மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சொந்த தொகுதி மக்களையே முதல்வர் சந்திக்காமல் இருப்பதா? மு.க.ஸ்டாலின்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சொந்த தொகுதி மக்களையே முதல்வர் சந்திக்காமல் இருப்பதா? என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் கூறியதாவது,
சென்னை மாநகரில் மழை வெள்ளத்தில் மிதக்கும் பகுதிகளை இன்று பார்வையிட்டேன். கொளத்தூர் சட்டமன்ற தொகுதி, ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளிலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தேன். மக்கள் படும் இன்னல்கள், சாலைகளில் கழிவு நீர் ஆற்றுப் பெருக்குப் போல் ஓடும் காட்சிகள் என்று ஒரு மழையைத் தாங்க முடியாத நிலையில் இன்றைக்கு சென்னை மாநகரம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. கன மழையில் சிக்கி போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி டூ வீலர்களில் செல்வோரும், கார்களில் பயணிப்போரும் திண்டாடும் காட்சிகள் மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கிற்கு அடையாளமாக இருப்பதை நேரில் பார்த்தேன். குடிநீரில் சாக்கடை கலக்கும் கொடூரத்தில் மக்கள் கொந்தளித்துப் போய் இருக்கிறார்கள். பல்வேறு தெருக்களும், நகர்களும் மழை நீரில் மூழ்கி கிடப்பதைப் பார்த்தால் ஏதோ சென்னை மாநகருக்குள் தனித் தீவு ஒன்று உருவாகி விட்டது போல் காட்சியளிக்கிறது. நகரின் முக்கிய சுரங்கப் பாதைகள் தண்ணீரில் மூழ்கி நிற்பதைப் பார்த்து இந்த அரசு துளியும் கவலைப்படவில்லை.
இப்படி பல வகையிலும் சென்னை மாநகரம் ஸ்தம்பித்து நிற்கிறது. மக்கள் தங்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்காமல் அல்லல்படுகிறார்கள். ஆங்காங்கே பெரும் சிரமத்திற்குள்ளாகியிருக்கிறார்கள். கொசு உற்பத்தி அதிகரித்து தொற்று நோய் பரவும் அபாயத்தில் சென்னை மாநகரம் சிக்கியிருக்கிறது. காலம் கடந்து அமைச்சர்கள் சிலரும், மேயரும் கேமிராக்களுக்கு போஸ் கொடுக்கச் செல்கிறார்களே தவிர, தேங்கிக் கிடக்கும் தண்ணீரை அப்புறப்படுத்தவும், மக்களுக்குரிய சுகாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் உளப்பூர்வமாக முன் வரவில்லை. ஆளுங்கட்சி கவுன்சிலர்களை எங்குமே காணவில்லை. வீடுகளில் மழை நீர் புகுந்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் கூட, முதலமைச்சர் ஜெயலலிதா கொடநாட்டில் இருந்தாலும் சரி, கோட்டையில் இருந்தாலும் சரி பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதில்லை என்பதில் தீர்மானமாக இருக்கிறார். தன்னைத் தேர்ந்தெடுத்த ஆர்.கே. நகர் சட்டமன்ற தொகுதி மக்கள் மழை பாதிப்பில் தத்தளிக்கின்ற இந்த நேரத்தில் கூட அவர்களை சென்று முதலமைச்சர் ஜெயலலிதா சந்திக்கவில்லை. ஒட்டுமொத்த மாநகராட்சி நிர்வாகமும் உருக்குலைந்து நிற்கிறது.
2011ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் சட்டமன்றத்தில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த முதல் நிதி நிலை அறிக்கையில் சென்னை பெருநகர வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற சிறப்பு நிதியாக 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதிலிருந்து ஒவ்வொரு வருடமும் 500 கோடி ரூபாய் ஒதுக்கி, இதுவரை சென்னை பெருநகர வளர்ச்சித் திட்டத்திற்கு மட்டும் 2500 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கியுள்ளதாக நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் சென்னை மாநகரில் உள்ள சாலை மேம்பாடு, தெரு மேம்பாடு, மழை நீர் வடிகால் உட்கட்டமைப்பை மேம்படுத்துவது போன்ற முக்கியப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டது.
ஆனால் இன்றைக்கு அதிமுக ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் வந்துள்ள இந்த மழை சென்னை மக்களை திணறடித்துள்ளது. அவர்களின் இயல்பு வாழ்க்கையை கிட்டத்தட்ட சூறையாடி விட்டது. அப்படியென்றால் சென்னை பெருநகர வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற ஒதுக்கப்பட்ட சிறப்பு நிதி 2500 கோடி ரூபாய் எங்கே போனது? இத்தனை ஆயிரம் கோடி செலவிடப்பட்டும் ஏன் சென்னை மாநகர மக்களை மழை நீர் பாதிப்பிலிருந்து காப்பாற்ற முடியவில்லை? ஒரே வரியில் பதில் சொல்வதன்றால் செயலிழந்த சென்னை மாநகராட்சியிடமிருந்தும், அதிமுக அரசிடமிருந்தும் இதை தவிர வேறு எதையும் மக்கள் எதிர்பார்க்க முடியாது. அதனால் தான் மக்கள் நிவாரணம் கோரி ஆங்காங்கே சாலை மறியலிலும், அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களை முற்றுகையிடுவதிலும் மும்முரமாக இறங்கியிருக்கிறார்கள். இது போன்ற சூழலில் அதிமுக அரசும், அதிமுக தலைமையில் இயங்கும் சென்னை மாநகராட்சியும் “சென்னை மாநகர வளர்ச்சிக்காக” ஒதுக்கப்பட்ட 2500 கோடி ரூபாய் சிறப்பு நிதிக்குரிய விளக்கத்தை மக்கள் மன்றத்தில் வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
சென்னை மாநகரம் மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழகத்திலும் மழை மற்றும் வெள்ள நிவாரண பணிகளில் அலட்சியம் காட்டும் அதிமுக அரசின் நிர்வாக சீர்கேட்டிற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஏற்கனவே கழக தோழர்கள் மழை மற்றும் வெள்ள நிவாரண பணிகளில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் ஈடுபட்டு வருவதை நான் அறிவேன் அதற்காக என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஆகவே இனிவரும் நாட்களிலும் அரசு முன் வரும் என்றோ, சென்னை மாநகராட்சி முன் வரும் என்றோ காத்திராமல் கழக தோழர்கள் ஆங்காங்கே மழை நீரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
உணவின்றி வாடும் மக்கள், சரியான சுகாதார வசதியின்றி தவிக்கும் மக்கள் அனைவருக்கும் மருத்துவ முகாம்கள், தங்குமிடங்கள், உணவிடங்கள் என்று அனைத்து வசதிகளையும் ஆங்காங்கே இருக்கும் கழக தோழர்களும், கழக நிர்வாகிகளும் செய்ய வேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்கட்சியாக இருந்தாலும் திராவிட முன்னேற்றக் கழகம் “மக்கள் தொண்டே மகேசன் தொண்டு” என்று செயல்படும் இயக்கம் என்பதை நிரூபிக்கும் வகையில், மக்கள் சேவையில் துளியும் சோர்வடையாது கழக நிர்வாகிகள் ஆங்காங்கே ஆர்வத்துடனும், அக்கறையுடனும் செயல்பட்டு மழை சேதத்திலிருந்து மக்களை காப்பாற்றுமாறு மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்