
திருச்சூர் அருகே உள்ள ஒரு மசூதியில் ஐயப்ப பக்தர்கள் தங்குவதற்கு முஸ்லிம்கள் வசதி செய்து கொடுத்து வருவது மத நல்லிணக்கத்திற்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது.
மதம்உலகில் உள்ள அனைத்து மதங்களும் ஒற்றுமை, அன்பு மற்றும் ஒழுக்க நெறிமுறைகளை மட்டுமே போதித்த போதிலும், அந்த மதங்களை பின்பற்றும் சில மனிதர்கள் மட்டும் அப்பாதையில் இருந்து விலகி நடக்கின்றனர்.
இதனாலேயே மதத்தின் பெயரால் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.இந்த சூழ்நிலையில், வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த மனிதர்கள் மதவேறுபாடுகளைக் களைந்து ஒருவருக்கொருவர் அரவணைத்துக் கொள்ளும் பாங்கையும் பல இடங்களில் காண முடிகிறது.
சுவாமி ஐயப்பனை தரிசிக்க செல்பவர்கள் சபரிமலையில் உள்ள வாவர் மசூதிக்குச் சென்று வழிபடுவதும், அந்த மசூதியில் பக்தர்களுக்கு திருநீறு வழங்கப்பட்டு வருவதும் இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு.
இதேபோல், ஐயப்பனுக்கு மாலை அணிந்து சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு, திருச்சூர் அருகே உள்ள சூண்டல் பகுதியில் வாழும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் மசூதியில் தங்க இடம் கொடுத்து, பணிவிடைகள் செய்து வருவது மத நல்லிணக்கத்திற்கு மேலும் ஒரு மணிமகுடம்.
திருச்சூர் அருகே குண்ணங்குளம் ரோட்டில் அமைந்து உள்ளது இந்த சூண்டல் பகுதி. இங்கு முஸ்லிம்களுக்கு சொந்தமான ஜூம்மா மசூதி, தொலைதூர பகுதிகளில் இருந்து வரும் ஐயப்ப பக்தர்கள் ஓய்வு எடுப்பதற்கு வசதியாக எந்நேரமும் திறந்திருக்கிறது.பல்வேறு பகுதிகளில் இருந்து கால்நடையாக, வாகனங்களில் வரும் ஐயப்ப பக்தர்களும் இந்த மசூதியில் இளைப்பாறி விட்டுச் செல்கின்றனர்.
இவர்களுக்கு குடிநீர் வசதி, குழுவாக வருவோர்களுக்கு சமையல் செய்வதற்கு இடவசதி போன்றவற்றை இந்த மசூதியின் நிர்வாகம் செய்து கொடுக்கிறது.