திருக்குறள்

தப்பு செஞ்சா தப்பே இல்லை!





வேலையில் தவறு செய்யும் ஊழியர்களை சகட்டுமேனிக்குத் திட்டித் தீர்ப்பது
அந்தக் காலம். தவறு செய்த ஊழியர் களிடம் தவறை உணர்த்தித் தட்டிக்
கொடுத்து, மீண்டும் அவர்கள் அந்தத் தவறை செய்ய முடியாதபடிக்கு
மாற்றுவது இந்தக் காலம். அப்படியானால் இப்போது தவறு செய்கிறவர்களை மேலதிகாரிகள் திட்டுவதும் தண்டிப்பதும் இல்லையா..?
''90 சதவிகிதம் குறைந்துவிட்டது. தவறு செய்த ஊழியர்களைத் தண்டிப்பது,
அபராதம் விதிப்பது என்கிற காலம் மலையேறிவிட்டது. தவறு செய்தவர்களை தனிமைப்படுத்துவதைவிட அவர்கள் செய்த தவறை உணரச் செய்வது
இப்போது பல இடங்களில் நடந்து வருகிறது'' என ஆச்சரியமான பதிலைச்
சொல்கிறார் 'மைண்ட் டைனமிக்ஸ் சென்டர்' நிறுவனத்தின் இயக்குனர் முத்தையா ராமனாதன். இந்த புதிய சிந்தனை குறித்து அவர் மேலும் சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்...
''அரைத்த மாவையே அரைக்கும் ஊழியர்கள் பெரும்பாலும் தவறு செய்வதில்லை. புழக்கத்தில் உள்ள பழைய நடைமுறைகளையே நூல் பிடித்த மாதிரி செய்து ஒப்பேற்றுபவர்களாக இவர்கள் இருப்பார்கள். தங்கள் வேலையை இன்னும்
திறமையாகச் செய்வது பற்றி இவர்கள் கனவில்கூட நினைக்க மாட்டார்கள்.
இவர்களால் நிறுவனத்துக்கு எந்த வளர்ச்சியும் ஏற்படாது. மாறாக, புதிய புதிய முயற்சிகளில் ஈடுபட்டு, அதனால் ஏற்படும் தவறுகளிலிருந்து கற்றுக் கொள்பவர்கள் வித்தியாசமாக யோசித்து வெற்றி காண்பவர்களாக இருப்பார்கள். கற்றலின் ஓர் அங்கமாக தவறுகளை அங்கீகரிக்க வேண்டும் என்பதை நிறுவனங்கள் இப்போது உணரத் தொடங்கி இருக்கின்றன. அதன் விளைவாக 'மேக் மிஸ்டேக்' எனும் புதிய கான்செப்ட் உருவாகியுள்ளது.




உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனமொன்று தன் பணியாளர்கள் தேர்வின்போது பிற நிறுவனங்களிலிருந்து தவறு செய்து நீக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. காரணம், அவர் ஏற்கெனவே செய்த தவறை மீண்டும் ஒருமுறை செய்ய மாட்டார் என்பதால்தான். தற்போது சில பன்னாட்டு நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தில் உள்ள குழுக்களில் ஏதாவது ஒன்றில் தவறுகளே வரவில்லை என்றால் அக்குழுவில் உள்ள நபர்களை வேறு குழுவுக்கு மாற்றிவிடுவார்கள். தவறுகள் நடக்கவில்லை எனில் அங்கே புதிய முயற்சிகள் எதுவும் நடக்கவில்லை என்றுதான் அவர்கள் நினைக்கிறார்கள்.
நிறுவனத்தின் உயர் பொறுப்புகளில் இருக்கும் பலரும் தங்களது தொடக்க
காலத்தில் பல்வேறு தவறுகளைச் செய்தவர்கள்தாம். ஒவ்வொரு நிறுவனமும் வாடிக்கையாளர் சேவை மையங்கள் வைத்திருக்கக் காரணம் 'நிறுவனத்
தயாரிப்புகளில் நிச்சயம் தவறுகள் வர வாய்ப்பு உண்டு' என்பதை
உணர்ந்ததால்தான். வருடாந்திர பராமரிப்புக் கட்டணம் என்பதே
 தவறுகளைக் கண்டுபிடித்து களையும் செலவினங்களுக்காகவே
வசூலிக்கப்படுவதுதானே'' என்று சொன்ன முத்தையா ராமநாதன்,
ஊழியர்கள் செய்யும் தவறுகளை ஒரு நிறுவனம் எப்படி அணுக
 வேண்டும் என்பது பற்றியும் ஒவ்வொரு பாயிண்ட்டாக விளக்கினார்.

வேலையில் தவறு செய்தால் உடனடியாக அதன் தாக்கத்தை
அறிந்து கொண்டு தலைமையிடம் தெரிவித்துவிடுவது நல்லது. மறைக்காமல் சொல்லப்படும் தவறுகளுக்காக ஊழியர்கள் தண்டிக்கப்பட மாட்டார் கள் என்கிற உறுதிமொழி கொடுக்கப்படும் பட்சத்தில் ஊழியர்கள் எந்தத் தயக்கமும் இன்றி தானாகவே முன்வந்து சொல்வார்கள்.

தவறு நடந்தால் அதைச் செய்தது யார் என்கிற ஆராய்ச்சியில்
 இறங்குவதற்குப் பதில், அதனால் ஏற்படும் பாதிப்பை சரி செய்வதில்
 அதிகக் கவனம் செலுத்த வேண்டும்.

தவறு செய்த ஊழியர்களை மன்னித்து விட்டு, அந்தத் தவறு
மீண்டும் நடக்காமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளில் இறங்க
வேண்டும்.

தவறு செய்த ஊழியர்களை பிற ஊழியர்கள் முன்பு திட்டுவதோ,
 விமர்சிப்பதோ கூடாது. இதனால் அந்த ஊழியர் மனதளவில்
பாதிக்கப்படுவதோடு, நிர்வாகத்தின் இமேஜும் கடுமையாகப் பாதிப்படையும்.

தவறு செய்யும்போது சில புதிய அனுபவங்கள், சிந்தனைகள் கிடைக்கலாம். அதனால் சில புதிய யோசனைகள், சிந்தனைகள் நமக்குத் தோன்றலாம்.

தவறு நடந்துள்ளது என்றால் அது ஏன் நடந்தது என்ற நிகழ்வைத்தான்
 பார்க்க வேண்டுமே தவிர, காரணமானவர்களை கை காட்டுவது
வளர்ச்சிக்கு உதவாது.

நிறைய தவறு செய்தவர்கள் பெரிய அனுபவ சாலிகளாக இருப்பார்கள்.
 நிறைய முறை தவறு செய்த வர்கள் மிகச் சிறந்த வழிகாட்டிகளாக இருப்பார்கள். இப்படிப்பட்ட ஒருவரை வைத்து தவறே செய்யாத பல நூறு பேரை நம்மால் உருவாக்க முடியும்.

சிக்கலான பல பிரச்னைகளுக்கு அபத்தமாக பேசுபவர்களிடமிருந்துகூட
 தீர்வு கிடைக்கலாம். எனவே எதையும் வீண் என்று ஒதுக்கித் தள்ளத்
தேவையில்லை.

தவறு நடந்துவிட்டது என்பதை நாம் கண்டுபிடித்துச் சொன்னால்
மட்டும் போதாது; அதற் கான தீர்வையும் நாம் கண்டுபிடித்துச் சொன்னால்
 மட்டுமே நமக்கு பேரும் புகழும் கிடைக்கும்.

தவறே நடக்காத இடத்தில் எல்லோருமே நல்லவர்களாக இருக்கிறார்கள்.
 ஆனால் தவறு நடக்கும் இடத்திலிருந்துதான் எதிர்காலத்தின் தலை விதியை நிர்ணயிக்கும் தகுதியான தலைவர்கள் உருவாகிறார்கள்.
எனவே தவறுகளே நிறுவனங்களை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துகிற நெம்புகோல் என்பதை மட்டும் மறந்துவிட வேண்டாம்!


- என்.திருக்குறள் அரசி, படம்: என்.விவேக்.
-  நன்றி-விகடன்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற