""சார்... டைம் என்ன ஆகுது?''
""7.30 ஆகுது சார்.''
""என்ன 7.30?''
""நீங்கதான் டைம் கேட்டீங்க!''
""ஹல்லோ... யார் நீங்க? நான் எப்போ உங்ககிட்ட டைம் கேட்டேன்?'' டைம் கேட்டு விட்டு இப்படி நம்மையே திருப்பிக் கேட்டால் "அந்நியன்' ரேஞ்சுக்கு அவர் மேல் டென்ஷ னாகாதீர்கள். பாவம்... "கஜினி' படத்தில் சூர்யாவுக்கு எப்படி அரைமணி நேரத்துக்கு முன்பு என்ன நடந்தது என்று ஞாபகம் இருக்காதோ... அதை விடக் கொடுமையாக இப்படி ஒரு நிமிடத்திற்கு முன்பு என்ன நடந்தது என்று மறந்துவிடும் "அல்சைமர்' நோயால் அவர் பாதிக்கப்பட்டவராக இருக்க லாம்''.
அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்பது கூட நினைவில் இருக்காது. அடுத்தவர் உதவி இல்லாமல் சிறு வேலையைக் கூட அவர்களால் செய்ய முடியாது. உலகத்தில் இந்த நோயைத் தீர்க்க இதுவரை மருந்தே கிடையாது என்பது தான் அதைவிடக் கொடுமை. அப்பேர்ப்பட்ட இந்த "அல் சைமர்' வியாதி எதனால் வரு கிறது என்று கண்டுபிடித்திருக்கிறார் தமிழக விஞ்ஞானியான
சமீபத்தில் திருவண்ணாமலை அருணை என்ஜினியரிங் கல்லூரியில் நடந்த சர்வதேச நானோ டெக்னாலஜி கருத்தரங்கில் கலந்து கொண்ட 35 வயதான இளம் விஞ்ஞானி லாரன்ஸ் ராஜேந்திரனை சந்தித்துப் பேசினோம். தடுமாறும் தமிழில் பதிலளித்தார்.
இந்த அல்சைமர் வியாதி எதனால வருது? எப்படி ஆய்வு செஞ்சீங்க?
விஞ்ஞானி: நம்மோட உடம்புல பலவிதமான வியாதிகள் வர்றதுக்கு காரணமே நம்ம உடம்புல இருக்குற புரோட்டீன். சரி... புரோட்டீன் எப்படி காரணமாகுதுன்னு கண்டு புடிச்சேன். சென்னை தாம்பரத்துல சாதாரண நடுத்தரக் குடும்பத்தில பிறந்து, மறைமலையடி களார் அரசு மேல் நிலைப்பள்ளியில் படிச் சேன். அதுக்கப்புறம் பி.எஸ்.ஜி. மூலக்கூறு உயிரியல் முடிச்சுட்டு இந்தியன் இன்ஸ்டிடி யூட் ஆஃப் சைன்ஸ் கழகத்துல பயோ பிசிக்ஸ் சேர்ந்து... அங்க கண்டுபிடிச்ச முதல் கண்டுபிடிப்பு இதுதான்.
அதுக்கப்புறம் 2000-ல இஸ்ரேல் போய் ஆராய்ச்சி எப்படி செய்வதுங்குற பயிற்சியை எடுத்துக்கிட்டு... கேன்சர் எப்படி பரவுதுங்கிற ஆய்வுல ஈடுபட்டேன். அப் போதான் கேன்சர் உடம்புல வளர்றதுக்கு காரணம் கொழுப்புன்னு தெரிய வந்தது. அந்த கொழுப்புதான் நம்ம உடம்புல அதிகமாகி "அல்சைமர்'ங்குற இன்னொரு வியாதியையும் உருவாக்குதுன்னு கண்டு பிடிச்சேன். 65 வயதுக்கு மேல உள்ளவங் களுக்கு இந்த அல்சைமர் எனப்படும் மறதி நோய் அதிகமா தாக்குது. வயதாகும்போது உடம்புல இருக்குற கண்ணுக்குத் தெரியாத நூல் போன்ற எலும்புகள் பார்ட் பார்ட்டா செயலிழக்க ஆரம்பிக்கும் போது ஞாபக சக்திகள் குறைய ஆரம்பிக்கும். கொழுப்பு அதிகமான குறைந்த வயதினர்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்பட ஆரம்பிச்சுடுது. இந்த நோயின் தாக்கம் மேற்கத்திய நாடுகளில்தான் அதிகம். அமெரிக்காவுல 55 லட்சத்துக்கு மேல் முதியவர்கள் பாதிக்கப்பட்டிருக்காங்க. ஆனா... இந்தியா வுல பாதிக்கப்பட்டவர்களின் புள்ளி விவரம் இல்லை. இன்னும் இருபது, முப்பது வரு ஷத்துல இந்நோயின் தாக்கம் இந்தியாவுல அதிகமா இருக்கும். அதுவும் மாணவர் களுக்கு வர அதிக வாய்ப்பு இருக்கு'' என்று அதிர்ச்சி கிளப்பியவர் ""இந்நோய் வராம பார்த்துக்கணும்னா... மஞ்சள் பொருட்களை தவறாம உணவுல சேர்த்துக்கணும். கரித் துகள், க்ரீன் டீ, ரெட் ஒயின் சாப்பிட்டா இந்நோய் வராம தடுக்க முடியும். சில மருந்துகளை உலகத்திலுள்ள விஞ்ஞானிகள் கண்டுபிடிச்சி ஆய்வு செஞ்சிக்கிட்டிருக் காங்க. நான் கண்டுபிடிச்ச மருந்தும் ஆய்வுல இருக்கு''.
இந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சரிடம் நீங்கள் வைத்த கோரிக்கை என்ன?
ஒரு மாணவன் தனக்கு தெரியாத விஞ்ஞானப் பூர்வமான சந்தேகங்களை மெயில் மூலம் கேள்வியாக அனுப்பலாம். என்னைப் போல் பல நாடுகளைச் சேர்ந்த ஒத்தக் கருத்துடைய 20 விஞ்ஞானிகள் குழு இதற்கான விளக்கங்களை அனுப்பத் தயாரா இருக்கு.
இந்த இணையதளத்தை தமிழ்நாட்டு மாணவர்கள் பயன்பெறும் வகையில் விரிவாக்கி இலவசமாக கொடுக்க என்கிட்ட வசதியில்லாததால்... இதை அரசாங்கத்தோடு இணைந்து செயல்படுத்தணும். இதைத்தான் கோரிக்கையா வெச்சுருக்கேன். இதனால் தமிழக கிராமத்து மாணவர்கள் உலகில் கொடிகட்டி பறப்பாங்க.
சமீபத்தில் ரைஸ் ரூரல் அமைப்பின் சார்பில் ஐந்து தேர்வுகள் இணையம் வழியாக நடத்தப்பட்டு... அதில் கிராமப்புறத்தில் வளர்ந்து படித்துவரும் 5 மாணவர்கள், 3 பேராசிரியர்கள் உட்பட எட்டு பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இப்படி தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களை வெளிநாட்டு பல்கலைக் கழகங்களுக்கு அழைத்துச் சென்று ஆய்வு மேற் கொள்வது எப்படிங்குற பயிற்சியை இலவசமாகவே கொடுக்க முயற்சி எடுத்து வருகிறேன்'' என்றவர் ""விரைவில் நான் கண்டுபிடித்த அல்சைமர் நோய்க்கான மருந்து வெளிவரும்'' என்கிறார் உற்சாகமாக.
- நன்றி நக்கீரன்