்கு அவரது தந்தையே முதல் குருவாகவும் இருந்துள்ளார். சிறுவனாக இருந்தபோது தன்ரா‌‌ஜ் மாஸ்ட‌ரிடம் முறைப்படி இசை பயின்றார் ரஹ்மான்.
ரஹ்மானின் முதல் திரைப்பிரவேசம், மணிரத்னத்தின் ரோஜா. விளம்பரப் படங்களுக்கு அவர் இசையமைத்திருந்ததை கேட்டே இந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ரோஜாவுக்கு இசையமைக்கும் முன் (1991ல்) தனது வீட்டின் பின்புறம் சொந்தமாக ஸ்டுடியோ ஒன்றை ஆரம்பித்தார் ரஹ்மான். அடிப்படை வசதிகள் மட்டுமே கொண்டிருந்த அந்த ஸ்டுடியோ இன்று இந்திய அளவில் அதிநவீன வசதிகள் கொண்ட ஸ்டுடியோவாக திகழ்கிறது.
இசையமைப்பாளர் ஒருவருக்கு இசையறிவுடன் நவீன தொழில் நுட்பம் குறித்த பு‌ரிதலும் இருக்க வேண்டும் என்பது ரஹ்மானின் நிலைப்பாடு. தொழில்நுட்ப விஷயத்தில் காலத்தோடு ஒழுகினால் மட்டுமே சர்வதேச இசையுலகில் நிலைத்து நிற்க இயலும். இதனை ச‌ரியாக பு‌ரிந்து கொண்டவர் ரஹ்மான். அவர் தொடங்க இருக்கும் இசைப்பள்ளியில் இசையையுடன், நவீன தொழில்நுட்பம் குறித்தும் கற்பிக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.
திரையிசையில் மரபான நடைமுறையை ரஹ்மான் நிராக‌ரித்த போதெல்லாம் கடுமையான விமர்சனங்களை அவர் எதிர்கொள்ள வேண்டி வந்தது. இசையில் அளவுக்கதிகமாக தொழில்நுட்பத்தை கலக்கிறார் என்பது முக்கியமான குற்றச்சாட்டு. அவர் இசையமைப்பாளர் அல்ல, வெறும் கம்போஸர் மட்டுமே என இசைத்துறையில் உள்ளவர்களாலேயே விமர்சிக்கப்பட்டார். இன்று அந்த குற்றச்சாட்டுகள் நிறமிழந்து விட்டன. மேலும், அவரது உலகளாவிய புகழுக்கு அவரது தொழில்நுட்ப அறிவும் ஒரு காரணமாக இருப்பதை அவரை விமர்சித்தவர்களே ஒப்புக் கொள்வர்.

ரஹ்மானால் வெஸ்டர்ன் ஸ்டைலில் மட்டுமே இசையமைக்க முடியும், தமிழ் கிராமிய இசை அவருக்கு வெகு தூரம் என்பது பொதுவான கருத்து. இது ஒரு குறையாக முன்வைக்கப்பட்டபோது அவர் இசையமைத்த படங்கள் கிழக்கு சீமையிலே மற்றும் கருத்தம்மா. இந்தப் படங்களின் இசையும், பாடல்களும் ரஹ்மானுக்கு கிராமிய இசையில் அறிமுகமில்லை என்ற விமர்சனத்துக்கு பதிலாக அமைந்தன. என்றாலும், தமிழ் கிராமிய இசை முழுமையாக அவருக்கு இன்னும் கைவரப் பெறவில்லை என்பதே உண்மை.
இந்திப் பாடல்களுக்கு செவிமடுத்து வந்த தமிழர்களை தமிழ் திரையிசையின் பக்கம் திருப்பியவர் இளையராஜா என்றால், இந்திப் பாடல்களை மட்டும் கேட்டு வந்த வட இந்தியர்களை தமிழ் திரையிசையின்பால் ஈர்த்தவர் ரஹ்மான். நேரடி இந்திப் படங்களுக்கு அவர் இசையமைக்கும் முன்பே ரோஜா, ஜென்டில்மேன், காதலன், பம்பாய் ஆகிய படங்களின் வாயிலாக அவர் இந்தியா முழுவதும் ரசிக்கப்படும் இசையமைப்பாளராகியிருந்தார்.
ரஹ்மான் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம், ஜப்பான், சீனா ஆகிய மொழிகளில் தயாரான படங்களுக்கு இசையமைத்துள்ளார். அவரது முதல் இந்திப்படம் ராம்கோபால் வர்மாவின் ரங்கீலா. ஒரு படத்தின் அனைத்துப் பாடல்களுக்கும் ரசிகர்கள் எழுந்து நின்று ஆடிய அதிசயத்தை பாலிவுட்காரர்கள் அனுபவப்பட்டது இந்தப் படத்தில்தான்.
இன்று பாலிவுட்டில் நல்ல திரைப்படம் ஒன்று தயாரானால் இசை ஏ.ஆர். ரஹ்மான் என்பது எழுதப்படாத விதி. ஃபயர், லகான், ரங் தே பசந்தி, ஸ்லம் டாக் மில்லியனர் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். ரஹ்மானின் இசைப் பயணத்தில் 2002ம் ஆண்டு முக்கியமானது. இந்த ஆண்டில்தான் அவரது பாம்பே ட்‌ரிம்ஸ் பி‌ரிட்டனில் அரங்கேறியது. ஆண்ட்ரூ லாயிட் வெப்ப‌ரின் பாம்பே ட்‌ரிம்ஸ் நாடகம் சர்வதேச அளவில் அவருக்கு ரசிகர்களை சம்பாதித்து கொடுத்தது.
1997ல் வெளியான ரஹ்மானின் வந்தே மாதரம் இசை ஆல்பம் குறிப்பிடத்தகுந்த முயற்சி. இதையடுத்து அவர் வெளியிட்ட ஜன கன மண ஆல்பமும் ரசிகர்களின் பெருத்த ஆதரவை பெற்றது. திரையிசையில் பாடல்களுக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை பின்னணி இசைக்கும் கொடுப்பவர் ரஹ்மான். 2005 ஆம் ஆண்டு டைம்ஸ் பத்தி‌ரிகை வெளியிட்ட ‘டாப் டென் மூவிஸ் சவுண்ட் ட்ராக்ஸ் ஆஃப் ஆல் டைம்’ பட்டியலில் ரஹ்மானின் ரோஜாவும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


இசையமைத்த முதல் படத்திலேயே தேசிய விருதை கைப்பற்றியவர் என்ற பெருமை ரஹ்மானுக்கு உண்டு. ரோஜா (1992), மின்சாரக் கனவு (1997), லகான் (2002), கன்னத்தில் முத்தமிட்டால் (2003) என நான்கு தேசிய விருதுகள், ஆறு தமிழக அரசு விருதுகள், இருபத்தியிரண்டு ஃபிலிம்பேர் விருதுகள், இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது, இப்போது கோல்டன் குளோப் விருது என ரஹ்மானின் விருது பட்டியல் மிக நீண்டது.
இந்த கௌரவம் அத்தனை எளிதில் அவருக்கு கிடைத்துவிடவில்லை. 1966 ஆம் ஆண்டு ஜனவ‌ரி ஆறாம் நாள் சென்னையில் பிறந்த திலீப் குமார், ஏ.ஆர்.ரஹ்மானாக புகழின் உச்சியை வந்தடைந்ததற்குப் பின்னால் கடின உழைப்பு, விமர்சனத்துக்கு துவளாத மனம், பெருமைகள் அனைத்தையும் இறைவனுக்கு சமர்ப்பிக்கும் மனப்பக்குவம் என இளைய தலைமுறை கற்றுக் கொள்ளும் பல விஷயங்கள் இருக்கின்றன.
ரஹ்மானின் ஒன்பதாவது வயதில் அவரது தந்தை மரணமடைகிறார். இளையராஜாவிடம் கீ போர்ட் ப்ளேயராக அவர் சேரும்போது வயது பதினொன்று. இருபத்தியிரண்டாவது வயதில் இஸ்லாம் மதத்தை தழுவி திலீப் குமார் என்ற தனது பெயரை ஏ.ஆர். ரஹ்மான் (Aடடயா சுயமமாய சுயாஅயn) என மாற்றிக் கொள்கிறார். இருபத்தி ஆறாவது வயதில் முதல் திரைப்பிரவேசம்.
இன்று ரஹ்மான் என்பது அகிலம் முழுவதும் தெ‌ரிந்த பெயர். ஹாலிவுட் சினிமா அவரை விரும்பி அழைக்கிறது. இன்சைட் மேன், லார்ட் ஆஃப் த ‌ரி‌ங்‌ஸ், தி ஆக்சிடெண்டல் ஹஸ்பண்ட் உள்ளிட்ட படங்களில் ரஹ்மானின் இசை கோவைகளை பயன்படுத்தியிருக்கிறார்கள். புகழ்பெற்ற டைம் பத்தி‌ரிகை அவருக்கு தந்திருக்கும் பட்டம், மொஸார்ட் ஆஃப் மெட்ராஸ்.
ரஹ்மானின் திரையிசை சாதனை என்பது, எம்.எஸ்.வி., இளையராஜா என்ற இருபெரும் மேதைகள் உருவாக்கி வைத்திருந்த இசைப்பாதையிலிருந்து விலகி திரையிசைக்கு முற்றிலும் புதிதான ஒரு திறப்பை ஏற்படுத்தியதே ஆகும். இந்த சாதனையின் வெளிச்சத்தில் சர்வதேச ரசிகர்களை தன்வயப்படுத்தி வருகிறார் ரஹ்மான். இசை என்பது சாகரம். அதை உணர்ந்தவராக ஒரு மாணவனுக்கு‌ரிய ஆர்வத்துடன் அவரது பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நெடிய பயணத்தில் கோல்டன் குளோப், ஆஸ்கர் என்பதெல்லாம் மைல் கற்கள் மட்டுமே, எல்லைக் கோடுகள் அல்ல.
நன்றி : வெப்துனியா

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற