திருக்குறள்

முத்துக்குமார் முடிவும் தமிழக நிலையும்

ஈழத்தில் வாழும் தமிழர்கள் உரிமைக்கும் உயிருக்கும் போராடிக் கொண்டிருக்கின்றனர். இருப்பிடங்களை இழந்து காடுகளில் தஞ்சம் புகுந்து, மரத்தடிகளிலும்,தற்காலிகக் குடியிருப்புகளிலும் தங்கியிருக்கும் இவர்களுக்கு உணவு,உடை சிக்கல் உள்ளது.உணவுக்கும் மருத்துவத்துக்கும் ஒன்றுகூடும் இவர்களைச் - சொந்தநாட்டுக் குடிமக்களையே இலங்கை இராணுவம் கொத்துக்குண்டுகளையும்,பிறவகைக் குண்டுகளையும் வீசிக் கொன்றுவருவது மிகப்பெரிய மாந்தப் பேரவலமாக உள்ளது.உசாவல் என்ற பெயரில் இளைஞர்களை அடித்துக் கொல்வதும்,இளம்பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதுமாக ஒவ்வொரு நாளும் செய்தி ஏடுகளைப் படிக்கும்பொழுது தெரியவருகிறது. பண்பாடு உள்ளவர்களால் பொறுத்துக்கொள்ளமுடியாத செயலாக இது உள்ளது.பன்னாட்டு உதவிகளுடன் இலங்கை இராணுவம் தமிழினத்தை அழிக்கும் செயலில் ஈடுபட்டு வருவதை உலகெங்கும் பரவி வாழும் தமிழர்கள் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள், கையெழுத்து வேட்டைகள் நிகழ்த்தி வருகின்றனர்.தமிழகத்தில் உள்ள ஏடுகள் பலவும் இலங்கை அரசுக்குச் சார்பாகச் செய்திகளை வெளியிட்டு வருவது இன்னும் வேதனைக்கு உரிய செய்தியாகும். இலங்கை அரசின் உயரிய விருதுகளைச் சில தமிழக இதழாளர்கள் வாங்கி(!) வருவதும் வெந்த புண்ணில் வேல்பாய்ச்சும் செயலாகும்.தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் சிலர் உண்மையாக ஈழத்தமிழர்களுக்குக் குரல்கொடுத்து வருவதை நன்றியுடன் குறித்தாக வேண்டும்.அதே நேரத்தில் வேறு சில தலைவர்கள் பொதுக்குழு,செயற்குழு கூட்டுவது,தீர்மானம் நிறைவேற்றுவது, கலந்து பேசுவது,பதவிவிலகல் நாடகம் நடத்துவது,மாந்தச் சங்கிலிக்கு அழைப்பு விடுப்பது,கவிதை எழுதுவது,கட்டுரை வரைவது,கண்ணீர் மடல் வரைவது என அடுத்த தேர்தல்நாள் நெருங்கும்வரை அலைக்கழிப்பு வேலைகளைச் செய்துவருவதையும் தமிழக மக்கள் கண்டு வருகின்றனர். காசுமீரில் ஒரு "பண்டிட்" இறந்தால் இந்தியன் என்கின்றதும், இராமேசுவரத்தில் ஒரு தமிழன் இறந்தால் மீனவன் என்பதும் எத்தனை நாளைக்கு என்பது தெரியவில்லை.வடநாட்டு வல்லாதிக்கம் எனத் தந்தை பெரியார்,அறிஞர் அண்ணா குறிப்பிட்டது இதனைத்தான் போலும். இவ்வாறு அரசியல் கூத்தர்கள் ஒவ்வொரு வகையில் ஈழப்போராட்டத்தை நாடகமாக்கித் தமிழக மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கும் சூழலில் தமிழகத்தில் உள்ள மாணவர்கள் பேரெழுச்சி கொண்டு ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவுக்குரல் கொடுத்துவருகின்றனர்.செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள்,சேலம் சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாநோன்பு இருந்து உயிர்துறக்க முனவந்தனர். அதுபோல் தமிழகத்தின் புகழ்பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகத்து மாணவர்களும் வகுப்புகளைப் புறக்கணித்தனர்.தமிழகத்தின் பல கல்லூரி,பள்ளி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து வீதிக்கு வந்து ஈழத்தமிழர்களுக்குக் குரல்கொடுத்து வருகின்றனர். இவ்வாறு மாணவர்கள் போராட்டம் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகப் பெருகிவரும் வேளையில் முத்துக்குமார் என்ற இளைஞர் தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி நடுவண் அரசு அலுவலகத்தின் முன்பாக தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டார்.இதனைத் தொலைக்காட்சிகளில் கண்ட மக்கள் ஆறாத்துயர் உற்றனர். தமிழகத் தலைவர்கள் இத்தகு முடிவுகளை எடுக்க வேண்டாம் என்று வற்புறுத்தி வருகின்றனர். தமிழகத்து மக்களின் உணர்வுகளை எடுத்துரைக்கும் முகமாகவே முத்துக்குமாரின் முடிவு உள்ளது.முத்துக்குமாரின் இறுதி வாக்குமூலமும்,அவரிடம் இருந்து பெறப்பட்ட அறிக்கைகளும் அவரின் தேர்ந்த அரசியல் அறிவு உலகியல் அறிவு காட்டுகின்றன.தமிழர்கள் எந்த அளவு ஏமாற்றப்படுகின்றனர் என்பதைக் காட்டுகின்றன. இந்தி எதிர்ப்பில் மாணவர்கள் ஈடுபட்டு இன்னுயிர் ஈந்த வரலாற்றை நினைவுகூரும் விதமாக இந்த நிகழ்வு உள்ளது. மொழிக்காக, இனத்துக்காக உயிர்மாய்த்துக்கொள்ளும் இனமாகத் தமிழினம் எத்தனை ஆண்டுகளுக்கு வாழவேண்டுமோ?.

தந்தையே நீ இல்லாது போனாய்!-
இந்தத்தமிழினம் சாகையில் நீ ஊமை ஆனாய்!
வெந்து கிடந்தன உடல்கள்!-
இந்தவேதனைக்கு அழுதன நாற்புறக் கடல்கள்!

என்ற புலவர் புலமைப்பித்தனார் வரிகளும்

வடக்கிலோ மேன்மேலும் அதிகார வீக்கம்வருமான
வீழ்ச்சியோ தெற்கினைத் தாக்கும்!

என்ற பெருஞ்சித்திரனார் வரிகளும் நினைவுக்கு வருகின்றன.

- முனைவர் மு.இளங்கோவன்
தட்ஸ்தமிழ் நன்றி

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற