திருக்குறள்

மீண்டும் கற்பு!

ரவிக்குமார் எம்.எல்.ஏ.

கற்பு குறித்த விவாதம் தமிழ்ச் சூழலில் மீண்டும் சூடு பிடித்திருக்கிறது. இப்போது உச்ச நீதி மன்றம் அதற்கான காரணமாகி இருக்கிறது. சமீபத்தில் தனக்கெதிராகத் தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் நடிகை குஷ்பு முறையிட்டிருந்தார். அந்த வழக்கின் விசாரணையின்போது தலைமை நீதிபதி, 'குஷ்பு சொன்ன கருத்துகளை ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை!' என்று குறிப்பிட்டி ருக்கிறார். தான் குற்றம் எதையும் செய்யவில்லை என்று குஷ்பு சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை எனக் குறிப்பிட்டுள்ள உச்ச நீதிமன்றம், குஷ்புவின் சர்ச்சைக்குரிய அந்தப் பேட்டியின் முழுமையான வடிவத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டிருக்கிறது.

சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் வார இதழ் ஒன்றுக்கு குஷ்பு அளித்த பேட்டி அப்போது மிகப்பெரும் சர்ச்சையைக் கிளப்பியதை நாம் அறிவோம். திருமணத்துக்கு முன்பு பாலுறவு வைத்துக்கொள்ளலாம். ஆனால், அது குறித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற பொருள் தொனிக்க குஷ்பு கூறியதாக வெளியான கருத்துகள், அப்போது பலராலும் விமர்சிக்கப்பட்டன. அவர்மீது ஏராளமான வழக்குகள் தமிழ்நாட்டில் பல்வேறு நீதிமன்றங்களில் தொடரப்பட்டன. தமிழ்ப் பண்பாட்டை அவர் கேவலப்படுத்தி விட்டார் என்று அவருக்கு எதிரான போராட்டங்களும் நடத்தப்பட்டன. அத்தகைய நடவடிக்கைகள் அவருடைய பேச்சு சுதந்திரத்துக்கு தடையாக இருக்கின்றன என்ற சில பெண்ணியவாதிகள் கருத்து தெரிவித்திருந்த போதிலும், குஷ்புவுக்கு ஆதரவாகப் பெரிய அளவில் கருத்து தெரிவிக்கப்படவில்லை என்பதே உண்மை.

குஷ்புவின் நேர்காணலை வெளியிட்ட வார இதழ், அதை கவர் ஸ்டோரியின் ஒரு பகுதியாகவே பிரசுரம் செய்திருந்தது. பாலியல் பழக்க வழக்கங்களில் ஏற்பட்டு வரும் மாற்றங்களைப் பற்றிய அந்த கவர் ஸ்டோரி, எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதாகவும் அமைந்திருந்தது. அவர்கள் சில புள்ளிவிவரங்களையும், கேள்விகளையும் கொடுத்து குஷ்புவிடம் கருத்துக் கேட்டிருந்தனர். அப்படி தெரிவிக்கப்பட்ட கருத்துகள்தான் நேர்காணலாகப் பிரசுரிக்கப்பட்டன.


குஷ்புவின் பேட்டி அந்த அளவுக்கு சர்ச்சையை கிளப்பியதற்கு வேறு சில காரணங்களும் இருந்தன. அதற்கு சில நாட்களுக்கு முன்புதான் தமிழ் திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் தமிழ் நடிகைகள் குறித்துக் கூறிய சில கருத்துகளின் காரணமாக கடுமையான கண்டனத்துக்கு ஆளாகியிருந்தார். அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டு மென்று தமிழ் திரைப்பட உலகத்தினர் வற்புறுத்தி வந்தனர். அப்படி வலியுறுத்தியவர்களின் முன்னணியில் இருந்தவர் நடிகை குஷ்பு! வேறு வழியில்லாமல் தங்கர்பச்சானும் அப்போது பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். அது காட்சி ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டு அதில் ஒரு பொதுக்காட்சியாக, பொது விசாரணையாக மாற்றப்பட்டது. அதனால் தங்கர்பச்சானுக்கு ஆதரவாக இருந்த இயக்கங்கள் கோபம் அடைந்திருந்தன. கற்பு குறித்த சர்ச்சைக்குரிய கருத்துகள் வெளியிடப்பட்ட அதே இதழில் தமிழ் பெண் கவிஞர் ஒருவரின் பேட்டியும் வெளியாகி இருந்தது. பாலியல் தொடர்பான கவிதைகளை எழுதி தமிழ் கலாசார சூழலில் அதிர்வலைகளை எழுப்பி இருந்தவர் அந்த கவிஞர். அவர் கூறிய கருத்துகள் எந்த எதிர்ப்பையும் எழுப்பாத நிலையில், குஷ்புவின் கருத்துகளுக்கு மட்டும் அத்தகைய எதிர்ப்பு வெளியானது ஏன்? அவர் தமிழ்நாட்டில் பிறக்காதவர் என்பதும், சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர் என்பதும்கூட இதற்கான காரணங்களாக அமைந்திருந்தனவா என்ற கருத்தும் கவனிக்கத் தக்கது. அந்த நேரத்தில் அவர் சொன்ன கருத்துகளால் தமது சமூகத்துக்கு பாதிப்பு ஏற்படுமோ என்று அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அச்சப்படக் கூடிய ஒரு சூழல் உருவானது. அதனால் அச்சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சில இயக்கங்கள் குஷ்புவுக்கு எதிராக கடுமையான போராட்டங்களை நடத்தவேண்டிய சூழல் உருவானது. இப்படி பல்வேறு காரணிகளும் சேர்ந்துதான் இந்தப் பிரச்னையை இந்த அளவுக்குக் கொண்டு வந்து நிறுத்தின. தமிழ்நாட்டில் பல்வேறு நீதிமன்றங்களிலும் வழக்கு போடப்பட்ட நிலையில்தான் குஷ்பு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். ஆனால், இப்போதோ வாணலியில் இருந்து தப்பித்து நெருப்பில் குதித்த கதை ஆகிவிடும்போல் தோன்றுகிறது.

குஷ்பு சொன்ன கருத்துகளில் ஒருவேளை தவறு இருந்திருக்குமேயானால், அது சமூக மட்டத்தில் விவாதிக்கப்பட்டு அதற்கான கண்டனங்களைத் தெரிவித்திருக்கலாம். இந்தப் பிரச்னையை நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றது எந்த விதத்தில் நியாயம் என புரிய வில்லை. கலாசாரப் பிரச்னை களைப் பொறுத்த வரை அவற்றை நாம் மக்கள் மன்றத்தில் ஆரோக்கியமான விவாதங்களுக்கு உட்படுத்துவதே பொருத்தமாக இருக்கும். மிகவும் ஆத்திரமூட்டத் தக்க கருத்துகள் கூறப்பட்டிருந்தால், அதைக் கண்டித்துப் போராட்டங்களில் ஈடுபடுவதில் கூட தவறில்லை. ஆனால், நீதிமன்றங்களுக்கு சென்று இதை தீர்த்துக்கொள்ள முனைவது எந்தவொரு சமூகத்துக்குமே நன்மை பயப்பதாக இருக்காது. அதே சமயம், தற்போது இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ள நீதிமன்றம், நிச்சயம் இக்கருத்துகளின் தன்மையை சரியான விதத்தில் புரிந்துகொள்ளும் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனினும், இத்தகைய பிரச்னைகளிலிருந்து நீதிமன்றங்கள் தம்மை விலக்கி வைத்துக்கொள்வதே தக்க அணுகுமுறையாக இருக்க முடியும்.

கற்பு பற்றிய பிரச்னையை நீதிமன்றத்தில் தீர்த்துக் கொண்டோமெனில்... 'நாளை கடவுள் உண்டா இல்லையா?' என்ற பிரச்னையைக்கூட நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டிய விநோதச் சூழல் ஏற்படலாம். உலகில் மனித குலத்தால் அறுதியிட்டுத் தீர்மானிக்க முடியாத, தீர்ப்பளிக்க முடியாத பல விஷயங்கள் இருக்கவே செய்கின்றன. ஒருவருக்கு சரியென்று தோன்றுவது, இன்னொருவருக்கு சரியல்ல என்று தோன்றக் கூடும். எல்லோருமே ஒரே விதக் கருத்தைக் கொண்டிருந்தோமெனில், அப்படியான மனிதர்கள் வாழ்வது நாடாக இருக்காது. மனிதர்களிடையே இருக்கும் கருத்து சுதந்திரத்தை அங்கீகரித்து அதற்கான உரிமை அவருக்கு உள்ளது என ஒப்புக்கொள்வதன் மூலமே ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க முடியும்.

குஷ்புவின் கருத்துகளைப் பற்றி நீதிமன்றத்துக்குப் போனவர்கள், அதைவிட மோசமான பல விஷயங்கள் இந்த நாட்டில் தொடர்ந்து கொண்டிருப்பதைப்பார்த்து எப்படி கண்ணை மூடிக் கொண்டிருக்கிறார்கள்? நாடு சுதந்திரம் அடைந்து, அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு... இவ்வளவு ஆண்டுகள் ஆனபிறகும்கூடமனிதர் களை பிறப்பின் அடிப் படையில் ஏற்றத் தாழ்வாகக் கருதுகிற போக்கு சமூகத்தில்பல தளங்களிலும் தொ டர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அதைப் பற்றி ஏன் இவர்களுக்கெல்லாம் கோபம் ஏற்படவில்லை? சாதிப் பிரிவினை என்பது அறிவியல் ஆதாரமற்றது என்பதை நாமெல்லாம் ஏற்றுக்கொண்டு விட்டபோதிலும், இன்னும்கூட சாதி அடையாளத்தைப் பெயர்களிலேயே தாங்கிக் கொண்டுதான் திரிகிறோம். இது நமக்கு வெட்கத்தை உண்டாக்குவதில்லை. இந்த நாட்டில் கோடிக்கணக்கான பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்படுகின்றன. அத்தகைய கூட்டுக் கொலைகளுக்கு மௌன சாட்சியாக விளங்குபவர்களைக் கொண்ட சமூகம்தானே இது! குஷ்பு தெரிவித்த கருத்துகள் சரியானவை என்றோ, அவரை யாரும் விமர்சிக்கக் கூடாது என்றோ நாம் வாதிடவில்லை. மாறாக, இந்தப் பிரச்னையைப் பெரிதாக்குவதன் மூலம் என்ன விதமான கலாசார சேதம் இங்கே நடத்தப்படுகிறது என்பதை மட்டுமே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

சொல்லப் போனால், குஷ்பு போன்றவர்கள் இப்போது தமது சுதந்திரம் பறிபோய் விட்டதே என்று கூக்குரலிடுவதும் வேடிக்கையாக இருக்கிறது. தனக்காக கோயில் கட்டியபோது சந்தோஷமாக ரசித்தவர், தன்மீது கல்லெறியப்படும்போது ஒப்பாரி வைப்பது சரியானதல்ல. அன்றைக்கு அவருக்கு கோயில் கட்டியவர்கள் அவர் எந்த மாநிலத்தில் பிறந்தவர், எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பதையெல்லாம் பார்த்து அதை செய்யவில்லை. அவரை தமக்குள் ஏற்றுக்கொண்டு வழிபாட்டு நிலைக்கு உயர்த்தி வைத்தார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். கற்பு பற்றிய குஷ்புவின் கருத்துகள் ஏன் இந்த அளவு எதிர்ப்பை கொண்டு வந்தன என்று ஆராய்ந்தால் தமிழ்த் திரைப்படத் துறையை தமிழ் மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பது தெரியவரும். ஒருவரை நாயகனாக, நாயகியாக ஏற்றுக்கொண்டு வழிபடுகிற ரசிகனின் மனோபாவம்... அந்த வழிபாட்டுக்கு உரிய பிம்பங்கள் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்பதையும் சேர்த்தே கற்பனை செய்து வைத்திருக்கிறது. அந்த கற்பனை உடைபடும்போது ரசிகர் மனத்தின் கட்டுமானம் தகர்ந்து போகிறது. தனது நம்பிக்கை பொய்த்துப்போன வேதனையை அந்த மனம் அடைகிறது; அதனால் கோபம் கொள்கிறது. இப்படியான காரணங்களினாலும் குஷ்புவுக்கான எதிர்ப்புக்கு ஆதரவு சேர்ந்தது. யாரெல்லாம் அவரை வழிபட்டார்களோ, யாரெல்லாம் அவரை ரசித்தார்களோ அவரது திரைப்படத்தை முதல் நாளே டிக்கெட் வாங்கிக்கொண்டு எவரெல்லாம் போய் பார்த்தார்களோ அவர்கள்தான் இந்த எதிர்ப்பிலும் முன்னணியில் நின்றார்கள். அந்த உளவியலை குஷ்பு புரிந்துகொள்ள வேண்டும்.

திரைப்படங்கள் தமிழ் வாழ்வின் பிரிக்க முடியாத அங்கங்களாக இருப்பதை நாம் அறிவோம். அது கடந்த பல ஆண்டுகளாக தமிழ் சமூகத்துக்கு சேதத்தைத்தான் உருவாக்கி வருகிறது. கேளிக்கையையும், வாழ்க்கையையும் பகுத்துப் பார்க்கத் தெரியாத மனிதர்கள் ஒன்றைப் பார்த்து ஒன்றை வடிவமைத்துக் கொள்கிறார்கள். அதனால் வரும் குழப்பமும் இதில் உண்டு. பத்திரிகைகள் மக்களிடையே விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதில் முக்கியப் பங்காற்ற முடியும். இந்த சர்ச்சையை முன்வைத்து மேலும் எப்படி புதிய சர்ச்சைகளை உருவாக்குவது என்று எண்ணாமல் நமது கலாசாரச் சூழலை எப்படி ஆரோக்கியமாக அமைத்துக்கொள்வது என்ற நோக்கிலிருந்து சிந்தித்தால்... எதிர்காலத்தில் இப்படியான குளறுபடிகள் நடைபெறாமல் தடுக்க முடியும்!

நன்றி-
ஜுனியர் விகடன்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற