எந்தவொரு மனிதனுக்கும் தனது கருத்துகளை நியாயமான முறையில் எடுத்துச் சொல்லும் உரிமை உண்டு. அதை ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பத்தைப் பொருத்த விஷயம்.
உயர் நீதிமன்றத்தில் நடந்தேறிய சம்பவத்தில் அதிர்ச்சி அளிக்கும் விஷயங்கள் மூன்று. நீதிபதிகளின் முன்னால், நீதிமன்ற அறையில் தாக்குதல் நடத்தும் அளவுக்கு ஒரு கீழ்த்தரமான மனநிலையுடையவர்கள் வழக்கறிஞர்களாக இருக்கிறார்கள் என்பது முதலாவது அதிர்ச்சி. கறுப்புச் சீருடை அணியாமல் முன்கூட்டியே திட்டமிட்டு, கையில் முட்டையுடன் நீதிமன்ற அறையில் வந்து அமர்ந்திருக்கிறார்கள் என்றால் இவர்கள் வழக்கறிஞர்கள் என்பதைவிட கிரிமினல்கள் என்பது அல்லவா உண்மை! இது இரண்டாவது அதிர்ச்சி. மூன்றாவது, நீதிபதி மிஸ்ரா மற்றும் நீதிபதி சந்துரு இருவரும் இருக்கும்போது, அவர்கள் கண் முன்னால் இப்படியொரு அராஜகத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள் என்றால், நீதிபதிகளுக்கு இந்த வழக்கறிஞர்கள் எந்த அளவுக்கு மரியாதை கொடுக்கிறார்கள் என்பது.
சமீபகாலமாகவே, சட்டப்படிப்பு படித்து விட்டதாலேயே சட்டத்தைத் தாங்கள் மதிக்க வேண்டியதில்லை என்கிற மனோபாவம் பல வழக்கறிஞர்களிடம் ஏற்பட்டிருக்கிறதோ என்றுகூடத் தோன்றுகிறது. கடந்த ஆண்டு சென்னை எழும்பூர் பெருநகர் குற்றவியல் நீதிமன்றத்தில், முருகானந்தம் என்கிற நீதிபதியை, நீதிமன்ற வளாகத்திலேயே நீதிபதிகள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த பொது வேலை நிறுத்தத்தின்போது, பிராட்வே பகுதியில் ஒரு சைக்கிள் கடையை 24 வழக்கறிஞர்கள் சூறையாடியதும், அவர்களைக் கைது செய்யப்போன காவல்துறையினரையே அவர்கள் தாக்க முற்பட்டதும் வழக்கறிஞர் சமுதாயத்துக்கே தலைகுனிவை ஏற்படுத்தியது.
வழக்கறிஞர்களின் அத்து மீறிய செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் இருப்பது, எந்த அளவுக்கு ஒரு கௌரவமான, மரியாதைக்குரிய தொழில் சீரழிந்திருக்கிறது என்பதை உணர்த்துகிறது. முன்பொருமுறை, அலாகாபாத் நீதிமன்றத்தில் காவல்துறையினரைப் பற்றி குறிப்பிடும்போது, "யூனிஃபாரத்தில் உலவும் ரௌடிகள்' என்று ஒரு நீதிபதி விமர்சித்தார். பிறகு அந்தக் கருத்து திரும்பப் பெறப்பட்டது என்பது வேறு விஷயம். இப்போது, அதே கருத்து வழக்கறிஞர்களுக்கும் பொருந்திவிடும் நிலைமை ஏற்பட்டுவிடும் போலிருக்கிறதே!
விடுதலைப் புலிகளை எதிர்க்கிறார் என்பதற்காக சுப்பிரமணியன் சுவாமியைத் தாக்கினார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்படியானால், மாங்கொல்லையில் பொதுக்கூட்டம் நடத்தி விடுதலைப் புலிகளை விமர்சித்த மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தையும் அல்லவா இவர்கள் தாக்கி இருக்க வேண்டும்? ஒருவேளை, அதற்கு தைரியமில்லாத காரணத்தால், சுப்பிரமணியன் சுவாமியைத் தாக்கித் தங்களது வீரத்தைப் பறைசாற்ற நினைத்தார்களோ, என்னவோ!
எந்த அளவுக்குத் தரந்தாழ்ந்தவர்களாக இருந்திருந்தால், நீதிமன்ற வளாகத்தில் தாக்குதல் நடத்திய அந்த மூன்றாம்தர வழக்கறிஞர்கள் (அவர்களை வேறு எப்படித்தான் அழைப்பது?) தாங்கள் வழக்காடும் நீதிமன்றத்தில், நீதிபதிகளின் முன்னால் முட்டைவீசித் தாக்குதல் நடத்தி இருப்பார்கள்? இதில் வேடிக்கை என்னவென்றால், நீங்களோ நானோ இதுபோல நடந்திருந்தால் அடுத்த வினாடியே, நீதிமன்ற அவமதிப்பு என்கிற பெயரில் நாம் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டிருப்போம்.
எழும்பூர் பெருநகரக் குற்றவியல் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதியைத் தாக்கிய வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? இல்லை. "சமரசம்' ஏற்பட்டு விஷயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. இதேபோல, வழக்கறிஞர்களின் சட்டவிரோதமான செயல்கள் பலதும் கண்டும் காணாமலும் நடவடிக்கை எடுக்கப்படாமலும் விடப்படுகின்றன. நடவடிக்கை எடுத்தால், வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபடுவார்கள். அதனால், பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள், நீதிபதிகளும் பாதிக்கப்படுவார்கள் என்பதால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுவதில்லை.
தாக்குதலில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் யார் என்பது நன்றாகத் தெரியும். தலைமை நீதிபதியோ, நீதிபதிகளோ இவர்களை நீதிமன்ற அவமதிப்புக்காக, தண்டிப்பார்களா? இந்த வழக்கறிஞர்களின் வழக்காடும் உரிமை ரத்து செய்யப்படாவிட்டால், நாங்கள் வழக்குகளை விசாரிப்பதில்லை என்று நீதிபதிகள் அறிவிப்பார்களா? சரி, பார் கவுன்சிலாவது, இதுபோன்ற தரங்கெட்ட செயல்களில் ஈடுபடும் வழக்கறிஞர்களின் உறுப்பினர் பதவியை ரத்து செய்து, தொழிலில் இருந்து வெளியேற்றுமா? அரசாவது, அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை தொடருமா? எதுவுமே நடக்காது என்பதுதான் நிஜம்.
நீதி கேட்டு நாம் நீதிமன்றத்துக்கு ஏன் போகிறோம்? நீதிபதி நியாயம் வழங்குவார் என்பதால். அந்த நீதிபதிக்கே மரியாதை இல்லை என்றால், மக்களுக்கு இருக்கும் அந்த நம்பிக்கையும் தகர்ந்து விடுகிறதே!
சில வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்குள் அரங்கேற்றி இருக்கும் வன்முறை, அராஜகம், ஈழத்தமிழர்கள் மீதுள்ள அனுதாபத்தையும் குலைக்கும். மக்களுக்கு நீதித்துறையின் மீதான நம்பிக்கையையும் குறைக்கும். வன்முறையில் ஈடுபட்டவர்கள் வழக்கறிஞர்களாகப் பணியாற்றும் உரிமையை ரத்து செய்து அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கையைத் தொடர்வதுதான், இனியும் இதுபோன்ற அநாகரிகம் தொடராமல் தடுக்கவும், நீதிமன்றத்தின் கண்ணியம் காப்பாற்றப்படவும் ஒரே வழி.
Nandri:Dinamani