திருக்குறள்

எதுக்குத்தான் நடக்குதோ காமன்வெல்த்?

டிக்கெட்டும் விக்கலை... உள்ளே போகவும் முடியலை!
விளையாட்டுப் போட்டி நடத்துவது ஒரு நாட்டுக்குப் பெருமையே!ஆனால்,
அதை விளையாட்டுத்தனமாக நடத்தினால் அவமானம் மட்டுமே மிஞ்சும் என்பதற்கு காலாகாலத்துக்கும் உதாரணமாக இருக்கும் இந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்!
அக்டோபர் 3-ம் தேதி... இந்த இதழை நீங்கள் வாசிக்கும்போது, இன்னும் எத்தனை ஏடாகூடங்கள் புதுசாகப் பல்லிளித்து இருக்குமோ!
ஷீலாவும் கல்மாடியும்!
இந்தியாவில் இதுவரை ஆசிய விளையாட்டுப் போட்டியும், உலக கிரிக்கெட் போட்டியும் நடந்துள்ளன. 2003-ம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது காமன்வெல்த் போட்டிகளை நடத்த ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதுதான் இப்போது நடக்கிறது. 2006-ல் மணிசங்கர் அய்யர் விளையாட்டுத் துறை அமைச்சரானவுடன், 'இந்தப் போட்டிகளை டெல்லிக்கு வெளியே நடத்துவதே சரி. ஹரியானா மாநிலத்தில் கிரீன் ஃபீல்டில் இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளைச் செய்தால், அங்கு ஒரு புதிய நகரமே உருவாகும், இதனால் போட்டிக்குப் பிறகும் பலர் பலன் அடைவார்கள். டெல்லியில் ஏற்பாடுகள் செய்தால், இடையூறுகள்தான் மிஞ்சும்' என்று கூறினார்.
டெல்லி காங்கிரஸின் முக்கியப் புள்ளியும் இந்திய ஒலிம்பிக் சங்கப் பிரமுகருமான சுரேஷ் கல்மாடி இதை ஒப்புக் கொள்ளவில்லை. டெல்லி முதலமைச்சர் ஷீலா தீட்சித் வேறு இந்தப் போட்டிகளை டெல்லியில் நடத்துவதிலேயே பிடிவாதமாக இருந்தார். இப்போது சந்திக்கு வரும் குழப்பங்களில் பெரும் பொறுப்பு ஷீலாவைச் சேரும் என்பது பலரது கருத்து!
ஸ்டேடியம் பழசும்... புதுசும்!
இந்த விளையாட்டுப் போட்டிகளை நடத்த டெல்லியில் 11 ஸ்டேடியங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. தடகளப் போட்டிகள் நடக்கும் ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் ஏற்கெனவே பிரமாண்ட மாக இருந்தது. டல்கோத்ரா, ஹாக்கி போட்டிகள் நடக்கும் மேஜர் தயானந்த் நேஷனல் ஸ்டேடியம் போன்றவற்றைப் புதுப்பிக்க கோடிக் கணக்கில் செலவு செய்ததாகக் காட்டப் பட்டுள்ளது. ` 960 கோடி செலவில் நேரு ஸ்டேடியம் மட்டுமே புதுப்பிக்கப்பட்டதாம். 'புதிதாக ஒரு ஸ்டேடியம் கட்டவே இந்த அளவுக்கு செலவு ஆகாது. ஆனால், புதுப்பிக்க இவ்வளவு செலவா?' என்று கேட்கின்றன எதிர்க்கட்சிகள்!
` 87 ஆயிரம் கோடியாம்!
நிதியமைச்சராக சிதம்பரம் இருந்தபோது 620 கோடிகளை ஒதுக்கினார். இதில், 132 கோடிதான் ஸ்டேடியங்கள் கட்ட ஒதுக்கி வைக்கப்பட்டது. ஆனால், இப்போது 3,300 கோடிகளுக்கு மேல் ஸ்டேடியங்கள் கட்டவே செலவாம். 2002-ல் மான்செஸ்டரில் மற்றும் 2006--ல் மெல்போர்னில் நடந்த காமன்வெல்த் போட்டிகளைவிட ஆகியவற்றைவிட டெல்லி காமன்வெல்த் போட்டிகளுக்குக் காட்டப்படும் செலவு பல மடங்கு கூடுதல். விளையாட்டுத் துறை அமைச்சர் எம்.எஸ்.கில் நாடாளுமன்றத்தில் '` 13 ஆயிரம் கோடி' என்று அறிவிக்கிறார். ஆனால், மத்திய - மாநில அரசுகள் இது தொடர்பான பல்வேறு திட்டங்களுக்காக ஒதுக்கியுள்ள பணத்தைச் சேர்த்தால், இதன் மொத்தக் கணக்கு ` 87 ஆயிரம் கோடியைத் தொடுமாம்!
டிக்கெட் விற்பனை டல்!
மெல்போர்னில் நடந்த விளையாட்டுப் போட்டியில் 13 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையானதாம். டெல்லியில் சுமார் 17 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகும் என்பது எதிர்பார்ப்பு. ஆனால், இது வரை நான்கு லட்சம் டிக்கெட்டுகளே விற்பனையாகி உள்ளன. பாதுகாப்பு, போக்குவரத்துக் கெடுபிடிகள், ஸ்டேடியத் தின் கூரை விழுந்தது, நடை மேம்பாலம் இடிந்தது என்ற திகில் செய்திகள்... பொது மக்களை பேஜாராக்கி உள்ளன. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை கூடுதலாக இருக்கும் என்று நினைத்தார்கள். அதுவும் நிறைவேறவில்லை. டெல்லியில் சுமார் 1,400 ஹோட்டல்களில், சுமார் 35,000 அறைகள் உள்ளன. பாகர் கஞ்சில்தான் அதிக ஹோட்டல்கள். இதில் காமன்வெல்த் விளையாட்டு அமைப்பாளர்கள் புக் செய்த பெரும்பாலான அறைகளை எடுத்துக் கொள்ள ஆளில்லாமல் ரத்து செய்து விட்டார்கள். ஹோட்டல் உரிமையாளர்களை இது செம கடுப்பாக்கிவிட்டது.
இளைஞர்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும், விளையாட்டுப் போட்டிகளை ஊக்குவிக்கவும், விளையாட்டைத் தொழில் முறையாக ஆக்கவும்தான் அரசு இவ்வளவு கோடிகளை செலவு செய்கிறது. ஆனால், விளையாட்டுப் போட்டிகளைக் காண்பதற்கான டிக்கெட்டின் விலை ` 1,000 முதல் 50 ஆயிரம் வரை. இதனால் சாதாரணமானவர்கள் போய் விளையாட்டுகளைப் பார்க்க முடியாது!
போட்டிகளுக்குச் செல்லும் விளையாட்டு வீரர்களுக்கு டெல்லி சாலையில் தனிப் பாதைகள் போடப்பட்டுள்ளன. இந்த டிராக்கில் மற்ற வாகனங்கள் சென்றால், ` 2,000 அபராதம் விதிக்கப்படும். அத்தோடு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு கிரிமினல் வழக்கும் பதிவு செய்யப்படும். இந்தப் போட்டியை ஒட்டி டெல்லியில் சைக்கிள் ரிக்ஷா ஓட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது!
''இவ்வளவு செலவுக் கணக்கு காண்பித்து, எதற்குத்தான் நடத்தப்போகிறோம் காமன்வெல்த் போட்டிகளை?'' என்று கேட்டால், ''உங்க கேள்வியிலேயே பதிலும் இருக்கே... எல்லாம் கணக்குக் காட்டத்தான்'' என்று டெல்லி நிருபர் கொடுத்த பதில் 'சுரீர்' என்று இருந்தது!
- சரோஜ் கண்பத்
  
   

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற