திருக்குறள்

ஒரு கிலோ அரிசி 1ரூபாய்... நித்யப்பிரியாவின் உயிர் 4 ரூபாய்

மிழகத்தில் ஒரு கிலோ அரிசியின் விலை, 1 ரூபாய். அதைக் காட்டிலும் கொஞ்சமே
கொஞ்சம் அதிகமாக ஓர் உயிரின் விலையே 4 ரூபாய் என்றால் நம்ப முடிகிறதா?
நித்யப் பிரியா! சென்னைக்கு அருகே, திருவள்ளூர் மாவட்டத்தில் தச்சூர் என்கிற கிராமமும் அல்லாத நகரமும் அல்லாத நிலப்பரப்பைச் சேர்ந்தவர். தினமும் தன் வீட்டில் இருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்குச் சென்று படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவி. சுறுசுறு... துறுதுறுவென சிறுமியாக வலம் வந்த நித்யப் பிரியா, இப்போது இல்லை. பஸ் பாஸ் வடிவில் வந்தது விபரீதம்!
குரல் கம்மப் பேசுகிறார் நித்யப்பிரியாவின் அப்பா முருகேசன்.
"எப்பவும் என் பொண்ணு அரசாங்க இலவச பஸ் பாஸ்லதான் ஸ்கூலுக்குப் போயிட்டு வருவா. அன்னிக்கு காலையில ஸ்கூல் பேக் கிழிஞ்சிருக்கு, தைக்கணும்னு 100 ரூபாய் வாங்கிட்டுப் போனா. பை தெச்ச பணம் போக மீதியை வெச்சிருந்தா. ஸ்கூல் முடிஞ்சு பஸ்ல ஏறி இருக்கா. பேக்ல கைவிட்டுப் பார்த்தா, பஸ் பாஸைக் காணோம். கண்டக்டர் திட்டுவாரோன்னு பயந்து, அழற நிலைமைக்கு வந்துட்டா. அப்புறம் அவகூடவே பஸ்ல வரும் ரஞ்சித்குமார்கிட்டே, 'உன் பஸ் பாஸைத் தா, நான் கண்டக்டர்கிட்ட சமாளிச்சுக்கிறேன்'னு கேட்டிருக்கா. 'என் பஸ் பாஸ்ல, என் பேர் எழுதி என் போட்டோதான் இருக்கும். கண்டுபிடிச்சுடுவார் கண்டக்டர்!'னு ரஞ்சித் சொல்லிட்டான். அப்புறம் தான் பை தெச்ச காசு போக மிச்சக் காசு தன் கிட்ட இருக்கிறது இவளுக்கு உறைச்சு, 4 ரூபாயைக் கொடுத்து கண்டக்டர் உமாபதியிடம் டிக்கெட் கேட்டு இருக்கா. ஆனா, இவளை ஆரம்பத்தில் இருந்தே பார்த்துட்டு இருந்த கண்டக்டர் உமாபதி, கோபத்தில் இருந்திருக்கார். பஸ்ல அத்தனை பேர் முன்னாடியும் பிரியாவையும் ரஞ்சித்குமாரையும் காட்டுக் கத்தலாக் கத்தித் திட்ட ஆரம்பிச்சிருக்கார். பிரியா அப்பவே அழுதுட்டா. ஆனாலும், கண்டக்டர் திட்டுறதை நிறுத்தலை. அதே பஸ்ஸில் ராஜேந்திரன்னு ஒரு டைம் கீப்பரும் வந்திருக்கார். அப்ப அவருக்கு டியூட்டியே கிடையாதாம். கொஞ்சம் போதையிலும் இருந்ததா சொல்றாங்க. அந்த டைம் கீப்பரோட சேர்த்து, பிரியாவையும் ரஞ்சித்குமாரையும் டெப்போவில் இறக்கிவிட்டுட்டார் கண்டக்டர் உமாபதி.
அங்கே ராஜேந்திரனும், உதவி மேலாளர் ஜான்சுந்தரும் சேர்ந்து, இவங்க ரெண்டு பேரையும் அசிங்க அசிங்கமாத் திட்டி இருக்காங்க. ரஞ்சித் குமாரை வெளியே நிக்கச் சொல்லிட்டு, பிரியாவை மட்டும் ஒரு ரூமுக்குள் கூட்டிட்டுப் போயிருக்காங்க. அரை மணி நேரத்துக்கும் மேலே அவ வெளிய வரலை. 'வெளியிலேயே அசிங்கமாத் திட்டினவங்க, உள்ளே பிரியாவை எவ்வளவு மோசமாத் திட்டு றாங்களோ?'னு பயந்துட்டே ரஞ்சித் வெளியே நின்னுட்டு இருந்திருக்கான். இதுக்கு நடுவில், பஸ்ல பிரியாவோடு வந்த எங்க பக்கத்து வீட்டுப் பொண்ணு என்கிட்டே வந்து விஷயத்தைச் சொல்லிச்சு. நான் உடனே டெப்போ பக்கத்தில் இருக்கிற என் நண்பனுக்கு போன் பண்ணி, 'ஃபைன் எதுவும் கட்டுறதுன்னா, கட்டி பிரியாவை டெப்போல இருந்து கூட்டிட்டுவந்துடு'ன்னு சொன்னேன். ஆனா, அவன் போனப்போ... பிரியாவும் ரஞ்சித்குமாரும் அங்கே இல்லை. அனுப்பிச்சிட்டாங்க!" என்று மேற்கொண்டு தொடர முடியாமல் மௌனமாகிறார் முருகேசன்.
டெப்போவில் இருந்து வீடு திரும்பிய நித்யப் பிரியா யாருடனும் பேசவில்லை. மனசும் முகமும் இறுகிப்போன அவர், தன் அம்மா விமலா கடைக்குப் போயிருந்த சமயத்தில், தூக்கு மாட்டிக்கொண்டு இறந்துவிட்டார். "வீட்டுக்கு வந்தவ என்கிட்டே ஒண்ணும் பேசவே இல்லை. எப்பவுமே கலகலன்னு இருப்பா. ஆனா, அன்னிக்கு முகம் கூடக் கழுவலை. வீட்டுக்கு வந்து நைட்டி மாட்டினவ, ஸ்கூல் யூனிஃபார்ம் துப்பட்டாவை மேலுக்குப் போட்டு இருந்தா. புள்ளை சாப்பிடலையேன்னு தக்காளியும் முட்டையும் வாங்க கடைக்குப் போனேன். வந்து பார்த்தா, உத்திரத்தில் துப்பட்டாவை மாட்டிப் பொணமாத் தொங்கறா என் புள்ளை. அப்புறம் அவ பேக்கைப் புரட்டி பார்த்துட்டு இருந்தப்ப, அந்த பாழாப் போன பஸ் பாஸ் கீழே ஒரு புஸ்தகத்துக்கு அடியிலதான் இருந்துச்சு!" என்ற விமலாவுக்கு வார்த்தைகளை முந்திக் கொண்டு கண்ணீர் எட்டிப் பார்க்கிறது. "அவ எப்பவுமே எதையுமே ஈஸியாத்தான் எடுத்துக்குவா. யார் என்ன திட்டினாலும் அதைப்பத்திக் கவலைப்பட மாட்டா. ஆனா, அவளே மனசு உடைஞ்சு தூக்குல தொங்குற அளவுக்கு டெப்போவுல என்ன நடந்ததுன்னு தெரியலை!" என்கின்றனர் அக்கம்பக்கம் இருப்பவர்கள்.
விஷயம் பரவவும், கொதித்தெழுந்த ஊர் மக்கள் சாலை மறியலில் இறங்கினர். மறியல், அரசுப் பேருந்து சேதம் என 14 பேரைக் கைது செய்திருக்கிறார்கள் காவலர்கள். இப்போது ராஜேந்திரனும் ஜான்சுந்தரும் காவல் துறையால் கைது செய்யப்பட, கண்டக்டர் உமாபதி மட்டும் தலைமறை வாகிவிட்டதாகச் சொல்கிறார்கள்.
4 ரூபாய் டிக்கெட்டுக்காக, ஒரு மாணவியைக் கொடுமைக்கு ஆளாக்கும் அளவுக்கா... மனம் சிதைந்தவர்கள் மத்தியில் நாம் வாழ்கிறோம்?
"எம் பொண்ணு அப்படி என்ன தப்பு செஞ்சா? அவகிட்டே பஸ் பாஸ் இல் லைன்னா, பஸ்ஸைவிட்டு இறக்கிவிட்டு இருக்கலாம். ஃபைன் போட்டிருக்கலாம். ஆனா, ஏன் டெப்போவுக்குக் கூட்டிப் போகணும்? இத்தனைக்கும் அவ டிக்கெட் எடுக்கத் தயாராதானே இருந்தா?"
முருகேசனின் கேள்விகளில் நியாயம் நிரம்பி வழிகிறது. ஆனால், அதற்கான விடைகள்?

- நன்றி விகடன்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற