இன்று அறிஞர் அண்ணாவின் 104ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா - தமிழ் நாடெங்கும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது.
அண்ணா - ஓர் அரசியல் கட்சியை தொடங்கினார், ஆட்சியைப் பிடித்தார் - அவர் வெறும் அரசியல்வாதிதான் என்று எவரேனும் கணக்குப் போடுவார்களேயானால், அதைவிடத் தவறான கணிப்பு வேறு ஒன்றும் இருக்க முடியாது.
அவர் வெறும் அரசியல்வாதி என்றால் அவர் ஆட்சியையே தந்தை பெரியாருக்குக் காணிக்கை என்று சட்டப் பேரவையிலும் பிரகடனப்படுத்தியிருக்க மாட்டார்.
நாடாளுமன்றத்திற்கு சென்றபோதே தனது கன்னிப் பேச்சில், நான் திராவிடர் இனத்தைச் சேர்ந்தவன் (னுசயஎனையை ளுவடிஉம) என்று மிகப் பெருமை யோடு, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர் (ஏப்ரல் 1962).
தமிழ்நாட்டு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த போதுகூட குறுகிய காலத்தில் அரசியலில் நுழைந்து ஆட்சியைப் பிடித்து விட்டீர்களே என்று செய்தி யாளர்கள் கேட்டபோதுகூட அதனை மறுத்துத் தனது திராவிடர் இயக்கப் பாரம்பரியத்தை - நீதிக் கட்சி வழிவந்த வரலாற்றை மறக்காமல் சுட்டிக் காட்டினார்.
சென்னை மாநகராட்சித் தேர்தலில் திமுக வெற்றி பெற்றபோதுகூட தம் கட்சியின் சார்பில் வெற்றி பெற்று ரிப்பன் கட்டடத்திற்குள் நுழையும் முன், அந்த வளாகத்தில் சிலையாக நின்று கொண்டிருக்கும் வெள்ளுடைவேந்தர் பி. தியாகராசருக்கு உச்சி முதல் பாதம் வரை மாலை அணிவித்து நன்றி உணர்வை வெளிப்படுத்துங்கள் என்ற வரலாற்று உணர்வோடு ஆணை பிறப்பித்தவர்.
குறுகிய காலத்தில் ஆட்சியில் இருந்தாலும் யாரும் கை வைக்க முடியாத வரலாற்றுச் சாதனைகளை அசைக்க முடியாத கல்வெட்டாகப் பதித்தவர்.
(1) சுயமரியாதைத் திருமண சட்டம் (2) சென்னை மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டல் (3) இந்திக்குத் தமிழ்நாட்டில் இடமில்லை - தமிழும், ஆங்கிலமும் தான் இங்கு என்று சட்டம் செய்தவர்.
இந்த மூன்றில் கை வைக்க முடியாத காலம் தொட்டு, இந்த நாட்டை அண்ணாதுரைதான் ஆண்டு கொண்டு இருக்கிறார் என்ற அர்த்தம் நிறைந்த சொற்களைப் பதித்தவர்.
தானும் சரி, தன்னைச் சேர்ந்த உறுப்பினர்களும் சரி, சட்டமன்றத்திலோ நாடாளுமன்றத்திலோ கடவுள் பெயரால் பதவிப் பிரமாணம் எடுக்காத நிலையை உறுதி செய்தவர்.
இன்னும் சொல்லப் போனால் அரசு அலுவலகங் களில் எந்தவித மத, கடவுள் சின்னங்கள், சிலைகள் இடம் பெறக் கூடாது என்று ஆணை பிறப்பித்தார்.
எவ்வளவு காலம் ஆண்டோம் என்பது முக்கிய மல்ல; ஆண்ட காலத்தில் கொள்கை ரீதியாக என்ன சாதிக்கப்பட்டது என்பதுதான் முக்கியம் என்பதை முற்றும் உணர்ந்த கொள்கை மாமணியாக ஒலித்தவர் அண்ணா.
திராவிட என்ற பெயரைக் கட்சிகளில் இணைத் துக் கொண்ட எவரும் அண்ணா காட்டிய இந்த வழியில் எத்தனை மதிப்பெண் பெறுகிறார்கள் என்பதே அவர்களுக்கு அவர்களாகவே மதிப்பிட்டுக் கொள்வதும், சறுக்கிய இடங்களைச் சரி செய்துகொள்ள வேண்டியதும் அவசியமாகும்.
குறிப்பாக அண்ணா பெயரைக் கட்சியின் முன்னொட்டாக வைத்துக் கொண்டுள்ள அ.இ. அ.தி.மு.க. முதலில் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளது.
அண்ணாவின் கொள்கைவழி நடப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல் அமைச்சருமான மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அண்ணா பிறந்த நாள் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அண்ணாவின் கொள்கை என்றால் அடிப் படையானது பகுத்தறிவுக் கொள்கைதான்! அதில் எந்த அளவுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் நம்பிக்கை கொண்டுள்ளார் என்பது அழுத்தமான - முன்னணியில் நிற்கக் கூடிய முதற் கேள்வியாகும்.
கட்சியின் அதிகாரப் பூர்வமான நமது எம்.ஜி.ஆர். இதழில் ஆன்மிகம் பரப்புவதுதான் அறிஞர் அண்ணா வின் கொள்கையா? இராசி பலன் இடம் பெறுவது தான் அண்ணாவின் கொள்கையை மதிக்கும் பாங்கா? இவற்றைவிட அண்ணா அவர்களை எப்படி அவமதிக்க முடியும்?
குற்றப் பத்திரிகை படிப்பதற்காக இதனைச் சுட்டிக் காட்டவில்லை - அண்ணாவை மதிப்பது என்பது அவர் கொள்கையை மதிப்பதுதானே தவிர அவமதிப்பதல்ல என்று இடித்துக் கூறுவதற்காகத் தான்; அண்ணா வெறும் படமல்ல அறிவுப் பாடமாகும்.
-----------------------"விடுதலை” தலையங்கம் 15-9-2012