திருக்குறள்

தமிழச்சி தங்கபாண்டியன்





      கிராமிய வாசனை மணக்க மணக்க... வாழ்வியல் கவிதைகளையும் படைப்புகளையும் படைத்து, இலக்கிய உலகில் தனித்த ஆளுமையோடு திகழ்கிறவர் தமிழச்சி தங்கபாண்டியன். பேச்சாளர், எழுத்தாளர், கவிஞர், கட்டுரையாளர், நாடகக் கலைஞர், பரதநாட்டிய வித்தகர், ஆய்வாளர், அரசியல்வாதி என்றெல்லாம் பன்முகப் பரிமாணம் காட்டி பரவசப்படுத்துகிறார் தமிழச்சி.

மறைந்த முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியனின் மகளான தமிழச்சி, ராணிமேரி கல்லூரியில் பன்னிரண்டு ஆண்டுகள் ஆங்கிலப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். முழுநேர அரசியலுக்காக தனது பேராசிரியர் பணியைக் கைவிட்ட தமிழச்சி, விருதுநகர் மாவட்ட மல்லாங்கிணறு கிராமத்தில் பிறந்து, தற்போது சென்னை நீலாங்கரையில் வசித்து வருகிறார். அவரை "இனிய உதயத்துக்காக நாம் சந்தித்தபோது...

மல்லாங்கிணற்று மண்ணிலும், நீலாங்கரை மண்ணிலும் உங்கள் பதிவுகள் எப்படி இருக்கின்றன?

என்னுடைய மண் வாசமும், எனக்கான மனிதர்களும் நிறைந்த இடம் மல்லாங்கிணறு. நீலாங்கரையோ ஒருவகையில் இன்னமும் முழுதாய் நகரமயமாகாத ஒரு அழகிய பகுதி. காற்று, வெளி, கடலோர மனிதர்கள் என கொஞ்சம் புறநகரப் பகுதிக்கான அடை யாளங்களை நீலாங்கரை மிச்சம் வைத்திருக்கிறது. அதனால் நீலாங்கரை என் நெஞ்சுக்கு கொஞ்சம் நெருக்கமாயிருக்கிறது. மல்லாங்கிணறு- நீலாங்கரை இரண்டிலுமே நீர் இருக்கிறது. இவ்விரு பகுதிகளிலும், நீர் மாதிரியே என் வாழ்க்கை தெளிவாக இருக்கிறது.

உங்கள் மல்லாங்கிணற்று மலரும் நினைவு களைப் பகிருங்களேன்?


என் அம்மாவுக்கு பூர்வீகம் சிவகாசி. அப்பாவுக்கு பூர்வீகம் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி. இரண்டு பேரும் மல்லாங்கிணறில் ஆசிரியர்களாக தங்கள் வாழ்க்கையைத் தொடங்கினார்கள். ஒரு வகையில் மல்லாங்கிணறு என் அப்பாவை தத்தெடுத் துக்கொண்டது என்று சொல்லலாம். அப்பா இறந்த சமயம், "மல்லாங்கிணறு தன் மகனை நினைக்கிறது என்று ஒரு கவிதை எழுதினேன். அந்த ஊரே அப்பாவை நேசித்து எழுதுவது மாதிரியான கவிதை அது. நான் பிறந்ததும் அந்த ஊர்தான். அப்பா- அம்மா எனக்கு வைத்த பெயர் சுமதி. செமதின்னுதான் என்னை ஊரே கொண்டாடும். ஒன்னாப்பு, மூனாப்பு அந்த ஊரில்தான் படிச்சேன். அஞ்சாப்புக்கு பிறகு விருதுநகரில் படித்தேன். மல்லாங்கிணற்றோடும் அங்கே என்கூட படித்த அம்பி, கொட்டாப்பு, லச்சுமி, சிலம்பாயி, ஈஸ்வரி, குருவாச்சி, வேளாங்கன்னி இவர்களோடும் எனக்கு இன்னமும் தொடர்பு இருக்கிறது. குருவாச்சி படிப்பை எல்லாம் நிறுத்தி விட்டு ஆடு, மாடு மேய்க்கிறாள். மல்லாங்கிணறை எல்லாருக்கும் தெரியறமாதிரி செஞ்சிருக்கு சுமதின்னு மகிழ்ச்சியில அவள் இருக்கிறாள். விருதுநகரில் என் பள்ளிப் படிப்பும், மதுரையில் கல்லூரிப் படிப்பும் அமைந்தது.

உங்கள் குடும்பம் பற்றிச் சொல்லுங்களேன்?

என் கணவர் சந்திரசேகர் ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி. நான் எழுதுவதற்கான அத்தனை இடத்தையும்
அவர்தான் கொடுக்கிறார். என் சிறகுகள் விரிய அவர் வானமாக இருக்கிறார். என் மூத்த மகள் சரயூ அமெரிக்காவில் எம்.எஸ். படித்திருக்கிறார். இரண்டா வது மகள் நித்திலா, பிளஸ்டூ படிக்கிறார். பெரிய மகளுக்கு கவிதையில் ஆர்வம் இருக்கிறது. அவள் எழுதியதை, கவிதை மாதிரி எழுதுகிறாய் என்று சொல்லியிருக்கிறேன். இது அப்பா எனக்கு சொன்னதை நினைவுபடுத்துகிறது. நான் முதன்முதலில் கவிதை என்று எழுதிக் காட்டியதை, "கவிதை மாதிரி தான் எழுதியிருக்கே என்றார். என் முதல் கவிதையில் தொடங்கிய இலக்கிய தாகம், கல்லூரியில் "அருவி என்ற இலக்கிய இதழைக் கொண்டுவரும் அளவிற்கு வேகமெடுத்தது. அதுதான் இன்றளவும் தொடர்கிறது.

நீங்கள் முதன்முதலில் "கவிதை மாதிரி&ஹல்ர்ள்; எழுதியதற்கும், தற்போது எழுதும் கவிதைகளுக்கும் இடையிலான தூரத்தை எப்படி உணர்கிறீர்கள்?

இப்போது எனது கவிதைகளில் மொழி கொஞ்சம் இறுக்கம் அடைந்திருக்கிறது. கவிதையைப் பொறுத்த வரைக்கும் அந்த வடிவம் இறுக்கமாகவும், சுருக்கமாக வும் ஒரு செட்டாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னு டைய விருப்பம். கவிதை அப்படி யாகப்பட்ட ஒரு வடிவம்தான். மொழியிலேயே மிகப்பெரிய சவால்களை உருவாக்குவது கவிதைகள்தான். கட்டுரையோ, சிறுகதையோ என்றால் விவரித்து எழுதிக்கொண்டே போகலாம். ஒரு சொல்லுக்குள், ஒரு வாக்கியத் துக்குள் ஒரு பெரிய கடலைத் திணிப்பதுபோலதான் கவிதை என்பதால், அது படைப்பாளிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிற விசயம்.

என்னுடைய முதல் கவிதை யான "மாரியை நான் கவிதை என்று சொல்லமாட்டேன். ஒரு நீண்ட மனப்போக்கின் வடிவம் என்றுதான் சொல்வேன். இன்று வரைக்கும் நான் எழுதினவை எல்லாம் கவிதை மாதிரிதான்; கவிதை கிடையாது. இதுதான் கவிதை; இதுதான் சிறந்த கவிதைக் கான இலக்கணம் என்று இது வரைக்கும் எதுவுமில்லை. அப்படி வரையறுக்கவும் முடியாது. அதே சமயம் இப்போது எனக்கு இறுக்கமாக ஒரு தேர்ந்த மொழி யில் சொல்லக்கூடிய லாவகம் கிடைத்திருக்கிறது என நான் நினைக்கிறேன்.

எந்த கோட்பாடுகளை முன்வைத்து உங்கள் கவிதைத் தளம் இயங்குகிறது?

ஒன்றுமே கிடையாது. நான் எழுதுகிற போது, எந்தக் கோட்பாடு சார்ந்தும் என் கவிதை இருக்காது. அப்படி அது இருக்கவேண்டிய அவசியமும் இல்லை. அதேபோல் இது பெண்ணியக் கவிதை, இது மண் சார்ந்த கவிதை என்று சொல்கிறார்கள். அப்படியெல்லாம் நான் எண்ணிக்கொண்டு எதையும் எழுதுவதில்லை. இன்றைக்கு உட்கார்ந்து ஒரு மண்சார்ந்த கவிதை எழுதுவோம், இன்றைக்கு ஒரு பெண்ணியக் கவிதை எழுதுவோம் என்று செய்தால் அது கவிதை அல்ல. அது செயற்கையாக செய்யப்படுவது. கவிதை அந்த கணத்தில் மலர்வது. அதுவே தன் பாடுபொருளையும் வடிவத்தையும் சொற்களையும் தேர்ந்தெடுத்துக்கொள்கிறது.

தமிழ் இலக்கியத்தில் இருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கில இலக்கியத்தில் இருந்து தமிழுக்கும் ஒன்றை மொழிபெயர்க்கச் சொன்னால் அது எதுவாக இருக்கும்?

ஆங்கிலத்தில் நான் தலை சிறந்த ஆன்மா என்று நினைப்பது ஷேக்ஸ்பியரின் நாடகங்கள். எனக்கு அவற்றை மொழி பெயர்க்க விருப்பம். "கீட்ஸ் மற்றும் "சில்வியா கவிதைகளை மொழிபெயர்க்கவும் ஆசையுண்டு. தமிழில் இருந்து நான் ஆங்கிலத்திற்கு கொண்டு போகவேண்டும் என்று இந்த கணம் நினைப்பது, ஈழத்தில் போர்புரிந்த பெண் போராளி களின் கவிதைகள். "பெயரிடாத நட்சத்திரங்கள் என்று அது "விடியல் வெளியீடாக வந்திருக்கிறது. அந்தத் தொகுப்பில் முழுக்க எந்த போராளிகளுக்கும், எந்த கவிஞர்களுக்கும் பிறந்த தேதி கிடையாது. எல்லா கவிஞர்களுக்கும் இறந்த தேதி மட்டும் இருக்கிறது.

எங்கெங்கோ பிறந்து போராளி களாய் போர்க்களத்திற்கு வந்தாலும் அந்த உக்கிரமான சூழ்நிலையிலும் அவர்களுக்குள் ரசனை இருந்திருக்கிறது. அவற்றை கவிதையாக வடித்திருக்கிறார்கள்.

இது மிக சமீபத்தில் வெளிவந்த மிக முக்கியமான புத்தகம். இதை ஆங்கிலத்திற்கு கொண்டுபோகும் போது உலகத்தின் ஒட்டுமொத்த கவனமும், அதன்பால் ஈர்க்கப்படும். அவர்களுடைய உணர்வு பகிர்ந்து கொள்ளப்படும் என்று நான் நினைக்கிறேன்.

முனைவர் பட்ட ஆய்வுக்கு தாங்கள், புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களின் ஆங்கிலப் படைப்புகளில் "அவர்தம் அலைந்துழல்வு உணர்வு என்ற தலைப்பை எடுத்துக்கொண்டது ஏன்?

ஐம்பது ஆண்டுகால போராட்டம் ஈழப்போராட்டம். எண்பதுகளில்தான் தமிழகத்தில் மிகப்பெரிய கவனத்தை ஏற்படுத்தியது. ஈழத்தின் கறுப்பு ஜூலை தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நான் கல்லூரியில் அடியெடுத்து வைத்த முதல் வருடம் அது. அப்போதிருந்தே ஈழத் தமிழர்களின் போராட்டங்களை கவனித்து வருகிறேன். அந்த போராட்டம் உச்சகட்டமாக மாறியபோது நான் முடிவெடுத்தேன். என்னுடைய முனைவர் பட்ட ஆராய்ச்சி என்பது இது சம்பந்தமாகத்தான் இருக்க வேண்டும் என்று. அதிலும் குறிப்பாக ஈழத் தமிழர் களின் ஆங்கிலப் படைப்புகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று விரும்பினேன். ஏனென்றால் ஈழத்து தமிழ் படைப்புகள் குறித்து பரவலாக எல்லாருக்கும் தெரியவந்திருக்கிறது. ஆங்கிலத்தில் ஆங்கிலப் படைப்பாளிகள் குறித்து ஆய்வு செய்யும்போது ஒரு சர்வதேச கவனம் கிடைக்கும். அதனால்தான் என்னு டைய ஆய்வு படிப்புக்கு, புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களின் ஆங்கிலப் படைப்புகளில் "அவர்தம் அலைந்துழல்வு உணர்வு என்று தலைப்பிட்டேன். ஈழத்துப் படைப்பாளிகள் ஆங்கிலத்தில் மிகத் திறம் பட இருக்கிறார்கள் என்பதைத் தெரிவிக்கும் நோக்கில் தான் அந்தத் தலைப்பைத் தேர்ந் தெடுத்தேன். அந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்த பிறகு எந்த இடத்தில் இருந்து ஆய்வை தொடங்குவது என்று நினைத்தேன். 2003, 2004- ஆம் ஆண்டில் ஈழத்தில் பிரச்சினைகள் அதிகமாக இருந்த காலகட்டம். அதனால் ஈழத்தில் சென்று ஆய்வு செய்வது என்பது அடிப்படை சாத்தியம் இல்லாத காரியம். என் னுடைய களமும் புலம்பெயர்ந்து வாழுகின்றவர்களின் கவிதைகள் பற்றியதுதான். அதனால் பரவலாக பார்க்கிறபோது புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் வாழும் கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் ஆகிய இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்தேன். புத்தகம் மூலமாக அறி வதைவிட ரத்தமும் சதையுமாக அவர்களைப் பார்க்கிறபோது, அவர்களின் பாடல்களைக் கேட்கிற போது, அவர்கள் ஏன் ஆங்கிலத் தில் இந்தப் பாடல்களை கொண்டு வரவேண்டும் என்று நினைத் தார்கள் என்பது பற்றியெல்லாம் ஆய்வு செய்தேன். எர்னஸ்ட் தளையசிங்கம் மெக்கின்டையர் எனும் நாடக ஆசிரியர் நாடகத்தின் மூலம் தனது ஈழத்துப் போராட் டத்தை வெளிப்படுத்தியவர்.

அவர் இலங்கையில் இருந்து எழுதிய நாடகங்களையும், புலம்பெயர்ந்த பின்னர் எழுதின நாடகங்களையும் பார்க்கும்போது, முழுக்க ஈழப் பிரச்சினையை முன்வைத்துதான் நாடகங்களை எழுதியிருக்கிறார். இந்த குரல் திசையெட்டும் எதிரொலிக்குமா? இது உலகின் கவனத்தை ஈர்க்குமா? என்ற ஏக்கத்தின் அடிப்படைதான் இந்த ஆய்வு.

உங்கள் எழுத்துகள் சலிப்பை ஏற்படுத்தியது உண்டா?

"மே-18 என்ற தலைப்பில் முள்ளிவாய்க்கால் சம்பவம் குறித்து ஒரு கவிதை எழுதினேன். அந்தப் பிரச்சினைகளை அறிந்தபோது என்ன எழுதுவது என்ற விரக்தியில் இருந்த சமயத்தில்தான் அந்தக் கவிதை எழுதினேன். முள்ளிவாய்க்கால் துயரத்தைச் சொல்லும் அந்தக் கவிதை, "அடுத்த வேளை சாப்பிடத் தான் வேண்டியிருக்கிறது என்று முடியும். இதுதான் நிதர்சனம். இதனால் சமயங்களில் ஒரு சலிப்பு ஏற்படுகிறது. என்ன எழுதுகிறோம்- நம்ம எழுத்தால் ஒரு சின்ன முன்னகர்வைக்கூட கொண்டுபோக முடியவில்லையே என்ற சலிப்பு ஏற்படுகிறது. இந்த எழுத்தினால் என்ன இருக்கிறது என்ற வெறுமை உணர்வு வந்து, மூன்று மாதங்கள் எதுவும் எழுதா மல் இருந்தேன். நான் களப் பணியாளி கிடையாது. எவ்வளவோ விஷயத்தைப் பேசலாம். ஆனால், நான், களத்தில் இறங்கும் செயல்பாட்டாளராக இல்லை.

அதற்கான சூழல் எனக்கு இல்லை. இதனால் சிலரின் கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாமல் மவுனமாக நிற்கவேண்டியதிருக்கிறது. ஒருவித தார்மீக அறம் என்னை குற்ற உணர்ச்சியில் ஆழ்த்துகிறது. ஈழத் துயரத்திற்கு நீ களத்தில் என்ன செய்தாய்? என்று என் மனசாட்சியே கேட்பதால் குற்ற உணர்ச்சியில்தான் இன்னும் இருக்கிறேன்.
நீங்கள் சாதிக்கவேண்டும் என்று நினைப்பது?

வெளிச்சம் படாமல் இருக்கும் பெண் கவிஞர்களுக்காக ஏதாவது செய்யவேண்டும் என்று நினைக் கிறேன். செ. பிருந்தா, மு. சத்யா, சக்தி ஜோதி, கு. உமாதேவி, கல்பனா என்று எத்தனையோ பெண் கவிஞர்கள் சிறப்பாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வெளிச்சம் அதிகம்படாமல் இருக் கிறார்கள். அவர்களின் படைப்பு கள் குறித்த புத்தகம் கொண்டு வரலாம் என்றிருக்கிறேன். லதா ராமகிருஷ்ணன் எழுதுகிறார், மொழிபெயர்க்கிறார், களப்பணி யாளராக இருக்கிறார். ஆனால் அவர் அவ்வளவாக பரவலாக அறியப்படவில்லை. அப்படியிருந் தும் தனக்கான விஷயங்களை
அவர் எப்போதும்போல் செய்து கொண்டே இருக்கிறார்.

உங்களின் கவிதைகள் வட்டார வாழ்வியல் சார்ந்தே இருக்கிறது. இம்மாதிரியான கவிதைகளை எழுதத் தூண்டியது எது?

என் ஊரின் கொத்தனாரம்மா, நூறு நாள் வேலை செய்யுற அம்மா, எலந்தை அடை செய்யும் அம்மா.. என்று எனக்கு தெரிந்த எங்கள் ஊர்ப் பெண்களிடமிருந்து தான் நான் எல்லாவற்றையும் எடுத்துக் கொள்கிறேன். நான் வாக்கிங் செல்வதை கேலி செய்வார்கள். "நடக்கிறதுக்குன்னு வர்றியாப்பா என்று கேலி செய்வார்கள். உரிமையோடு வர்க்கத்தை அவ்வளவு அழகாக கேலி செய்வார்கள். "அதெல்லாம் பாத்தா நாங்க இங்க உட்கார்ந்து வேல பாத்துக்கிட்டு இருக்க முடியுமா. செமதி வருதுங்குறதுக் காக நான் மாத்திக்க முடியுமான்னு சொல்லும்போது முகத்தில் அறையும் உண்மையாக இருக்கும். அங்கிருந்துதான் என் படைப்பு ஆரம்பமாகும். இளம்பிராயத்தில் எங்க ஊர் பாலத்தைக் கடக்கும் போது அங்கே கொஞ்சம் நேரம் அமர்ந்துவிட்டுதான் செல்வேன். என்னுடைய தந்தையை இழந்த சமயத்தில், நான் அப்படி பாலத் தில் அமர்ந்திருக்கும்போது, என்னைக் கடந்து போகிறவர்கள் எல்லாரும், "மனச விட்றாதப்பா, மனச விட்றாத, மனச விட்றாரதாத்தா என்று சொல்லிவிட்டுச் செல்வார்கள். அதற்கு ஈடான கவிதையை நான் பார்க்கவில்லை. பத்து வரியில் சொல்ல வேண்டியதை அந்த இரு வார்த்தைகளில் உணர்ந்தேன். அப்போதுதான் இந்த மக்களுடைய மொழியில் எழுதவேண்டும் என்று முடிவெடுத்தேன். சிலர் அதை கரிசல் இலக்கியம், பிற்போக்கு இலக்கியம், அது வெறும் தகவல்களின் தொகுப்பு என்றெல்லாம் சொல்லலாம். ஆனால் நான் அதிலிருந்துதானே வந்திருக்கிறேன். நான் அதைத்தானே பேசுகிறேன். மேலைநாட்டில் இருந்து ஆங்கிலத்தில் வேர்ட்ஸ் வொர்த் நாட்டுப்புறத்தைப் பற்றி எழுதினால் அவர் தலைசிறந்த கவிஞர் என்று கொண்டாடுவார்கள். நான் செவலக்காளையைப் பற்றியோ, வைக்கோல் போரையோ, மாட்டுச் சாணத்தைப் பற்றியோ எழுதினால், "இவர் இப்படித்தான் கிராமம் சார்ந்து மட்டும்தான் எழுதுவார். பெண்ணியம் சார்ந்த கவிதை எழுதுவது கிடையாது என்று விமர்சனம் வைப்பார்கள்.

வேரில் இருந்துதான் உண்மை யான படைப்பாக கவிதைகள் வருமென்று நம்புகிறேன்.

அப்படித்தான் என் கவிதைகள் வருகின்றன.

சமகால பெண்ணியக் கவிதைகள் குறித்த உங்கள் பார்வை என்ன? குறிப்பாக பெண்கள் எழுதிவரும் உடலரசியல் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

இதுவரை ஆண்களுக்கு மட்டுமேயான ஒரு தளம்; ஆண்கள் மட்டுமே பேசிவந்த ஒரு விஷயம்; ஆண்கள் மட்டுமே பகிர்ந்துகொள்ள வேண்டிய விஷயம் என்று இருந்த ஒன்றை முற்றிலுமாக உடைத்தெறிந்திரு கிறார்கள். ஆனால் இது ஒன்றும் புதிது கிடையாது. ஔவையார் சொன்னதையும், ஆண்டாள் சொன்னதையும், வெள்ளிவீதியார் சொன்னதையும்விட இது ஒன்றும் புதிதல்ல. அப்போது முதலே இருந்த ஆதிக்குரல்தான் இது. ஆதியில் பெண், தன்னுடைய காமத்தையும், காதலையும் வெளிப் படையாகச் சொல்லி யிருக்கிறாள். ஒரு படைப்பாளியை இப்படி எழுதுங்கள்- அப்படி எழுதுங்கள் என்று சொல்ல முடியாது. உடலரசியல் குறித்து ஒரு ஆண் எழுதினால் விமர்சனம் எழுவது கிடையாது. அதே பெண் எழுதினால் அவளது நடவடிக்கையோடு அது ஒப்பிடப் படுகிறது. அவர் குடும்பப் பெண்தானா என்று சந்தேகம் எழுப்புகிறார்கள். அப்படித்தான் நிலைமை இருக்கிறது. இது மாறவேண்டும். ஒன்றை மறந்து விடக் கூடாது. ஆண்டாளைவிட காமத்தை அவ்வளவு வெளிப்படையாக, அதேசமயத்தில் கவித்துவமாக இதுவரை யாரும் சொல்லவில்லை.

கிராமத்து சிறு தெய்வங்கள் உங்களின் படைப்புகளில் அதிகம் வருவது ஏன்?

என் சிறு பிராயம் தொட்டு தொடர்ந்து என்னுடன் பயணம் செய்யும் தோழி வனப்பேச்சி. அவளை நான் மற்றவர்களைப்போல் குலதெய்வமாகப் பார்க்க வில்லை. என்னுடைய உருவத்தின் மறு உருவமாகவே அவளை நினைக்கிறேன். நான் எப்படியெல்லாம் இருக்க வேண்டுமென்று ஆசைப்படுகின்றேனோ, அப்படியெல்லாம் என்னால் இருக்க முடியவில்லை. ஆனால் பேச்சி இருக்கிறாள். அவளை நான் சுதந்திரத்தின் ஒரு பிரதிபலிப்பாகவே பார்க்கிறேன். மழை, காற்று எல்லாவற்றையும் தாங்கி நிற்கும் அவளது வல்லமை கண்டு அவள்மீது அலாதியான அன்பு வைத்திருக்கிறேன். பெண்மையின் முழு சுதந்திரத்திற்கான குறியீடு வனப்பேச்சி. என் வேர்கள் நிரவியிருக்கின்ற கிராமம் விட்டு, லௌகீக இருத்தலுக் கான இடமான இந்த நகரத்தில் என் அலைந்துணர் வையும், ஒன்றாமையையும், நிர்கதியையும், பகிர்ந்து கொள்ளும் சக பயணி. அவளுடான என் உறவு பகுத்தறிவின் ஆய்தலுக்கு உட்படாத ஒரு நறுமணமாய் என் கவிதைகளில் ஊடாடி இருப்பதாய் நான் உணர்கிறேன்.

சமீபகாலமாக அரங்கச் செயல்பாடுகளில் அதீத ஆர்வம் காட்டிவருகிறீர்களே?

அடிப்படையில் நான் பரதக்கலைஞர். பள்ளிப் பருவத்திலேயே எனக்கு நாடகப் பயிற்சி இருக்கிறது. மல்லாங்கிணறிலிருந்து சென்னைக்கு இடம்பெயர்ந்த பின்னர்தான் எனக்கு நவீன நாடகம் அறிமுகம். ஆங்கில நாடகங்களைவிட தமிழ் நாடகங்கள்தான் எனக்குப் பிடித்தன. அப்போது தமிழ்நாடக அரங்கில் இருக்கும் பிரசன்னா ராமசாமி, அ. மங்கை, வெளி.ரங்கராஜன் போன்றோரின் பரிச்சயம் கிடைத்தது. இதுவரை ஆறு நாடகங்கள் நடித்திருக்கிறேன்.

அ. மங்கை இயக்கத்தில் கவிஞர் இன்குலாப் எழுதிய குறிஞ்சிப்பாட்டு, பிரசன்னா ராமசாமி இயக்கத்தில் பாரதியார் கவிதைகள்.... இதில் நானும் நடிகை ரோகிணியும் நடித்தோம். வெளி. ரங்கராஜன் இயக்கத்தில் கு.ப.ரா. எழுதிய அகலிகை, கு. அழகிரிசாமி எழுதிய "வஞ்சமகள்&ஹல்ர்ள்; முதலான நாடகங்களில் நடித்தேன். "வஞ்சமகள் நாடகத்தில் நான் சூர்ப்பனகையாக நடித்தேன். அதேபோல் "கூத்துப்பட்டறை ஜெயராமன் இயக்கத்தில், "மகாத்மா காந்தியின் கடைசி ஐந்து நிமிடங்கள் நாடகத்தில் நடித்தேன். ஜெயராமன் தற்போது ஷேக்ஸ்பியரின் "மேக்பத் பற்றி தமிழில் முதல்முறையாக நாடகம் செய்யவிருக்கிறார். தமிழ் நாடகங்களில் இது மிகப்பெரிய முயற்சி. எனக்குத் தெரிந்து ஷேக்ஸ்பியரை தமிழில் மிகபெரிய அளவில் கொண்டு வரும் முயற்சி இதுதான். ஷேக்ஸ்பியரின் "மேக்பத் நாடகத்தில் நான் லேடி மேக்பத்தாக நடிக்கிறேன். அதுதான் அந்த நாடகத்தின் பிரதான கதாபாத்திரம். வழக்கம்போல தமிழ் நாடகங்களுக்கு புரலவலர்கள் கிடைப்பதில்லை.

ஆங்கில நாடகங்களுக்கு மட்டும் புரவலர்கள் நிறைய இருக்கிறார்கள். புரவலர்கள் கிடைக்காததால் நாடக ஒத்திகை முடிந்தும், அரங்கேறாமல் இருக்கிறது.

என்னைப் பொருத்தவரைக்கும் அரங்கம் என்பது ஒரு பெண்ணுக்கான வெளி. அங்கு உடல் குறித்த ஒரு சிந்தனை கிடையாது. ஆண் உடல், பெண் உடல் என்ற பாகுபாடு அரங்கத்தில் கிடையாது. அது ஒரு மனித உடல்தான். வேறு எல்லா இடத்திலும் பெண்ணாகப்பட்டவள் இப்படி உட்காரவேண்டும், அப்படி உட்காரவேண்டும் என்பது இருக்கும். ஆனால் அரங்கத்தில் அப்படியல்ல. எல்லாமே மனித உடல்கள்தான். அது ஒரு கட்டற்ற சுதந்திரத்தைக் கொடுக்கிறது.

கதாபாத்திரத்தின் வசனத்தை உச்சரிப்பது, உள்ளே நுழைவது, ஒத்திகை என்று ஒவ்வொன்றுமே நாடக நிகழ்வுகளுக்கு சமமானதுதான். அரங்கம் என்பதுதான் என்னுடைய இன்னொரு முகம். என்னுடைய இன்னொரு முகம் அப்படியாகத்தான் இருக்கவும் விரும்புகிறேன். ஷேக்ஸ்பியரின் அந்தக் காலத்து படைப்பில் சமகாலத்தன்மை இருக்கிறது. பொதுவாக நாடகத்திற்கு சமகாலத்தன்மை முக்கியம். லேடி மேக்பத் கதாபாத்திரத்தில் ஒத்திகை செய்தபோது எனக்குள் பல கேள்விகள் எழுந்தன. மாளாத குற்ற உணர்ச்சிக்கு ஆளாகி நிற்பாள் லேடி மேக்பத். எல்லாக் கொலைகளையும் செய்யச்சொல்லி கணவனைத் தூண்டிவிட்டு, கொலை செய்த கைகளைக் கழுவிக் கொண்டே இருப்பாள். "அரேபியாவின் அத்தனை வாசனாதி திரவியங்களாலும் என்னுடைய கைகளில் உள்ள ரத்தக் கறைகளைக் கழுவ முடியாது; என்பதுதான் அந்த நாடகத்தின் புகழ்மிகு வசனம். இந்த வசனத்தை நான் பேசி ஒத்திகை பார்த்தபோது, இலங்கையின் முள்ளிவாய்க்கால் சம்பவம்தான் நினைவுக்கு வந்தது. லேடி மேக்பத்தின் வசனம் ராஜபக்சே வுக்கும் பொருந்தும். எந்த வாசனைத் திரவியங்களாலும் அவரது கைகளைக் கழுவமுடியாது.

சந்திப்பு: அமுதா தமிழ்நாடன், கதிரவன்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற