திருக்குறள்

சீனாவின் அமைதியைக் கெடுத்த அமைதிப் பரிசு!

மைதிக்கான நோபல் பரிசுக்காக இந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பவர்
சீனாவின் அறிஞர் லியூ ஷியோபோ! எந்த ஒரு நாட்டுக்கு இப்படி ஒரு நோபல் பரிசு கிடைத்து இருந்தாலும், அந்த நாட்டில் கொண்டாட்டங்கள் கொடி கட்டிப் பறக்கும். வீதிகள் எல்லாம் விழாக்கோலம் பூணும். ஆனால், லியூ ஷியோபோ என்ற 55 வயது அறிஞர், நோபல் பரிசுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்பு, கடந்த வெள்ளிக்கிழமை வெளிவந்தபோது, சீனாவின் கம்யூனிஸ்ட் ஆட்சியாளர்கள் டென்ஷன் ஆனார்கள். இந்த செய்தியை 'அருவருப்பான அசிங்கம்' என்று கோபத்தைக் காட்டினார்கள். சீனாவில் இருக்கும் நார்வே நாட்டின் தூதரை நேரில் அழைத்து, 'உங்கள் நாட்டில் இருந்து செயல்படும் நோபல் பரிசு கமிட்டி, லியூ ஷியோபோவைத் தேர்ந்தெடுத்து இருப்பது உள்நோக்கம்கொண்டது. இரு நாட்டுக்கும் இடையிலான உறவைப் பாதிக்கக்கூடியது!' என்று மிரட்டும் தொனியில் கண்டனம் தெரிவித்தார்கள்.
காரணம்?
சீனாவின் கம்யூனிச ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் நீதிமன்றத்தால், 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கும் ஒரு கைதிதான்... லியூ ஷியோபோ!
'இன்னும் எத்தனை ஆண்டுகள்தான் ஒரு கட்சி ஆட்சிமுறை என்ற சர்வாதிகார ஆட்சியை சகித்துக் கொள்வது? பல கட்சி ஜனநாயகம் நம் நாட்டுக்கு வேண்டாமா? மனித உரிமைகள் இங்கு மதிக்கப்பட வேண்டாமா?' என்பது போன்ற சிக்கலான பல கேள்விகளுக்கு விடை கொடுக்கக்கூடிய பிரகடனத்தை சீனாவின் கம்யூனிஸ்ட் ஆட்சியாளர்களுக்கு எதிராக வெளியிட்டார் லியூ ஷியோபோ. 'சார்ட்டர் 8' என்ற இந்தப் பிரகடனத்துக்கு ஆதரவு திரட்ட பொதுமக்களிடம் கையெழுத்து வேட்டை யும் நடத்தினார். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் லியூ ஷியோபோவைக் கைது செய்து, '11 ஆண்டுகள் தண்டனை' என்று நீதிமன்றத்தைவைத்து தீர்ப்பும் சொல்லிவிட்டது, சீனாவின் சர்வாதிகார கம்யூனிச அரசு.
தியான்மென் சதுக்கத்தில் வரிசையாக அணிவகுத்து வந்த பீரங்கி வண்டிகளுக்கு முன்பு படுத்துப் போராடிய மாணவர்களை வழிநடத்திய முக்கிய நான்கு தலைவர்களில் லியூ ஷியோபோவும் ஒருவர். 'மனித உரிமைக்காகக் குரல் கொடுக்கிறார்', 'ஒற்றைக் கட்சி ஆட்சி முறை கூடாது!' என்று பிரசாரம் செய்கிறார் என்று சொல்லி, அவரை மீண்டும் மீண்டும் கைது செய்தது. அவ்வளவு ஏன், தனக்கு நோபல் பரிசு கிடைத்திருக்கும் செய்தி லியூவுக்கு தெரிந்துவிடக் கூடாது என்பதற்குக்கூட மெனக்கெட்டது சீன அரசு.
இந்த நோபல் பரிசு செய்தி மக்களையும் சென்றடைந்துவிடக் கூடாது என்று, பி.பி.சி, சி.என்.என் போன்ற வெளிநாட்டுத் தொலைகாட்சி சேனல்களுக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியது. 'தனக்கு நோபல் பரிசு கிடைத்த செய்தியே தெரியாமல் ஒருவர் சிறைச்சாலையில் இருப்பது துரதிர்ஷ்டமான விஷயம்!' என்று வெளிநாட்டுத் தொலைக்காட்சிகள் 'ஃப்ளாஷ் நியூஸ்' வெளியிட, வேறு வழி இல்லாமல்... லியூ ஷியோபோவைச் சந்தித்து இந்த செய்தியைச் சொல்ல, அவரது மனைவிக்கு சீன அரசு அனுமதி கொடுத்தது. வழியில் அவர் யாருக்காவது பேட்டி கொடுத்துத் தொலைத்தால் என்ன செய்வது என்று அஞ்சி, அவரைத் தன் பொறுப்பில் போலீஸ் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றது. ஆனால், அதன் பிறகு லியூ ஷியோபோவின் மனைவி என்ன ஆனார் என்பது அவர் வக்கீலுக்கே தெரியவில்லை. அவர் வீட்டுக் காவலில் இருப்பதாக ஒரு தகவல். உலகின் மிகப் பெரிய சிறைக்குப் பெயர் சீனாவோ?
- நன்றி - ஆனந்தவிகடன்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற