திருக்குறள்

மதுவிலக்கு வருகிறதாமே! ஃபுல்லாவா? குவாட்டர் கட்டிங்கா?


மதுவிலக்கு வருகிறதாமே!
ஃபுல்லாவா? குவாட்டர் கட்டிங்கா?

     -கோவி.லெனின்

 அரசாங்கமே நேரடியாக மதுக்கடைகளை நடத்துகின்ற ‘பெரும் புரட்சி’ தமிழகத்தில் நடந்துகொண்டிருக்கிறது. இந்தப் புரட்சியைத் தொடங்கிவைத்தவர்  இன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாதான்.

2004ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவருடைய அ.தி.மு.க கூட்டணி 40 தொகுதிகளிலும் தோல்வியடைந்தது. அந்தப் படுதோல்விக்குப் பிறகு, அதே ஆண்டு அக்டோபர் மாதத்தில்தான் மதுக்கடைகளை அரசின் டாஸ்மாக் நிறுவனமே நேரடியாக நடத்துகின்ற முடிவை ஜெயலலிதா அரசு எடுத்தது.


ஆனால், இப்போது அவர் 2014 எம்.பி. தேர்தலில் 40க்கு 40தொகுதிகளையும் ஜெயித்து, இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்ற கனவிலும் ஆசையிலும் மிதப்பதால், பெண்வாக்காளர்களின் வாக்குகளைக் குறிவைத்து, முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது பற்றி ஆலோசித்து வருவதாகப் ‘பரபரப்பு’ செய்திகள் வெளியாயின.

 பெருமாயிக் கிழவி பேன் பார்த்தாலும் பார்க்கும். பிய்ச்சிவிட்டாலும் பிய்ச்சிவிடும் என்று கிராமப்புறங்களில் பழமொழி உண்டு.

ஜெயலலிதா தன்னுடைய நிர்வாகத்தில் எப்போது என்ன  செய்வார் என்று தெரியாததாலும், எதையும் எப்போது வேண்டுமானாலும்  செய்பவர் என்பதாலும், இதுவும் நடக்கலாம் என்ற நம்பிக்கையே ‘மதுவிலக்கு’ என்ற செய்திக்கு கிடைத்திருக்கும் மார்க்கெட் வேல்யூ.  அதே நேரத்தில், மதுவிலக்கின் ரியல் வேல்யூ என்ன என்பதையும் தெரிந்துகொள்ளவேண்டும்.
 “காமராஜர் படி.. படி.. என்று சொன்னார். கருணாநிதி குடி.. குடி.. என்று சொன்னார்” என்ற குற்றச்சாட்டு உண்டு. அதாவது, தமிழகத்தில் நீண்டகாலமாக இருந்துவந்த மதுவிலக்கை ரத்து செய்து, கலைஞர் தலைமையிலான தி.மு.க ஆட்சி 1971ல் மதுபானக்கடைகளைத் திறந்ததால், அதுவரை குடிப்பழக்கத்தையே அறியாத தலைமுறையினரும் குடிக்கக் கற்றுக்கொண்டார்கள் என்பதுதான் இந்தக் குற்றச்சாட்டுக்கான  அடிப்படை.


 பிரிட்டிஷ் நிர்வாகத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் நீதிக்கட்சியைத் தோற்கடித்து காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தபோது, சென்னை மாகாணத்தின் பிரிமியராக இருந்த மூதறிஞர் ராஜாஜிதான் மதுவிலக்கை அமல்படுத்தினார். இதனால் ஆண்டுக்கு 15 முதல் 20 கோடி வரை அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இந்த மதுவிலக்கு உடனடியாக ஏற்படுத்திய தாக்கம் என்ன தெரியுமா? அது பற்றி பெரியார் தனது குடிஅரசு இதழில் எழுதியிருக்கிறார். எந்தப் பெரியார்? மதுவிலக்கை வலியுறுத்தி, கள் தரும் மரங்களை வெட்டவேண்டும் என்று மகாத்மா காந்தி சொன்னவுடன், தன் தோட்டத்தில் இருந்த 500 தென்னை மரங்களைக் கண்மூடித்தனமாக வெட்டித்தள்ளினாரே, அந்தப் பெரியார்.


 “நமது கல்வி வளர்ச்சியை ஒழித்துக் கட்டுவதற்கு ஒரு ஆதாரம் தேடவேண்டும் என்கிற எண்ணத்தின்மீது மதுவிலக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதாவது, 100க்கு 5 (சத)வீதமே படித்த மக்களாய் இருந்த நாம், ஜஸ்டிஸ் கட்சி ஆட்சிக்கு வந்தபிறகு 100க்கு 7 படித்த மக்களானோம். அதைக்கண்டு ஆத்திரமடைந்த ராஜாஜி, தாம் 1938ல் பதவிக்கு வந்தவுடன் கல்வியை அன்றுள்ள தன்மைப்படி நடத்துவதானால் அரசாங்கத்தினிடம் போதிய பணம் இல்லை. ஆதலால் வரவு-செலவைச் சரிக்கட்ட 2600 பள்ளிகளை மூடவேண்டியது அவசியமாகிவிட்டது என்பதாக ஒரு சாக்குக் கண்டுபிடிக்கக் கருதியே, மதுவிலக்கினால் ஏற்பட்ட நட்டத்தைச் சரிக்கட்டினேன் என்று சொல்ல ராஜாஜி வசதி ஏற்படுத்திக்கொண்டார்” என்று தெரிவித்திருக்கிறார் பெரியார்.
 ராஜாஜி கொண்டு வந்த மதுவிலக்கின் உடனடி விளைவு என்பது, சென்னை மாகாணத்தில் செயல்பட்டுவந்த 2600 பள்ளிகளை மூடியதுதான். ஆனாலும், தமிழகத்தில் மதுவிலக்குத் தொடர்ந்து  நீடித்தே வந்தது.

பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் இந்த வருவாய் இழப்புப் பற்றிக் கவலைப்படாமல் புதிய பள்ளிகள் திறக்கப்பட்டன. இலவசக் கல்வித்திட்டமும், இலவச மதிய உணவுத்திட்டமும் நடைமுறைக்கு வந்தன. ஆனாலும், ராஜாஜி ஆட்சியிலும் காமராஜர் ஆட்சியிலும் தமிழகத்தில் குடிகாரர்களே இல்லை என்று நினைத்துக்கொண்டால் நாம் பரிதாபத்திற்குரியவர்கள்.

 பணக்காரர்கள் பர்மிட் எனப்படும் குடிக்கான அனுமதி பெற்று, குடித்து வந்தார்கள். ஏழைகள் மதுக்கசாயம், கள்ளச்சாராயம் ஆகியவற்றைக் குடித்தனர். மதுவிலக்கு நடைமுறையில் இருந்ததால், பர்மிட் இல்லாமலோ-பர்மிட்டில் உள்ள அளவுக்கு மீறியோ குடிப்பது சட்டவிரோதமானது. தண்டனைக்குரியது.

ஆனால், இந்த சட்டவிரோதச் செயலில் ஈடுபட்டவர்களில் மிகக்குறைவானவர்களே குற்றவா ளிகளாகப் பதிவு செய்யப்பட்டார்கள். மற்றவர்களுடன் போலீசார் ‘உடன்பாடு’ செய்துகொண்டு, தனி வருமானம் பார்த்ததால், சாராய வியாபாரம் நடந்துகொண்டுதான் இருந்தது. குறைவானவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையின் அடிப்படையிலானப் பின்வரும் புள்ளிவிவரமே நமக்கு ஓர் உண்மையைக் காட்டுகிறது.
 1961ல் 1லட்சத்து 12ஆயிரத்து 889 பேர் மீது வழக்குப் பதிவாகியிருக்கிறது. 1962ல் 1,29,977 பேர். 1963ல் 1,23,006, 1964ல் 1,37,714, 1965ல் 1,65,052, 1966ல் 1,89,548 பேர். இந்தக் கணக்கைப் பார்த்தால், ஆண்டுதோறும் சாராயக் குற்றங்கள் பெருகியே வந்துள்ளன என்பதையும், மதுவிலக்கோ, காவல்துறையின் நடவடிக்கைகளோ குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு ஒரு பொருட்டாக இல்லை என்பதையும் புரிந்துகொள்ளமுடியும். 

காங்கிரசுக்குப்பிறகு தி.மு.க தலைமையிலான ஆட்சி அமைந்து, மதுவிலக்கு தொடர்ந்த 1967ல் 1,90,713 பேர், 1968ல் 2,53,607, 1969ல் 3,06,555, 1970ல் 3,72,472 பேர் மீது குற்றச்சாட்டுப் பதிவாகியிருக்கிறது. இந்தக் காலக்கட்டத்தில் இந்தியாவின் பல மாநிலங்களிலும், தமிழகத்தின் அண்டை மாநிலங்களிலும் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டு, மதுபானக்கடைகள் திறக்கப்பட்டு வந்தன. மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசாலேயே, மகாத்மா காந்தியின் புனிதமிகு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியவில்லை.


தமிழக எல்லையோரத்தில் அண்டை மாநில மதுவிற்பனை அதிகமானதுடன், அவை தமிழகத்தின் பல பகுதிகளுக்குள்ளும் ஊடுருவி வந்தன. சட்டங்களோ, காவல்துறையினரோ இதைத் தடுப்பதில் வெற்றிபெறவில்லை.

இந்த நிலையில்தான் 1971ல், ‘‘கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு வளையத்துக்குள், கொளுத்தப்படாத கற்பூரமாக எத்தனை நாளைக்குத்தான் தமிழகம் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்?” என்று சட்டமன்றத்தில் விளக்கமளித்த அன்றைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி, தமிழகத்தில் மது விலக்கை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்தார். அதாவது, மதுக்கடைகள் அதிகாரப் பூர்வமாகத் திறக்கப்பட்டன.

மதுவிற்பனை மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கத் தொடங்கியது. இதுதான், ஒரு புதிய தலைமுறையைக் கருணாநிதி குடிக்க வைத்தார் என்ற குற்றச்சாட்டின் பின்னணி.

மறைமுகமாகக் குடித்து வந்தவர்கள், சட்ட பயமின்றிக் குடிக்கத் தொடங்கினர். கடைகள் திறக்கப் பட்டதால், ‘போட்டு பார்ப்போமே’ என்று புதிதாகப் பழகியவர்களும் உண்டு. மதுவிலக்கை கலைஞர் அரசு ரத்து செய்ததற்கு, காங்கிரஸ் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு வந்தது. அதேநேரத்தில், மதுவிலக்கு ரத்து ஏன் என்கிற காரணங்களை வலியுறுத்தி தி.மு.கவுக்காகப் பிரச்சாரம் செய்தவர் எம்.ஜி.ஆர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பிரச்சாரத்தின்போது, மது குடிப்பதனால் தனிமனிதர்களுக்கும் அவர்களைச் சார்ந்த வர்களுக்கும் ஏற்படும் தீமைகளையும் எம்.ஜி.ஆர். விளக்கிப் பேசி வந்தார். பின்னர், 1972ல் எம்.ஜி.ஆர், தனிக்கட்சி தொடங்கினார்.

மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டதற்கான எதிர்ப்புகள் கடுமையாயின. எனவே, 1974ல் அதே கலைஞர் ஆட்சியில் மீண்டும் மதுவிலக்குக் கொண்டுவரப்பட்டு, மதுக்கடைகள் மூடப்பட்டன என்பதும் கவனிக்கத்தது.

1977ஆம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. முதல்வர் பொறுப்பேற்ற மக்கள்திலகம் எம்.ஜி.ஆர், “என் தாய் மீது ஆணையாக மதுவிலக்கைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவேன்” என்றார். 

தமிழகத்தில் மதுவிலக்கு நடைமுறையில் இருந்த நிலையில், புதுச்சேரி மாநிலத்திலும் (யூனியன் பிரதேசம்) ஆட்சியைப் பிடித்த அ.தி.மு.க, அந்த மாநில வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு முதன்  முறையாக அங்கும் மதுவிலக்கைக் கொண்டுவந்தது.

அதன் விளைவு என்ன தெரியுமா? ஆளுங்கட்சியாக இருந்த அ.தி.மு.க அடுத்து வந்த  புதுச்சேரி மாநிலத் தேர்தலில் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை. இன்றுவரை, அந்த மாநிலத்தில் அ.தி.மு.கவால் ஒற்றை இலக்கத்திற்கு மேல் தொகுதிகளைப் பெறவில்லை என்பதுதான் சுமார் 35 ஆண்டுகால வரலாறு. சரி.. தமிழகத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சியின் மதுவிலக்குக் கொள்கை எந்தளவு வெற்றி பெற்றது?

தாய் மீது ஆணையிட்ட எம்.ஜி.ஆர், தனது ஆட்சியில் மதுவிலக்கைக் கடுமையாக நடைமுறை ப்படுத்தப் பல சட்டத்திருத்தங்களைக் கொண்டுவந்தார். “மது குடித்த குற்றத்திற்காக முதல் முறை பிடிபட்டால் 3 ஆண்டு சிறை. இரண்டாவது முறை என்றால் 7 ஆண்டு சிறை. மூன்றாவது முறை பிடிபட்டால் நாடு கடத்தப்படுவார்கள்” என்றெல்லாம் அறிவிக்கப்பட்டது.
ஆனால், அவையெல்லாம் நடைமுறையில் வெற்றிபெறவில்லை. மெல்ல மெல்ல மதுவிலக்கைத் தளர்த்தினார். கூட்டுறவு அங்காடிகளில் மதுபானங்கள் விற்பனைக்கு வந்தன. அங்கே அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கிடைக்காததைக் கண்டித்து ஆர்பாட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், “ரவா-மைதா வாங்கி வைக்க, வக்கில்லாத நிர்வாகத்திற்கு ரம்மும் ஜின்னும் லட்சக்கணக்கில் வாங்கி வைக்க முடியுதா?” என்று கேட்டனர்.

பிராந்தி, விஸ்கி ஆகியவை மட்டுமின்றி, எம்.ஜி.ஆர். ஆட்சியில் 1981ஆம் ஆண்டு தொழிலாளர் தினமான மே 1ந் தேதி முதல் சாராயக் கடைகளும் கள்ளுக்கடைகளும்கூடத் திறக்கப்பட்டன. இந்தக் கடைகளுக்கு நம்பர் உண்டு. அதனால், மூணாம் நம்பர் கடை, ஆறாம் நம்பர் கடை என்று ‘குடி’மக்கள் சொல்ல ஆரம்பித்தார்கள். 

இந்தக் கடைகளை ஏலம் எடுத்து நடத்தியவர்கள் பெரும்பாலும் அ.தி.மு.கவினரே. சில பல இடங்களில் அவர்களுக்குத் தொழில்பார்ட்னர்களாக இருந்தவர்கள் லோக்கல் தி.மு.கவினர். காங்கிரஸ் கதர்ச்சட்டையினரும் ரகசிய பார்ட்னர்களாக இருந்தது உண்டு. மதுபானத் தொழிலில் அரசியல் கட்சியினர் ருசி காணத் தொடங்கியது இந்தக் கட்டத்தில்தான். 

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் சாராய ஆலை அதிபர்களும், சாராய வியாபாரிகளும் கொழித்துச் செழித்ததுடன், தனியார் சுயநிதிக் கல்லூரிகளைத் தொடங்கினர். இத்தகையக் கல்லூரிகளுக்கு எம்.ஜி.ஆர். அரசு தாராளமாக அனுமதி வழங்கியது. சாராயத் தொழில் செய்தவர்கள், ‘கல்வி வள்ளல்’களாக உருமாற்றம் பெற்றனர். எம்.ஜி.ஆர். ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் மீண்டும் மதுவிலக்கு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டு, கள்-சாராயக் கடைகள் மூடப்பட்டன. பர்மிட் உள்ளவர்கள் பிராந்தி-விஸ்கி குடிப்பதற்கான உரிமை மட்டும் நீடித்து வந்தது. 

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்  மறைவுக்குப்பின் 1989ல் நடந்த தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்று, கலைஞர் மீண்டும் முதல்வாரானார். அப்போது, மலிவு விலை மது என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது. அதாவது, சாராயம் போலத் தூக்கலாகவும் இல்லாமல், பிராந்தி-விஸ்கி போல மிதமாகவும் இல்லாமல் தரத்திலும் விலையிலும் நடுத்தரமான சரக்கு இது. 

இதனை எதிர்த்து, தமிழக காங்கிரஸ் கட்சி பல போராட்டங்களை நடத்தியது. அதற்கு அ.தி.மு.க மறைமுக ஆதரவு தந்தது. எனினும், தி.மு.க அரசோ, கள்ளச்சாராய சாவுகளைத் தடுப்பதற்காக மலிவு விலை மது நடைமுறைப்படுத்தப்படுகிறது என்று கூறி, இதற்கானக் கடைகளைத் திறந்தது. ‘தாலி அறுக்கும் மலிவு விலை மது’ என்று பத்திரிகைகள் விமர்சனம் செய்தன.

1991ல் முதன்முறையாக முதல்வர் பொறுப்பேற்ற செல்வி.ஜெயலலிதாவின் முதல் கையெழுத்தே, மலிவு விலை மதுவை ரத்து செய்யும் உத்தரவுக்கான கோப்பில்தான் இடப்பட்டது. பெண்களின் தாலியைக் காப்பாற்றிவிட்டார் ஜெயலலிதா எனப் பாராட்டுகள் குவிந்தன.

ஆனால் அடுத்த ஆண்டிலேயே, 1992ல் பார் வசதியுடன் கூடிய ஒயின் ஷாப்புகளுக்கான அனுமதியை அளித்தது ஜெயலலிதா அரசு. வாங்குகிற இடத்திலேயே குடிக்க முடியும் என்பதால், விற்பனை பெருகியது. அரசுக்கு வருமானம் அதிகரித்தது.

‘பார்’ போற்றும் அரசு என்று பத்திரிகைகள் விமர்சித்தன. இதற்கு ஈடுகொடுக்கும் விதத்தில்,  மதுவின் தீமையை வலியுறுத்தும் பிரச்சாரப் படமான ‘நீங்க நல்லா இருக்கணும்’ என்ற திரைப்படத்தை தமிழக அரசே எடுத்தது. படப்பிடிப்பை முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார். இயக்குநர், விசு. படம் கல்லா கட்டவில்லை. பார்கள்தான் கல்லா கட்டின.

ஒயின்ஷாப்புகளையும் பார்களையும்  ஆளுங்கட்சியினரும் அவர்களுக்கு வேண்டியவர்களும் ஏலம் எடுத்தனர். வேறு யாரும் ஏலத்தில் மூக்கை நுழைக்கமுடியாதபடி ஆங்ககாங்கே சிண்டிகேட்டுகள் (கூட்டணி) அமைக்கப்பட்டன. இந்த மதுக்கடைகளால் லோக்கல் கட்சிக்காரர்கள் வருமானம் பார்க்க, மதுபானத் தொழிற்சாலை அதிபர்களோ கட்சித் தலைமைக்கு நிதி தரும் காமதேனுக்களாக இருந்தனர். 1996ல் திமு.க வெற்றி பெற்றபோது, ஆட்சி மாறினாலும் ஒயின்ஷாப் விவகாரத்தில் காட்சி மாறவில்லை.
அ.தி.மு.கவினருக்குப் பதில் தி.மு.கவினரும் அவர்களுக்கு வேண்டியவர்களும் ஏலம் எடுத்தனர். மதுபான அதிபர்கள் தி.மு.க தலைமைக்கு நிதியளித்தனர். 1991 முதல் 2001 வரையிலான 10 ஆண்டுகளில் இந்தியாவின்  பொருளாதாரக் கொள்கையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. அது தமிழகத்திலும் தாக்கம் ஏற்படுத்தத் தவறவில்லை.

வெளிநாட்டு முதலீடுகள், பன்னாட்டு நிறுவனங்கள், சாஃப்ட்வேர் துறையின் வளர்ச்சி, பங்குச்சந்தை வர்த்தகம் ஆகியவற்றால் நடுத்தர வர்க்கத்தின் ஒரு தரப்பிடம் பணம் புழங்கத் தொடங்கியது. ஊதிய விகிதங்களில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டது.


கேளிக்கைக்கான பணம் பற்றி இளைய தலைமுறைக்குக் கவலையில்லாத நிலை தொடங்கியது. மதுபானக் கடைகளை நோக்கிய அவர்களின் படையெடுப்பு அதிகரிக்க ஆரம்பித்தது. குடிப்போர் விழுக்காடு பெருமளவு உயர்ந்தது. எல்லாவற்றுக்கும் ‘ட்ரீட்’ கொடுப்பதும், பீர் குடிப்பது தவறல்ல என்ற போக்கும் அதிகரித்தது.

டான்சி வழக்கில் கீழ்நீதிமன்றம் தண்டித்த நிலையிலும், 2001ல் முதல்வரானார் ஜெயலலிதா. இதற்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க, ஜெ பதவி விலகி, ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானார். அவர் பதவியில் இருந்தபோது, சென்னை செங்குன்றத்தையடுத்த கோட்டூர் கிராமத்தில் நடந்த ஒரு திருமண விழாவில், ரசாயனத் தொழிற்சாலைகளுக்குப் பயன்படுத்தும் மெத்தனாலில் தண்ணீர் கலந்து சாராயமாக்கிக் கொடுத்ததில், ‘மிக்ஸிங்’ சரியில்லாமல், 36 பேர் இறந்தனர். பலருக்குக் கண்பார்வை பறிபோனது. இதேபோல கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள மேல்அருங்குணம், செம்பேடு, நத்தம் ஆகிய கிராமங்களிலும் இதேபோல விஷசாராயம் குடித்த 52 பேர் பலியாயினர். இந்த சாராயப் பலிகளில் பெண்களின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க அளவில் இருந்தது.

உயிர்ப்பலிகள், சாராய விற்பனை என எல்லாவற்றிலும் பெண்களும் இருந்ததை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். சாராயம் தொடர்பான வழக்குகளில் நான்கில் ஒரு பிரிவினர் பெண்கள் என்பதும் முக்கியமானது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் விஷச் சாராயப் பலிகள் தொடர்ந்ததையடுத்து, மீண்டும் மலிவு விலை மது கொண்டு வரப்பட்டது.

ஒயின் ஷாப்புகளிலேயே ‘மினி குவார்ட்டர்’ என்ற பெயரில் 100 மில்லி அளவிலான பிராந்தி, விஸ்கி, ரம் பாட்டில்கள் விற்பனைக்கு வந்தன. விலை 15 ரூபாய். இதற்கு ஏழைக் ‘குடி’மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால், ஒயின்ஷாப்காரர்களுக்கு இலாபம் குறைவு என்பதால், மினி குவார்ட்டர் பாட்டில்களுக்கு டிமாண்ட் ஏற்படுத்தப்பட்டு, ஒரு கட்டத்தில் நிறுத்தப்பட்டது. மினிகுவார்ட்டர் பிரியர்கள், கூடுதல் பணம் கொடுத்து குவார்ட்டர் வாங்க ஆரம்பித்தனர். 

மலிவுவிலை மதுவுக்குப் பதில், கள்ளுக்கடைகளைத் திறப்பது ஏழைகளின் வருமானத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் பாதிப்பில்லாமல் இருக்கும் என்றும், பனைத்தொழிலாளர்களுக்கும் வருமானத்தைத் தரும் என்றும் குரல்கள்  ஒலிக்க ஆரம்பித்தன. அதை அரசாங்கம் காதில் வாங்கவில்லை. 

2002ல் ஜெயலலிதா மீண்டும் முதல்வரானார். அதையடுத்து, அரசின் டாஸ்மாக் நிறுவனமே ஒயின்ஷாப்புகளை நேரடியாக நடத்தும் முடிவு எடுக்கப்பட்டது. வருமானம் முழுவதும் அரசுக்கே வரவேண்டும் என்பதுதான் இதன் நோக்கம். ஒயின்ஷாப் பார்களை மட்டும் ஆளுங்கட்சி ஆட்கள் ஏலம் எடுத்து நடத்தினர். 

காலை 8 மணிக்குத் தொடங்கி இரவு 12 மணிவரை ஒயின்ஷாப்புகள் செயல்பட்டன. இளைஞர்கள் பலருக்கு தற்காலிக அரசு வேலை கிடைத்தது. இந்தக் கட்டத்தில்தான், மிடாஸ் நிறுவனத்தின் மதுபானங்கள் ஒயின்ஷாப்களை ஆக்கிரமித்தன. இந்த நிறுவனம் யாருடையதென்று விளக்கவேண்டியதில்லை.
2006ல் தி.மு.க ஆட்சி அமைந்தபிறகும், அரசுக்கு வருகின்ற வருமானத்தைக் கணக்கில் கொண்டு, ஒயின்ஷாப்புகளை டாஸ்மாக்கே  நேரடியாக நடத்துவது தொடர்ந்தது. இலவச திட்டங்களுக்கு இந்த நிதி, துணையாக இருந்தது. மிடாஸ் நிறுவனத்தின் சரக்குகளை வாங்குவதிலும் தி.மு.க அரசு தாராளமாகவே நடந்துகொண்டது. எனினும், தமிழகத்தில் குடிகாரர்கள் பெருகிவிட்டார்கள் என்றும், இளைஞர்கள் கெட்டுச் சீரழிகிறார்கள் என்றும் கூட்டணிக் கட்சியாக இருந்த பா.ம.கவின் நிறுவனர் ராமதாஸ் விமர்சித்ததுடன், மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்தவேண்டும் என வலியுறுத்தினார். இதையடுத்து ஒயின்ஷாப் நேரம் மட்டும் மாற்றம் செய்யப்பட்டு, காலை 10மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே கடை திறந்திருக்கும் என தி.மு.க அரசு முடிவெடுத்தது.


கள்ளுக்கடைகளைத் திறக்கக்கோரி போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால், அந்தக் கோரிக்கை கண்டுகொள்ளப்பபடவில்லை. தமிழகத்தில் தற்போது ஒயின்ஷாப்புகள் மட்டுமின்றி, அனுமதிபெற்ற தனியார் பார்களும் இருக்கின்றன. நட்சத்திர ஓட்டல்களில் உயர்வகை மதுபானங்கள் கிடைக்கின்றன. ரிசார்ட்ஸ்களிலும் இந்த வசதிகள் உள்ளன. விடுமுறை நாட்கள், வார இறுதி நாட்கள், பிறந்தநாள்-புத்தாண்டு கொண்டாட்டங்கள், கெட் டூ கெதர் என இளைஞர்களும் இளம்பெண்களும் மதுவிருந்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


ஜெயலலிதா 2011ல் மீண்டும் முதல்வரானார். டாஸ்மாக் நிர்வாகத்தின் கீழ் ஒயின்ஷாப்புகள் தொட ர்ந்து இயங்குகின்றன. மிடாஸ் நிறுவன மதுபானங்களின் கொள்முதல் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. நட்சத்திர ஓட்டல்களில் 24 மணி நேரமும் பார் திறந்து வைக்க அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நட்சத்திர அந்தஸ்து இல்லாத ஓட்டல்களில் உள்ள பார்களில் இரவு 12 மணிவரை மது சப்ளை செய்யலாம் என்றும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதற்கானக் கூடுதல் கட்டணங்களை செலுத்தினால், அனுமதி உண்டு என்று ஜெயலலிதா அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில்தான், டாஸ்மாக் கடைகளை அவர் மொத்தமாக மூடுவது பற்றி ஆலோசித்து வருகிறார் என்று செய்தி வெளியாகியுள்ளது. 

இளையதலைமுறையினரிடம் அதிகரித்துள்ள குடிப்பழக்கம் அவர்களுக்கும் சமுதாயத்திற்கும் பெரும் தீங்கை ஏற்படுத்தி வருவதை மறுக்கமுடியாது. பழக்கம் என்பதைத் தாண்டி, குடிநோய்க்கு இளைஞர்கள் ஆளாகிறார்கள் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பள்ளி மாணவர்கள்கூட குடிக்கும் வேதனைத் தகவல்கள் வெளியாகின்றன. ஆரோக்கியமான வளரவேண்டிய சமூகம் திசைமாறுகிறது என்பது பெருங்கவலைக்குரியது. ஆனால், அரசாங்கத்தின் மதுவிலக்குத் திட்டம், இதையெல்லாம் மாற்றிவிடுமா என்ற கேள்விக்கு, முந்தைய நிகழ்வுகள் சாதகமான பதில்களைத் தரவில்லை. 

இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக மதுவிலக்கு நடைமுறையில் இருப்பது, காந்தி பிறந்த மாநிலமான குஜராத்தில் மட்டும்தான். ஆனால், அங்கும் போர்பந்தரில் காந்தியின் பூர்வீக வீட்டுக்குப் பக்கத்திலேயே அடிபம்பு மூலம் சட்டவிரோதமாக சாராய வியாபாரம் நடப்பதை பத்திரிகைகள் அம்பலப்படுத்தியுள்ளன. இதுதான் மதுவிலக்கின் லட்சணம். 

தேசிய அளவிலான மதுக்கொள்கை, மாநிலங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பு, மதுக்கடை நேரங்களைக் குறைத்தல், தனிநபருக்கான மது அளவு, கள்ளுக்கடைகளை அனுமதிப்பது பற்றிய முடிவு, வேலைவாய்ப்புகள், கலாச்சார மாற்றங்கள், இளையதலைமுறையினருக்கான மாற்றுப் பொழுதுபோக்குகள்,  காவல்துறையின் லஞ்ச ஊழலற்ற நடவடிக்கை, அரசாங்கத்தின் வருவாயைப் பெருக்கும் மாற்றுத் திட்டங்கள் உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்தாமல் மதுவிலக்கு என்பது மோசடியே. 

ஜெயலலிதாவுக்கே அப்படி ஒரு எண்ணம் இருக்கிறதா என்று தெரியவில்லை. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றியை மனதில்கொண்டு தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டால், தேர்தலுக்குப் பிறகு அது ரத்து செய்யப்படவேண்டிய நிலை நிச்சயம் உருவாகும். ஏனெனில், மது குடிப்போரைவிட அதிகம் தள்ளாடுவதாக உள்ளது அரசாங்கத்தின் மதுவிலக்குக் கொள்கை.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற