தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் செலுத்தும் பொதுக்கூட்டம் காஞ்சீபுரம் கச்சபேஸ்வரர் கோவில் அருகே நேற்று இரவு நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர் கலந்துகொண்டு பேசினார்.
அவர், ‘’காஞ்சீபுரத்தில் எத்தனையோ கூட்டங்களில் பேசி இருக்கிறேன். அண்ணாவின் கட்டளையை ஏற்று, பேசிய கூட்டங்கள், நடத்திய ஊர்வலங்கள் இவற்றையெல்லாம் கண்டிருக்கிறேன். அத்தனை பேரும் ஒன்று சேர்ந்து நடத்தினால் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு பதிலாக,
கடல்போல் காஞ்சீபுரத்தில் மொழிப்போர் தியாகிகள் கூட்டம் நடைபெறுகிறது என்பதை பார்க்கும்போது, புலிகேசியை வீழ்த்துவதற்காக போர்க்கோலம் பூண்டு புறப்பட்ட காஞ்சித் தலைவர் நரசிம்மவர்மனுடைய பட்டாளங்கள் போல் நீங்கள் எல்லாம் எழுச்சியுடன் வீற்றிருக்கிற காட்சியைப் பார்க்கிறேன்.
நாம் ஆட்சியை இழந்தாலும் தோற்றுப்போனாலும், மக்கள் நம்பக்கம்தான் இருக்கிறார்கள், அவர்கள் என்னை மாத்திரம் அல்ல எனது தலைமையில் உள்ள இந்த கழகத்தையும் கைவிட மாட்டார்கள் என்ற உறுதியோடு உங்கள் முன்னால் நிற்கிறேன்.
இந்தி ஆதிக்கம் வேண்டாம், தமிழ் காப்பாற்றப்பட வேண்டும் என்பது திராவிட முன்னேற்ற கழகத்துக்கு மாத்திரம் உரிய கொள்கை என்று நான் சொல்லமாட்டேன்.
பெரியாரால் வளர்க்கப்பட்டவர்கள், அண்ணாவின் வழிவந்தவர்கள் என்ற அந்த ஒன்றை ஏற்றுக்கொண்டு மொழிப்போரில் மொத்த தமிழகமும் இன்றைக்கு குதிக்குமேயானால், இறுதி லட்சியம் நிச்சயமாக நிறைவேறும்.
திராவிட முன்னேற்ற கழகம் என்ன சொல்கிறது என்றால், இந்தியாவில் உள்ள எல்லா மாநில மொழிகளும் மத்தியில் ஆட்சி மொழியாக ஆக்கப்பட வேண்டும். தமிழ் உள்ளிட்ட எல்லா மாநில மொழிகளும் இந்தியாவின் ஆட்சி மொழியாக ஆக வேண்டும்.
எது சிக்கல், எப்படி முடியும் என்று கேட்பவர்கள் என்ன சொல்கிறார்கள்? இந்தியாவில் உள்ள மாநில ஆட்சி மொழிகளை எல்லாம், மத்தியில் ஆட்சி மொழியாக்கினால், எப்படி தொடர்பு கொள்ள முடியும்? என்று கேட்கிறார்கள்.
இதைத் தெலுங்கர் ஏற்றுக்கொண்டார்களா? கர்நாடகாவினர் ஏற்றுக்கொண்டார்களா? என்று கேட்டால், அவர்கள் ஏற்றுக்கொள்கின்ற வரையில் நாம் பொறுத்திருப்போம்.
ஆனால் அவர்கள் ஏற்றுக்கொள்கின்ற அளவுக்கு முதல் துளியாக மத்தியில் ஆட்சி மொழியாக தமிழ் மொழியை சிம்மாசனத்திலே உட்கார வைப்போம்.
மராட்டியர்களுக்கு அந்த உணர்வு வரும். மலையாளிகளுக்கு அந்த உணர்வு வரும். நம்மைவிட இதிலே அதிக உணர்வு பெற்றவர்களாக மலையாளிகள் முன்வருவார்கள். ஏனென்றால் முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் அவர்கள் காட்டுகின்ற வேகத்தையும், அவர்கள் கடைப்பிடிக்கின்ற தீவிரத்தையும் நாம் உணர்கிறோம்.
எனவே எல்லா வளமும் பொருந்திய, இலக்கிய வளம், இலக்கண வளம், கலைவளம், நாகரீகம் பண்பாடு, இவை அத்தனை வளங்களும் பொருந்திய தமிழ் மொழியை முதலில் மத்தியில் ஆட்சி மொழியாக ஆக்குங்கள், அதற்கு பிறகு வேண்டுமானால் உங்களுக்கு பிரியம் இருந்தால் யார், யார் தங்களை எல்லாம் அந்த வரிசையில் சேர்க்க வேண்டுமென்று எண்ணுகிறார்களோ, அவர்களையெல்லாம் சேர்த்துக்கொள்ளுங்கள்.
திராவிட இயக்கம், திராவிட முன்னேற்ற கழகம் என்றெல்லாம் அழைப்பது, ஏதோ பெரியார் கண்டுபிடித்த வார்த்தை என்பதால் அல்ல, அண்ணா கண்டுபிடித்த வார்த்தை என்பதால் அல்ல, நமது முப்பாட்டன் காலத்தில் இருந்து நாம் பழகி வருகிற வார்த்தை, ஒரு இனத்தின் பெயர். மானமுள்ள ஒரு இனத்தின் பெயர் என்பதை மறந்துவிடக் கூடாது.
அப்படிப்பட்ட பெயரை நம்முடைய இனத்துக்கு பெற்றிருக்கிற நாம், அந்த இனத்தின் சார்பாக நடைபெறுகிற எந்த இயக்கமானாலும், எந்த ஒரு நிகழ்ச்சியானாலும், அதிலே திராவிடம் முழங்குவதற்கு பெருமைகொள்ள வேண்டும். திராவிட நாடு திராவிடனுக்கே என்று ஒரு காலத்தில் கூறினோம். இப்போது இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு இவைகளை கருத்தில் கொண்டு, அண்ணாவே கைப்பட எழுதிய புத்தகத்தில் அண்ணா திராவிட நாட்டை கைவிட்டுவிடவில்லை, திராவிட இனத்தை கைவிட்டுவிடவில்லை.
நாம் திராவிட நாடு திராவிடருக்கே என்பதை கைவிட்டாலும், அந்த இனத்துக்கு உரியவர்கள் என்பதை அண்ணா அழுத்தம் திருத்தமாக கூறுகிறார். நான் அதைத்தான் இப்போது உங்களிடம் ஊட்டுகிறேன். திராவிடம் என்பது கற்பனைச் சொல் அல்ல. நம்முடைய இனத்தின் மானத்தைக் காப்பாற்ற நாம் கொண்டுள்ள உரமான கொள்கைகளுக்கு உறுதியான லட்சியங்களுக்கு ஆணி வேராக இருப்பதுதான் திராவிடம் என்பது அந்த முழக்கம்.
திராவிடம் என்பதை யார் எந்த இயக்கத்துக்கு நினைத்து வைத்துக் கொண்டாலும், நான் அவர்களை பாராட்டுகிறேன்.
நான் அவர்களை மதிக்கிறேன். ஆனால் திராவிடம் என்ற சொல்லை வைத்துக்கொண்டு, திராவிடர்கள் அல்லாதவர்களை மாத்திரம் அல்ல, திராவிடர்களையே யாரும் ஏமாற்றாதீர்கள். இவர்களும் திராவிடர்கள் என்று சொல்கிறார்கள் என்று நம்பி யாரும் ஏமாந்துவிடாமல், திராவிட மக்களாகிய நீங்கள் தமிழ் மக்களாகிய நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
உங்களையெல்லாம் நான் இப்போது பார்க்கும்போது, தேர்தலுக்கு முன்பு இல்லாத எழுச்சி எப்படி வந்தது என்று பார்த்தேன். அடிபட்டால்தானே தெரியும் என்று நீங்கள் சொல்லாமல் சொல்வது எனக்குப் புரிகிறது. வருகின்ற வழியெல்லாம் உங்களுடைய முழக்கங்கள், வருகின்ற வழியெல்லாம் நீங்கள் செய்த அலங்காரங்கள், இவை அத்தனையும் படிக்க வேண்டுமானால், இன்றைக்கு கிடைத்திருக்கும் தோல்வி, எங்களுக்கு அல்ல உங்களுக்கு. நீங்கள் தேடிக்கொண்ட தோல்வி.
கடையில் போய் சாமான் வாங்கும்போது அந்தத் தோல்வியின் கனம் உங்களுக்குத் தெரியும். ஆகவே தோற்றது கழகம் அல்ல. தோற்றது வாக்காளர்கள். தாங்கள் தவறு செய்ததை உணர்ந்த பிறகு வாழ்க்கையில் தவறே செய்ய மாட்டார்கள், வாழ்க்கை முழுவதும். அப்படிப்பட்ட ஒரு படிப்பை காஞ்சிபுரத்தில் உள்ள உங்களுக்கு மட்டுமல்ல, தமிழக மக்கள் அனைவருக்கும் கிடைத்துள்ளது.
அந்த பாடத்தை பெற்றுக் கொண்டிருக்கிற நீங்கள், அந்தப் பாடத்துக்கு மதிப்பளித்து எதிர்காலத்திலாவது இப்போது செய்த தவறை இனியும் செய்யமாட்டோம் என்ற உறுதியோடு உங்களையும் காப்பாற்றிக் கொண்டு, இந்த சமுதாயத்தின் எதிர்கால தலைமுறையையும் காப்பாற்றுங்கள்’’என்று பேசினார்.