ஆனால், இந்த சுப்பிரமணிய சுவாமி, சோ, தினமலர் கிருஷ்ணமூர்த்தி, இந்து ராம் போன்றவர்களின் செயல்களைப் பார்க்கும்போது, பெரியார் எவ்வளவு தெளிவா, தீர்க்கமா சிந்திச்சிருக்காருன்னு புரியுது.‘பார்ப்பனர்கள் தமிழர்கள் இல்லை’ என்று பெரியார் சொன்னார்.தமிழ்த்தேசியவாதிகள், ‘பெரியார்தான் தமிழர் இல்லை. பார்ப்பனர்கள் பச்சைத் தமிழர்கள்’ என்று திருப்பிப் போட்டனர்.ஆனால், தமிழர்களுக்குப் பிரச்சினை வரும்போது, குறிப்பாக ஈழத்தமிழர்களுக்குப் பிரச்சினை வரும்போதெல்லாம், பார்ப்பனர்கள் தமிழ்தேசியவாதிகளின் கூற்றைப் பொய்யாக்கி, பெரியாரின் வார்த்தையை மெய்யாக்குகிறார்கள்.
‘ஈழத்தமிழர்களை குவியல் குவியலாக கொலை செய்கிறான் சிங்கள ராஜபக்சே. இந்திய அரசே, அதை தடுத்து நிறுத்து’ என்று தமிழகத் தெருக்களில் மனித சங்கிலி, ஆர்ப்பாட்டம் என மக்கள் போராடிக் கொண்டிருந்தபோது, ‘டிசம்பர் மாத கச்சேரி’ என்று சபாக்களில் கர்நாடக சங்கீத ஆலாபனைகளில் தாளம்போட்டு ‘ச்சூ’ கொட்டி ரசித்துக் கொண்டிருந்தார்கள் பார்ப்பனர்கள்.அவர்களின் ‘ச்சூ’, ஒலி ரசனையின் அடிப்படையில்தான் எழுகிறதே தவிர, தமிழர்களின் மீதான இரக்கத்தின் அடிப்படையில் ஒருநாளும் எழுவதில்லை. (வீதியில் இறங்கி போராடுவதை கேவலமாக, பொது மக்களுக்கு இடைஞ்சலாக கருதுகிற இவர்கள்தான், கொலை செய்த ஜெயேந்திரனுக்கு ஆதரவாக, வீதியில் இறங்கி போராடினார்கள்.)
ஈழத்தமிழர்களின் துயரங்களில் அக்கறையற்று இருக்கிறார்கள், என்பதுகூட பிரச்சினை இல்லை. அவர்களுக்கு எதிராக இருக்கிறார்கள் என்பதுதான் வருந்ததக்கது. அதையும்மீறி, ஒன்றிரண்டு பார்ப்பனர்கள் ஈழத்தமிழர்கள் நலனில் அக்கறையோடு பேசுகிறார்கள். ‘பரவாயில்லையே’ என்று நாம் புருவம் உயர்த்தினால், ஈழத்தமிழர்கள் பிரச்சினையில், மாவரைக்கிற கருணாநிதியை திட்டுவதற்கான ஒரு நல்வாய்ப்பாகத்தான் ஈழத்தமிழர்களின் துயரங்களைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்,
ஞாநியைப் போல.‘தங்கபாலு, ப. சிதம்பரம், இளங்கோவன், திருநாவுக்கரசு, குமரி அனந்தன், ஓ. பன்னீர்செல்வம், தமிழிசை சவுந்தரராஜன் போன்றவர்கள் பச்சைத் தமிழர்கள்தான். அவர்கள் என்ன ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவா இருக்கிறார்கள்?’ என்று நீங்கள் கேட்கலாம்.இவர்கள் தங்கள் சொந்தக் கருத்தைவிடவும் தாங்கள் சார்ந்திருக்கிற கட்சியின் நிலைபாட்டை பிரதிபலிக்கிறார்கள். அல்லது இவர்களுக்கு சொந்தக் கருத்து என்பதே கிடையாது. எது அவர்களுக்கு லாபமாக இருக்கிறதோ அதை செய்கிறார்கள். ஆக, இவர்களை தமிழர்கள் என்றோ, இல்லை அவர்கள் சார்ந்திருக்கிற ஜாதிகளின் பிரதிநிதிகள் என்றோகூட முடிவு செய்யமுடியாது.ஆனால், கட்சி சாராத பார்ப்பனர்கள்கூட பெரும்பாலும், ஈழத்தமிழர்கள் விவகாரங்களில் எதிராக இருக்கிறார்கள். அல்லது அக்கறையற்று இருக்கிறார்கள்.
பத்திரிகைகளில்கூட, பார்ப்பனரல்லாத பத்திரிகைகளில் வருகிற இலங்கை அரசுக்கு ஆதரவான செய்திகளுக்கு பின்புலமாக, இலங்கை அரசின் ‘விருந்தாளி’யாக இன்ப சுற்றுலா சென்று வந்த பத்திரிகையாளர்கள், தாங்கள் வாங்கிய காசுக்கு விசுவாசமாக செய்திகள் வெளியிடுகிறார்கள்.ஆனால், துக்ளக், தினமலர், இந்து நாளிதழ்கள் இன்ப சுற்றுலாவிற்கு முன்பிருந்தே, ஈழத்தமிழர்களுக்கு எதிராகத்தான் இயங்குகிறார்கள்.
“நம்ம ஆளுங்களுக்கு பைத்தியம் பிடித்தால், வீட்டுக்குள்ள இருக்கிறத எல்லாம் தூக்கி வெளியில் அடிப்பான். பாப்பானுக்குப் பைத்தியம் பிடித்தால் வெளியில் இருக்கிறத எல்லாம் தூக்கி வீட்டுக்குள்ள அடிப்பான்” என்று பெரியார் சொன்னது எவ்வளவு தீர்க்க தரிசனம்.
தேசப்பற்றாளரைப்போல், ‘பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பு’ என்று தீவிரமாக எழுதிய சுப்பிரமணிய பாரதி, ‘பார்ப்பன எதிர்ப்பு’ அல்லது ‘பார்ப்பனரல்லாதார் உரிமை’ என்று சிலர் முயன்றபோது, அவர்கள் மீது சரமாரியாக கல்லை விட்டெறிந்தைப் போல்,சுற்றுசூழல் பாதுகாப்பு, முதலாளித்துவ எதிர்ப்பு, இயற்கை வேளாண்மை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, பன்னாட்டு கம்பெனிகளின் ஆதிக்கம், அமெரிக்காவின் அட்டூழியம் என்று எழுதினால் ஓடி வந்து அதற்கு ஆதரவாக ஒரு நக்சலைட்டைப் போல் கருத்து சொல்கிற பார்ப்பனர்களில் பலர்,பெரியார் - அம்பேத்கர் நிலையில் இருந்து இந்து மத எதிர்ப்பு, இட ஓதுக்கீடு ஆதரவு, பார்ப்பன எதிர்ப்பு, பாரதியின் பார்ப்பன பாசம் என்று நாம் எழுதினால், அதில் உள்ள நியாயத்தை புரிந்துகொள்ளாமல், ஒரு வெறிப்பிடித்த தெருநாய் பாய்ந்து வந்து கடிப்பதுபோல், நம்மை கடித்து குதுறுகிறார்கள் பார்ப்பன அறிவாளிகளில் பலர்.
ஆக, பெரியார் சொன்னபடி பெரியார் கட்சிக்காரர்கள் நடந்துகொள்கிறார்களோ இல்லையோ, பார்ப்பனர்கள்தான் பெரியார் சொன்னபடி நடந்து கொள்கிறார்கள்.
-- வே.மதிமாறன்