திருக்குறள்

இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் - 20வது இடத்தில் கலாநிதி மாறன்

2 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் சன் குழும அதிபர் கலாநிதி மாறன் இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 20வது இடத்தில் உள்ளார்.

போர்ப்ஸ் இதழ் இந்தியாவின் டாப் 100 கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தின் கலாநிதி மாறனுக்கு 20வது இடம் கிடைத்துள்ளது.
ஆசியாவின் மிகப் பெரிய டிவி குழுமங்களில் சன் டிவியும் ஒன்றாகத் திகழ்கிறது. உலகம் முழுவதும் பெரும் பெரும் டிவி குழுமங்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த வேளையில் இந்தியாவில் தொடங்கப்பட்ட டிவி குழுமம்தான் சன்டிவி.

சென்னையில், தொடங்கி இன்று இந்தியா முழுவதும் வியாபித்துள்ள சன் குழும சானல்கள், பிராந்திய மொழி ஒளிபரப்பில் அசைக்க முடியாத இடத்தில் அமர்ந்துள்ளன.
மக்களின் ரசனையை மாற்றி அமைத்தவை சன் டிவியின் நிகழ்ச்சிகள். மெகா தொடர்கள், கேம் ஷோக்கள், திரைப்படங்கள், திரைப்படங்களை அடிப்படையாகக் கொண்ட நிகழ்ச்சிகள் என அதுவரை ரசிகர்கள் பார்த்திராத புதுமையுடன், தரத்தையும் குழைத்துக் கொடுத்தது சன்.
சன் டிவி ஆரம்பிக்கப்பட்ட புதிதில் அதன் விஸ்வரூபம் யாருக்கும் தெரியவில்லை.

 இதனால் பெரிதாக அதைக் கண்டு கொள்ளாத நிலையும் இருந்தது. இந்தி, ஆங்கிலத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்தான் எடுபடும் என்று கட்டியம் கூறி வந்தனர். ஆனால் அத்தனையையும் தகர்த்து அனைவரையும் சென்னையின் பக்கம் திரும்ப வைத்தார் கலாநிதி மாறன்.

தென் மாநிலங்கள் கலாநிதிமாறனின் தங்கச் சுரங்கமாக மாறியது. சன் டிவியைத் தாண்டி, கன்னடம், மலையாளம் , தெலுங்கு ஆகிய மொழிகளுக்கும் கிளை பரப்பியது சன் குழுமம். இன்று ஒவ்வொரு மொழியிலும் ஏகப்பட்ட சானல்கள்.
இன்று இந்தியாவின் மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கு நேயர்களைக் கொண்டுள்ளது சன் டிவி குழும சானல்கள். டிவி உள்ள வீடுகளில் நான்கில் மூன்று பங்கு நேயர்கள் சன் குழுமச் சானல்களைப் பார்க்கிறார்கள்.

கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் சன் குழுமத்தின் வருவாய் 19 சதவீதம் உயர்ந்து 225 மில்லியன் டாலராக இருந்தது. 80 மில்லியன் டாலர் லாபம் ஈட்டியது.
கடைசி காலிறுதியில், சன் குழுமத்தின் விற்பனை மற்றும் லாபங்கள் 21 சதவீதமாக அதிகரித்தது.

சன் குழுமத்தின் வசம் இன்று 20 சாட்டிலைட் தொலைக்காட்சி சேனல்கள், 46 எப்எம் ரேடியோ நிலையங்கள் உள்ளன.

சுபாஷ் சந்திராவின் ஜீ தொலைக்காட்சி குழுமம்தான் இதுவரை அதிக மதிப்பு வாய்ந்த பட்டியலிடப்பட்ட மீடியா நிறுவனமாக திகழ்ந்தது. அதை தற்போது சன் குழுமம் தகர்த்து முன்னிலைக்கு வந்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் இந்தியாவின் 100 அதிக ரேங்கிங் பெற்ற டிவி நிகழ்ச்சிகள் பட்டியலில் சன் குழுமத்தைச் சேர்ந்த நிகழ்ச்சிகளின் எண்ணிக்கை 21 ஆக இருந்துத. அதேசமயம், ஜீ டிவியின் நிகழ்ச்சிகள் வெறும் 16 மட்டுமே.

தமிழகத்தைப் பொறுத்தவரை அனைத்து டாப் 10 நிகழ்ச்சிகளும் சன் குழுமத்தின் நிகழ்ச்சிகள்தான்.

இத்தனை வெற்றிகளுக்கு மத்தியில் படு அமைதியாக, நிதானமாக இருக்கிறார் கலாநிதி மாறன். எப்படி இது சாத்தியம் என்று அவரிடம் கேட்டபோது, நான் போட்டிகளை சாதாரணமாக எடுத்துக் கொள்வதில்லை. அவர்கள் வளருவற்கு முன்பே வீழ்த்தி விட விரும்புவேன். அவர்கள் சிறியவர்களாக இருந்தாலும் சரி, பெரியவர்களாக இருந்தாலும் சரி, கவலைப்பட மாட்டேன் என்கிறார்.

சன் குழுமத்தின் வளர்ச்சியில் கலாநிதியின் பங்கு பெரும் பங்கு என்பதில் சந்தேகம் இல்லை. அதேசமயம், அரசியல் தொடர்புகளும் சன் குழுமத்தின் ஆரம்ப கட்ட வளர்ச்சியில் மிக முக்கியப் பங்கு வகித்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.

முதல்வர் கருணாநிதியின் பேரன் என்ற ஒரு பெரும் பலன் இருந்ததால், திமுகவினரின் ஏகோபித்த டிவியாக மாறிப் போயிருந்தது சன் டிவி - ஒரு காலத்தில். கலாநிதி மாறனின் தம்பி தயாநிதி மாறனும், சன் டிவியின் வளர்ச்சிக்காக மிகப் பெரிய அளவில் உதவியுள்ளார். ஆனால் அரசியல் பலத்தால் மட்டும் தாங்கள் வளரவில்லை என்பதை சுட்டிக் காட்டுகிறார் கலாநிதி மாறன். சன் டிவி 1993ம் ஆண்டு தொடங்கப்பட்டபோது திமுக ஆட்சிப் பொறுப்பில் இல்லை. மீண்டும் நிறுவனம் பப்ளிக் லிமிடெட் கம்பெனியாக மாற்றப்பட்டபோதும் (2006) திமுக ஆட்சிப் பொறுப்பில் இல்லை.

சன் குழுமத்தின் 16 ஆண்டு கால வரலாற்றில் பாதி அளவு ஆண்டுகள் மட்டுமே திமுக ஆட்சியில் இருந்தது. மேலும், எனது உறவினர்களின் உதவிகளை நான் ஒருபோதும் நாடியதே இல்லை.
காலை முதல் இரவு வரை அரசியல் மட்டுமே பேசிக் கொண்டிருக்கும் ஒரு குடும்பத்தின் பின்னணியில் இருந்து வந்திருந்தாலும் கூட, எனக்கு அதில் சுத்தமாக ஈடுபாடு கிடையாது.

1993ம் ஆண்டு 25 பேர் அடங்கிய குழுவுடன், 86 ஆயிரம் டாலர் முதலீட்டுடன் தொடங்கப்பட்டது சன் டிவி. அந்த 25 பேரில் பலரும் கலாநிதியுடன் லயோலா கல்லூரியில் படித்த நண்பர்கள். அவர்களில் 20 பேர் இன்னும் கலாநிதியுடன் இருக்கிறார்கள்.

வேடிக்கை என்னவென்றால் சன் டிவியை ஆரம்பித்து விட்ட கலாநிதி மாறன் அதனஒளிபரப்புக்காக முதலில் அணுகியது ஜீ டிவியை. அவர்களின் டிரான்ஸ்பான்டர்கள் மூலம் பிற்பகலில் மட்டும் ஒளிபரப்பை மேற்கொள்ள அனுமதிக்குமாறு கோரினாராம் கலாநிதி.
இதற்காக சுபாஷ் சந்திராவை பார்க்க சென்றிருந்தார் கலாநிதி. ஆனால் அவரைப் பார்க்க அனுமதி கிடைக்கவில்லை. மாறாக ஒரு சாதாரண அதிகாரியைத்தான் கலாநிதியால் பார்க்க முடிந்தது. அந்த அதிகாரியோ, தமிழ் நிகழ்ச்சியையெல்லாம் யார் பார்க்கப் போகிறார்கள் என்று கூறி கலாநிதியின் கோரிக்கையை நிராகரித்து விட்டாராம்.

மனம் தளராத கலாநிதி அப்போது ஜீ டிவிக்குப் போட்டியாக இருந்த சிறிய சேனலான ஏடிஎன்-ஐஅணுகினார். அவர்களோ 3 மணி நேரம் ஸ்லாட் தருவதாக கூறினார். ஆனால் ஒரு மாதம் கூட தாக்குப் பிடிக்க மாட்டீர்கள் என்று அவ நம்பிக்கையுடன் கூறினார்களாம் கலாநிதியிடம்.
ஆனால் கலாநிதிக்கு நம்பிக்கை இருந்தது. தென்னிந்தியாவில் தமிழ் மொழிச் சானலை நிச்சயம் நடத்த முடியும், இந்தி ஆதிக்கத்தைத் தாண்டி வளர முடியும் என்று நம்பினார். மேலும் தென்னிந்தியர்களுக்குப் பெரும்பாலும் தமிழ் புரியும் என்ற காரணத்தினால் தமிழா, இந்தியா என்று வரும்போது நிச்சயம் தமிழைத்தான் அவர்கள் விரும்பிப் பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையம் கலாநிதியிடம் இருந்தது. அதுதான் கடைசியில் ஜெயித்தது.

கடைசியில் சன் டிவி வெற்றி பெற்றது. 1998ம் ஆண்டு நேரடியாக அப்லிங்கிங் செய்து கொள்ளும் வசதியை மத்திய அரசு அனுமதித்தது. அதை முதலில் பயன்படுத்திக் கொண்ட சானல்களில் ஒன்றாக சன் இருந்தது.

இந்த சமயத்தில்தான் புத்திசாலித்தனமாக திரைப்படங்களுக்கான டிவி உரிமைகளை வாங்கும் முறையை தொடங்கி வைத்தார் கலாநிதி மாறன். அப்போது அதற்கு அதிக செலவுபிடிக்கவில்லை. இதனால் பெருமளவில் படங்களை வாங்கிக் குவித்தது சன் டிவி. இன்று சன் குழுமத்திடம் கிட்டத்தட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்கள் உள்ளன.  இன்று தயாரிக்கப்படும் முக்கிய நடிகர்களின் படங்கள் பெரும்பாலும் சன் டிவி வசமே உள்ளது. இது போதாதென்று சன் டிவியும், சன் பிக்சர்ஸ் என்ற பெயரில் படத் தயாரிப்பில் குதித்து அதிலும் வெற்றி பெற்றுள்ளது.

சன் டிவியின் விஸ்வரூப வளர்ச்சிக்து அதன் சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனம் மிகப் பெரிய உதவியாக அமைந்தது. தமிழகத்தில் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்களை எஸ்.சி.வி கட்டமைப்பின் கீழ் கொண்டு வந்ததன் மூலம் சன் டிவியால் படு வேகமாக வளர முடிந்தது.

இப்படி தொடர்ந்து வளர்ந்து வந்த சன் குழுமம் இன்று எப் எம் சானல்கள், சன் டைரக்ட் டிடிஎச் என்று கிளை பரப்பி வியாபித்து வருகிறது. விரைவில் விமான சேவையிலும் இறங்கப் போகிறது சன் டிவி.

தனியார் தமிழ் தொலைக்காட்சி உலகில் முதலில் காலடி எடுத்து வைத்த சன் டிவி இன்று தமிழ் தொலைக்காட்சி உலகின் முன்னோடியாக, மிகப் பெரிய இடத்தில் உட்கார்ந்திருக்கிறது என்றால் நிச்சயம் கலாநிதி மாறனின் சலியாத உழைப்பு என்பதில் சந்தேகம் இல்லை.

- தட்ஸ் தமிழ்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற