திருக்குறள்

தமிழ் இலக்கியமும் சமூக உறவு முறையும்


முருகேசு ரவீந்திரன்


இலக்கியங்கள் அவை எத்தகைய காலத்தைப் பிரதிபலிப்பதாக அமைந்தாலும் ஒரு சமூகத்தின் பண்பாட்டை பழக்கவழக்கங்களை எடுத்துக் காட்டுவதாகவே அமைந்துவிடுகின்றன.
இன்றைய இளந் தலைமுறையினர் இலக்கியங்களைக் தேடிப் படிப்பதன் மூலம் சமூகம் பற்றிய தெளிவைப் பெற்றுக் கொள்ள முடிகிறது. இதனால் தான் இலக்கியம் காலத்தின் கண்ணாடி என
வர்ணிக்கப்படுகிறது.

எதற்கும் அவசரம் எதிலும் அவசரம் என்பதாக இன்றைய வாழ்க்கை மாறிவிட்டது. அடுத்த வீட்டில் யார் இருக்கிறார்கள் என்பதுகூட நகரங்களில் வசிப்பவர்களுக்குத் தெரியாது. தெரிந்துகொள்ள வேண்டும் என்ற தேவையும் இல்லை. அவரவர் தேவைகளை நிறைவேற்றுவதற்கே நேரம் போதாத நிலையில், அடுத்தவரைப் பற்றி நினைத்துப் பார்க்க முடியுமா?

தொண்ணூறுகளுக்கு பின் வடபகுதியை சேர்ந்த பலரும் கொழும்புக்கு வந்தனர். இப்படி வந்தவர்கள் பலருக்கு யாழ்ப்பாணத்தை விடவும் கொழும்பில் உறவினர்கள் அதிகம். ஆனால் உறவினர்களின் வீடுகளுக்கு சென்று கதைப்பதற்கு பலருக்கும் நேரம் இருப்பதில்லை.
நகரச் சூழல் அவசரமானது என்பது உண்மை. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. அந்த வகையில் நேரத்தை ஒதுக்க நினைத்தால் ஒதுக்கலாம். ஆனால் அப்படி ஒதுக்க நினைப்பவர்கள் மிகக் குறைவு. நாம் உண்டு நம் குடும்பமுண்டு என இருப்பவர்களே அதிகம்.
அதனால் இன்றைய இளந் தலைமுறையினர் பலருக்கும் உறவுமுறைகள் பற்றி அதிகம் தெரியாது. இலக்கியங்கள் என்பன ஒரு சமூகத்தின் பண்பாட்டை பழக்க வழக்கங்களை எடுத்துக்காட்டுகின்றன.

ஒரு சமூகத்தின் மிக இன்றியமையாத அமைப்பாக உறவுமுறை விளங்குகிறது. உறவுமுறை பற்றி அதிகம் தெரியாத எழுத்தாளனால் அந்த சமூகம் சார்ந்த தரமான இலக்கியங்களை படைக்க முடியாது. இலங்கையில் வாழுகின்ற சிங்களவர்களும் தமிழர்களும் மொழியால் வேறுபட்டவர்கள். ஆனால் பண்பாடு பழக்க வழக்கம் என்பவற்றில் மிக நெருங்கிய தொடர்புடையவர்கள். இதில் முக்கியமானது உறவுமுறை.

ஒரு இனத்தின் தனித்துவத்தை எடுத்துக் காட்டுவது உறவுமுறை. இதனை இனங்களை வேறுபடுத்துவதில் முக்கிய காரணியாக கொள்கின்றனர். சிங்களவர்களும் இலங்கை தமிழர்களும் உறவுமுறையில் ஒரே விதமான பழக்கங்களையே கடைப்பிடிக்கின்றனர். இது இந்த இரு இனங்களுக்கும் இடையில் காணப்படும் மிக நெருக்கமான அம்சமாக பண்பாட்டு ஆய்வாளர்களால் கருதப்படுகிறது.

முக்கியமாக திருமண பந்தத்தை எடுத்துக்கொண்டால் சிங்களவர்களும் இலங்கைத் தமிழர்களைப் போன்று மச்சான், மச்சாள் போன்ற உறவுமுறை திருமணங்களை புரிகின்றனர். ஆனால் தாயின் தம்பியை மாமாவை திருமணம் முடிப்பதில்லை. இது சிங்களவர்களுக்கும் இலங்கை தமிழர்களுக்கும் இடையில் காணப்படும் ஒற்றுமையை சுட்டி நிற்பதாக கருதமுடியும்.
உறவுநிலை இரத்த வழி அமைகின்ற குடும்ப வடிவில் தொடங்கி பின்னர் குடும்பங்களிடையே உறவுகளை ஏற்படுத்திக் கொண்டு அதன் தொடராக வளர்ந்து பல குடும்ப உறவுகளால் பின்னப்பட்டு, ஓர் இனக் குழு அமைப்பு முழுவதையும் உறவுமுறையாக மாற்றிவிடும் சமூக வளர்ச்சியை நாம் காணலாம்.

ஒரு சமூகத்தில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் சாதி வேறுபாடுகளையும் மதப் பிரிவுகளையும் உறவுமுறை பிரதிபலிக்கின்றது.

கிராமப்புறங்களில் வயதான பெண்களின் பெயர்களுடன் அம்மா எனும் அடைமொழியை சேர்த்து மரியாதையாக அழைப்பர். ஆனால் நகரப்புறங்களில் இவ்வாறான வழக்கத்தை காணமுடியாது. சான்றாக கிராமப்புறங்களில் தேவகி அம்மா என்பது தேவகி என்னும் பெயருடைய வயதான பெண்ணைக் குறிக்கும். ஆனால் தேவகி அம்மா என்பது தேவகி என்னும் பெண்ணின் அம்மாவைக் குறிப்பதாகவும் கொள்ளலாம். நகர்ப்புறங்களில் பெரும்பாலும் இத்தகைய பொருளிலேயே தேவகி அம்மா எனும் உறவுமுறைப் பெயர் குறிக்கப்படுகிறது.

பொதுவாக ஆடவன் தனது தாயை மட்டும் அம்மா என அழைப்பதில்லை. மனைவியையும் அம்மா என அழைக்கிறான். பிள்ளைகள் அம்மா என அழைப்பதாலும் கணவன் அம்மா என அழைக்கிறான். இதனை வேறு விதமாகவும் கருதமுடியும் தாய்க்குப் பின் தாரம் என்பார்கள். ஒரு ஆண் பிறந்து திருமணத்தில் இணையும் வரை தாயை சார்ந்து இருக்கிறான். திருமணத்துக்கு பின்னர் அங்கே தாய்க்கு தாயாக மனைவி அமைகின்றாள். மனைவி தாயாக, தாரமாக, தோழியாக பல வகிபாகங்களை தாங்குகின்றாள். ஒரு ஆண் பிறப்பு முதல் இறப்புவரை பெண்ணை சார்ந்து நிற்கின்றான். அதனால்தான் தமிழர்கள் பெண்ணை சக்தியாக போற்றுகின்றனர்.

மனைவி கணவனை அப்பா என அழைப்பதையும் பல குடும்பங்களில் காண முடியும். அப்பா என்பது ஆண்பால் சொல்லாக இருந்த போதும் நண்பிகளுக்கிடையேயான கலந்துரையாடலின் போதும் ஒருவரை மற்றவர் அப்பா என விழித்து உரையாடுவதும் உண்டு. அலுவலகத்தில் ஒன்றாக வேலை செய்யும் நண்பிகள் இருவர் இவ்வாறு உரையாடுகின்றனர். ‘ஏன் அப்பா நீர் இண்டைக்கு சுணங்கி வந்தீர்’

‘சுகுணா நானும் இவரும் நேற்றைக்கு படம் பார்க்க போயிருந்தோம். சரியான சனமப்பா’
‘படம் பாத்துப் போட்டு விடிய விடிய நித்திரை கொண்டனீரே அப்பா.’

‘ஓம் சுகுணா, நல்ல படம் நீரும் போய் பாருமப்பா’

இந்த உரையாடலில் இருந்து அப்பா என்ற சொல் தந்தையை மாத்திரம் குறிக்கவில்லை.

தோழியை, கணவனை குறிக்கவும் அப்பா என்ற சொல் பயன்படுகிறது.
இந்திய வம்சாவளி மக்களிடையே கணவன் மனைவியை ‘புள்ள’ என்றழைப்பதைக் காணமுடியும். வசதி படைத்தவர்கள் ‘டார்லிங்’, ‘ஹனி’ என அழைக்கின்றனர். கணவனை மச்சான், அத்தான் என்றும் கூறுவர்.

இன்னும் ஒரு படிமேல் சென்று அன்பின் நிமித்தம் வாடா, போடா, என்னடா, செல்லமே என்றெல்லாம் அழைப்பதையும் இதனை வாசிக்கும் பலரும் கேட்டிருக்கலாம்.
அன்பினை பல வழிகளில் வெளிப்படுத்துகிறோம். பல மனைவிமார்கள் மட்டுமல்ல கணவன்மார்களும் தங்கள் மனைவி வாடா, போடா என செல்லமாக அழைப்பதை விரும்புகின்றனர்.

இந்திய வம்சாவளி மக்களிடையே கணவனை மனைவி, மாமா என அழைப்பதும் உண்டு. சமூகத்திற்கு ஏற்ப மக்களிடையே பெயரிட்டு அழைப்பதும் மாறுபட்டு காணப்படுகிறது.
மன்னி என அண்ணியையும், அத்திம்பேர் எனச் சகோதரியின் கணவனையும் அழைக்கின்ற வழக்கம் பிராமணர்களிடையே காணப்படுகிறது. நாட்டுக் கோட்டை செட்டிமார்கள் வீட்டுத் தலைவியை ஆச்சி எனவும் கோயம்புத்தூர் கவுண்டர்கள் அம்மணி எனவும் அழைக்கின்றனர்.

தமிழகத்தில் வாழும் தெலுங்குத் தமிழர்களாகிய நாயுடுக்களும் நாயக்கர்களும் நயினா, பாவா என்றும் உறவுமுறைப் பெயர்களையும் தங்களது தாய்மொழியாகிய தெலுங்கு மொழியின் எச்சமாக பயன்படுத்துகின்றனர். மேற்கூறிய சான்றுகள் சாதி வழி உறவுமுறைப் பெயர்கள் வேறுபடுவதை நமக்கு உணர்த்துகின்றன. முஸ்லிம் மக்களின் பாவா, வாப்பா என்றும் உறவுமுறை சொற்களுக்கு இணையாக இந்துக்கள் கணவன், அப்பா என்றும் உறவுப் பெயர்களைப் பயன்படுத்துகின்றனர்.

யாழ்ப்பாண சமூகத்திலே முன்பு தந்தையை அப்பு என அழைத்தனர். தாயை ஆச்சி என அழைத்தனர். இன்றும் சில யாழ்ப்பாணத்து குடும்பங்களில் தந்தையை ஐயா என்றும், தாயை அம்மா என்றும் அழைத்தனர். பின் வந்த நாட்களில் அப்பா, அம்மா என அழைத்தனர். இப்போது நாகரிகம் கருதி சிலர் டாடி, மம்மி என அழைக்கின்றனர்.

யாழ்ப்பாண சமூகத்தில் கிராமப்புறங்களில் சித்தப்பா, சின்னம்மா போன்ற பெயர்கள் குஞ்சியப்பு, குஞ்சியாச்சி என அழைக்கப்படுகின்றன. நகர்ப்புறங்களில் நாகரிகம் கருதி சித்தா,சித்தி என அழைக்கின்றனர். அதேபோன்று பெரியப்பா, பெரியம்மா உறவுகள் கிராமப்புறங்களில் பெரி-ஐயா, பெரியம்மா எனவும் பெரியப்பு, பெரியாச்சி எனவும் அழைக்கப்படுகின்றனர்.

உறவுமுறைப் பெயர்கள் சமூக அமைப்பு முறையினையும் பிரதிபலிக்கின்றன. பெண்களுக்கு வயதுக்கு வந்தபின்னர் சமூக மதிப்பு வழங்கப்படுவதை உறவுமுறைப் பெயர்கள் காட்டுகின்றன. தங்கையாக இருந்தாலும் தொட்டுப் பேசுவதையோ வாடி, போடி என அழைப்பதையோ ஆண்கள் தவிர்த்துவிடுகின்றனர்.

தந்தை வயதுக்கு வந்த பெண்ணை தங்கச்சி என்றும் பிள்ளை என்றும் அழைப்பதை காணமுடியும்.

கிறிஸ்தவ சமூக அமைப்பில் ஒருவருக்கு பெற்ற தாய் தந்தையர் போன்று மதந் தொடர்பாக ஞானத்தாய் ஞானத் தந்தை என இருவர் அமைகின்றனர். கிறிஸ்தவர்களிடையே தந்தையை பப்பா என அழைக்கும் முறையும் காணப்படுகிறது.

யாழ்ப்பாணச் சமூகத்திலே தகப்பனின் தாயை பேரப்பிள்ளைகள் அப்பாச்சி என அழைக்கும் வழக்கமும் காணப்படுகிறது. அவ்வாறே அம்மாவின் தாயை அம்மாச்சி எனவும் அழைக்கின்றனர். இன்னும் சில இடங்களில் ஆத்தை எனவும் அழைக்கின்றனர்.
உறவுமுறைப் பெயர்கள் அனைத்தும் பெரும்பாலும் இணையாக காணப்படுகின்றன. கணவன் – மனைவி, மகன் – மகள், தாத்தா - பாட்டி, எனப் பால்வேறுபாட்டு முறையாலும் அக்கா - தங்கை, அண்ணன் - தம்பி, சித்தப்பா - பெரியப்பா என வயது நிலை வேறுபாட்டாலும் இணையாக அமைந்துள்ளன. உறவுமுறை சொற்கள் அனைத்தும் விளக்க சொற்களாகவும் வகைப்பாட்டு சொற்களாகவும் காணப்படுகின்றன.

தமிழ் இலக்கியத்துக்கும் பண்பாட்டுக்கும் வளம் சேர்ப்பதாக உறவுமுறைப் பெயர்கள் காணப்படுகின்றன. இவை தமிழர்களின் பண்பாட்டையும் தனித்துவத்தையும் எடுத்துக் காட்டுபவையாகவுள்ளன.


எழுதியவர்: முருகேசு ரவீந்திரன்
நன்றி: தினகரன் வாரமஞ்சரி, மே 23, 2010

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற